சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்தவர் கவிதா (35) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவருக்கு 14 வயதில் மகள் உள்ளார். இவர்கள் இருவரும் கடந்த 28-ம் தேதி இரவு ஓ.எம்.ஆர் சாலையில் வீட்டுக்குச் செல்ல காத்திருந்தனர். அப்போது அவ்வழியாக காரில் வந்த இரண்டு பேர் கவிதாவின் அருகில் காரை நிறுத்தி, `இந்த நேரத்தில் தனியாக நிற்கிறீர்களே, எங்குச் செல்ல வேண்டும்?’ என்று விசாரித்திருக்கின்றனர். அப்போது கவிதா வீட்டுக்குச் செல்ல ஆட்டோ அல்லது பஸ்சுக்காக காத்திருப்பதாகக் கூறியிருக்கிறார்.
இதையடுத்து அந்த டிரைவர், `நாங்களும் கண்ணகி நகர் வழியாகத்தான் செல்கிறோம். அங்கு உங்களை இறக்கிவிட்டுச் செல்கிறோம் என்று கூறினார். அதை நம்பி கவிதாவும் அவரின் மகளும் காரில் ஏறினர். கார் சிறிது தூரம் சென்ற பிறகு திடீரென கவிதாவுக்கும் அவரின் மகளுக்கும் காரில் இருந்தவர்கள் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது. ஓடும் காரில் இந்தச் சம்பவம் நடந்ததால் கவிதாவும் அவரின் மகளும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் இருவரும் தங்களை காரிலிருந்து இறக்கி விடும்படிக் கூறினர். ஆனால் கார் நிறுத்தப்படவில்லை.
Also Read: சென்னை: அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை - உதவிப் பேராசிரியர் மீது நடவடிக்கை
இந்தநிலையில் கவிதா, செல்போன் மூலம் தன்னுடைய கணவருக்கு தகவல் தெரிவித்தார். அந்தத் தகவலை வைத்து, கவிதாவின் கணவர் அந்தக் காரை சிலரது உதவியுடன் கண்ணகி நகர் பகுதியில் வழிமறித்தார். பின்னர், காரிலிருந்தவர்களை பிடித்து கண்ணகி நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவர்களிடம் போலீஸார் விசாரித்தனர். இதற்கிடையில் தனக்கும் மகளுக்கும் நடந்த கொடுமை குறித்து கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கவிதா புகாரளித்திருக்கிறார். அதனால் கண்ணகி நகர் போலீஸார் இருவரையும் கிண்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
போலீஸார் விசாரணை நடத்தியதில் ஓடும் காரில் பெண்ணுக்கும் அவரின் மகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் சிவகங்கை மாவட்டம், சிங்கனேரி தாலுகா, லேத் தெருவைச் சேர்ந்த சங்கர் (31), சென்னை துரைப்பாக்கம் பாண்டியன் சாலையைச் சேர்ந்த மனோஜ் (24 ) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து காரையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
ஓடும் காரில் தாய், மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம், மாநகரில் பெண்கள் பாதுகாப்பு குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
source https://www.vikatan.com/news/crime/chennai-mother-and-daughter-sexually-harassed-in-car-omr
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக