Ad

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

'ஜகமே தந்திரம்' ரிலீஸ் பிரச்னை... ஓடி ஒளிகிறாரா தயாரிப்பாளர் 'Y Not' சஷிகாந்த்?!

தனுஷின் 'ஜகமே தந்திரம்' ரிலீஸ் குறித்த பஞ்சாயத்து நல்லபடியாக முடியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அது இன்னும் பெரிதாகிக்கொண்டே போகிறது.

சஷிகாந்த் என்பவர் நடத்திவரும் சினிமா தயாரிப்பு நிறுவனம் Y Not Studios. அடிப்படையில் ஆர்க்கிடெக்ட்டான சஷிகாந்த் சினிமா மீதிருந்த ஆர்வத்தால் சினிமா தயாரிப்பில் இறங்கினார். இவர் தயாரித்த முதல் படம் தமிழ்ப்படங்களை கலாய்த்து வெளியான 'தமிழ்ப்படம்'. 'காதலில் சொதப்புவது எப்படி?', 'இறுதிச்சுற்று', 'விக்ரம் வேதா' எனப்பல முக்கியமானப் படங்களை சஷிகாந்த்தின் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்நிறுவனத்தின் 10-வது ஆண்டை கொண்டாடும் விதமாக பெரிய பட்ஜெட்டில் தனுஷைக் கதாநாயகனாகக் கொண்டு 2019-ல் தொடங்கப்பட்ட படம்தான் 'ஜகமே தந்திரம்'. கார்த்திக் சுப்பராஜ் இயக்க, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இப்படத்தில் முக்கியமான நடிகர்கள் பலரும் நடித்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படமாக்கப்பட்டிருக்கும் இப்படத்தை கடந்த ஆண்டு மே 1-ம் தேதி ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.

ஆனால், மார்ச்சில் லாக்டெளன் அறிவிக்கப்பட, போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளும் முடியாமல் பட வேலைகள் அப்படியே நிறுத்தப்பட்டது. ஜூலையில் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தொடங்கி மொத்தமாக முடிக்கப்பட்டது. நெட்ஃபிளிக்ஸுக்குப் படத்தை விற்றுவிட்டாலும் முதலில் தியேட்டரில்தான் ரிலீஸ் ஆகும் என்று தொடர்ந்து தயாரிப்பு தரப்பு சொல்லிவந்தது.

ஜகமே தந்திரம்

இறுதியாக பிப்ரவரி 12-ம் தேதி படம் தியேட்டரில் ரிலீஸ் என தேதியும் குறிக்கப்பட்டது. இதற்கிடையில் திடீரென நேரடியாக ஓடிடி-யில் ரிலீஸ் என செய்திகள் கசிய தனுஷ், கார்த்திக் சுப்பராஜ் உள்பட படக்குழுவினர் எல்லோருமே அப்செட். கடுமையான எதிர்ப்புகள் வர தயாரிப்பாளர் தரப்பில் இருந்து ஓடிடி, தியேட்டர் என இரண்டிலும் ஒரேநாளில் ரிலீஸ் செய்யலாம் என்கிற திட்டம் முன்வைக்கப்பட்டது. ஆனால், இதற்குத் தியேட்டர் தரப்பு எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறது.

தனுஷும் ''தியேட்டரில் படம் ரிலீஸாவதைத்தான் நான் விரும்புகிறேன்'' என வெளிப்படையாகவே ட்வீட் செய்திருக்கிறார். இந்நிலையில் முடிவை சொல்லவேண்டிய தயாரிப்பாளர் சஷிகாந்த் சில நாட்களாக அவுட் ஆஃப் ரீச்சில் இருக்கிறார் என்கிறார்கள். அவரது போன் ஸ்விட்ச் ஆஃபில் இருப்பதோடு, 'ஜகமே தந்திரம்' படம் தொடர்பான யாருடனும் அவர் தொடர்பில் இல்லை என்கிறார்கள். அவர் எங்கிருக்கிறார் என்றே கண்டுபிடிக்கமுடியவில்லை என்கிறார்கள். ''பேசி தீர்க்காமல், முடிவை சொல்லாமல், இப்படி ஓடி ஒளிவது நியாயமா'' என்கிறது தனுஷ் தரப்பு.

'ஜகமே தந்திரம்' ரிலீஸ் சஸ்பென்ஸ் தொடர்கிறது!



source https://cinema.vikatan.com/tamil-cinema/jagame-thandhiram-producer-sashikanth-is-out-of-reach-to-dhanush

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக