சமபலமற்ற எதிரியைச் சாய்ப்பதில் என்ன பெருமை இருந்துவிடப் போகிறது... 1/1 என்றிருக்கும் தருணத்தில், விட்டுக் கொடுக்காது போராடி, பகைவனை முட்டி வீழ்த்துவதில்தானே, சுவாரஸ்யமே அடங்கி இருக்கிறது. சென்னையில் நடைபெற்ற இந்தியா - இங்கிலாந்து பெரும்யுத்தத்தின் இரண்டாவது பகுதி, அஹமதாபாத்தில் இன்று தொடங்குகிறது. மாற்றியமைக்கப்பட்டிருக்கும் மொட்டேரா மைதானத்தில் முதல் சர்வதேசப் போட்டி, பகலிரவு டெஸ்ட் போட்டி, இஷாந்த்தின் 100-வது போட்டி என பல சிறப்பம்சங்கள் இந்தப் போட்டிக்கு இருந்தாலும், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கான தங்கக் கடவுச்சீட்டு இது என்பதே, போட்டியின் மீதான எதிர்பார்ப்பைத் தூண்டச் செய்வதற்குப் போதுமான ஒற்றை விஷயமாய் இருக்கிறது.
மொட்டேரா மைதானம்!
700 கோடி ரூபாய் சீரமைப்புக்குப்பின், சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானம் என்ற பெயர், மொட்டேரா மைதானமாக மாற்றப்பட, புதுப்பொலிவு பெற்றிருக்கிறது அஹமதாபாத். மெல்போர்னை பின்னுக்குத் தள்ளி மிகப்பெரிய மைதானம் என்னும் மகுடத்தை சுமக்கும் இந்த மைதானத்தில் 1,10,000 பேர் அமர்ந்து போட்டிகளைப் பார்க்க முடியும். புதுப்பிக்கப்பட்ட பிறகு, இங்கு நடைபெறப் போகும் முதல் சர்வதேசப் போட்டி, அதுவும் பகலிரவு டெஸ்ட் போட்டி இது என்பதால், கூடுதல் சிறப்பிற்குரியதாகப் பார்க்கப்படுகிறது. அடுத்த இரண்டு டெஸ்ட்கள், வரிசையாய் ஐந்து டி20 போட்டிகள் என அடுத்துவரும் ஏழு போட்டிகளைச் சந்திக்க, கோலாகலமாகத் தயாராகி வருகிறது, மொட்டேரா.
பிங்க் பால் டெஸ்ட்!
இந்தியாவும் இங்கிலாந்தும் இதுவரை அதிக பிங்க் பால் டெஸ்ட்களில் விளையாடிய அனுபவம் இல்லாத அணிகள். இந்தியா இரண்டில் விளையாடி, ஒன்றில் தோற்று, ஒன்றில் ஜெயித்திருக்கிறது, இங்கிலாந்தோ, மூன்றில் விளையாடி, இரண்டில் வீழ்ந்து, ஒன்றில் வென்றிருக்கிறது. கடைசியாக இங்கிலாந்து விளையாடிய பிங்க்பால் டெஸ்ட் 2018-ல் நியூஸிலாந்தில் நடந்தது. இந்த டெஸ்ட்டில் முதல் இன்னிங்ஸில் 58 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது இங்கிலாந்து. அதேப்போல் இந்தியா விளையாடிய கடைசி டெஸ்ட் கடந்த ஆண்டு டிசம்பரில் ஆஸ்திரேலியாவில் நடந்தது. இந்தியா அதில் 36 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதனால் இந்த பிங்க்பால் டெஸ்ட் இரண்டு அணிகளுக்குமே கொஞ்சம் கலகக்கமாகவே இருக்கும். இதுவரை உலக கிரிக்கெட் வரலாற்றில் நடைபெற்றுள்ள, பிங்க் டெஸ்ட் போட்டிகளில், எதுவுமே டிராவில் முடிவடையவில்லை என்பதும் ஒரு சுவாரஸ்யமான தகவல்.
சுழலா வேகமா எது எடுபடும்?!
பொதுவாக, பகலிரவு பிங்க் பால் டெஸ்டில், ஆடுகளம், வேகப் பந்து வீச்சாளர்களுக்கே சாதகமானதாக இருக்கும். இதுவரை நடந்துள்ள 15 சர்வதேச பிங்க்பால் போட்டிகளில், 354 விக்கெட்டுகளை வேகப்பந்து வீச்சாளர்கள் வீழ்த்தியிருக்க, 115 விக்கெட்டுகளை மட்டுமே சுழல் படை சுருட்டியுள்ளது. ஆனால், அஹமதாபாத் போட்டியில், ஸ்பின்னர்களுக்கு சாதகமாக அது அமைந்திருக்கவே வாய்ப்புகள் அதிகம். ஜேம்ஸ் ஆண்டர்சன், "இப்போதைக்கு பிட்சில் புற்கள் காணப்பட்டாலும், போட்டி நடைபெறும் தினத்தன்று, அது எப்படி இருக்கும் என்று தெரியவில்லை" என பொடிவைத்துப் பேசி இருந்தார். ரோஹித்தோ, சென்னை டெஸ்டைத் தொடர்ந்து, "விளையாடிய, எந்த வெளிநாட்டுப் போட்டியிலும், நாங்கள் களத்தைப் பற்றிக் குறை கூறியதில்லை. பிட்சைப் பற்றிப் பேசாதீர்கள், கிரிக்கெட்டைப் பற்றிப் பேசுங்கள்!" என்று கூறி, விமர்சனங்களுக்கு முற்றுப் புள்ளி வைக்க முயன்றிருந்தார். எனினும், இன்னமும், 'பிட்ச்' பற்றிய விவாதங்களுக்கு முடிவுரை எழுதப்படவில்லை. இச்சமயத்தில், இந்த அஹமதாபாத் களமும், கிட்டத்தட்ட சேப்பாக்கத்தை ஒத்ததாகவே இருக்கும் என்ற கருத்தே பல கிரிக்கெட் ஆர்வலர்களால் முன்வைக்கப்படுகிறது.
எஸ்ஜி பந்துகள்!
பகலிரவு டெஸ்டுக்கான பிங்க்பால் எஸ்ஜியால், பிரத்யேகமாக வடிவமைக்கப்படுகிறது. மெழுகு பூச்சு தரப்படும், ரெட்பால்களைப் போலில்லாது, லாக்குர் பூச்சு அளிக்கப்படும் பந்துகள், பேட்ஸ்மேன்களுக்கு, பந்து வருவதைக் கணிப்பதில் சிரமமேற்படுத்துகிறது என்று ஏற்கனவே கூறப்பட்டு வந்தது. இதுவே இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான பகலிரவு டெஸ்டில், நான்கு பேட்ஸ்மேன்கள் வரை பவுன்சர்களால் தாக்கப்பட்டதற்கும், இரண்டு வீரர்கள் கன்கஷன் காயத்தால் வெளியேறியதற்கும், காரணமாகக் கூறப்பட்டது. குறிப்பாக, இரவு நேரத்தில், இதை எதிர்கொள்ள, பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் திணறலாம் என்பது ஃபீல்டிங் செய்யும் அணிக்கு கூடுதல் பலம் என்றாலும், பந்துகளைக் கேட்ச் பிடிப்பதும், அத்தகைய சூழலில் சவாலாக இருக்கும் என்பதால், இரண்டு பக்கத்திற்கும் சாதகமான அம்சங்களும் பாதகமான அம்சங்களும் கிட்டத்தட்ட சரிசமமாகவே காணப்படுகின்றன. மேலும், 'டியூ ஃபேக்டர்' எனச் சொல்லப்படும் பனிப்பொழிவு ஏற்படும் பட்சத்தில், அது பந்தின் கடினத்தன்மையைக் கேள்விக்குறியாக்கும் என்பதால், அது பேட்ஸ்மேன்களுக்கு, கூடுதல் பலமாக அமையும்.
இந்திய பேட்டிங் படை!
317 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்துள்ள, இந்தியாவின் பேட்டிங் லைன்அப்பில், பெரும்பாலும் எந்த மாறுதலும் இருக்கப் போவதில்லை. ஸ்பின் பௌலிங்கை லாவகமாகக் கையாண்ட ரோஹித்திலிருந்தது, சென்ற போட்டியில் சதமடித்து சாதித்த அஷ்வின் வரையிலும், ஏன் அதற்கடுத்ததாக இறங்கும் அக்ஸர் வரை, பேட்டிங் பலம் பொருந்தியவர்களாகவே காணப்படுகிறார்கள். எனினும், கோலியின் சதமென்னும் சம்பவம்தானே, டெஸ்ட் தொடரின் உச்சகட்டமே! கடந்த 34 இன்னிங்ஸ்களாக கோலி சென்சுரி அடிக்கவேயில்லை. சில போட்டிகளாய், மில்லிமீட்டர் இடைவெளியில் அதைத் தொடத்தவறும் கோலி, இந்தப் போட்டியிலாவது சதமடித்து, அந்தக் கண்கொள்ளாக் காட்சியை ரசிகர்களுக்கு விருந்தாய் வைப்பார் என நம்பலாம்.
இந்திய பௌலிங் அட்டாக்!
இந்தியா, இந்தப் போட்டியில், மூன்று முக்கிய ஸ்பின்னர்கள் சூத்திரத்தை, சுற்றி ஓரங்கட்டி விட்டு, மூன்று வேகப்பந்து வீச்சாளர்கள் சமன்பாட்டைக் கையிலெடுக்க வாய்ப்புள்ளது. அப்படி இருக்கும் பட்சத்தில், 17 விக்கெட்களுடன், தொடரில் தற்போதைக்கு அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் என்ற பெருமையுடன் வலம்வரும் அஷ்வினும், அறிமுகப் போட்டியிலேயே, ஐந்து விக்கெட் ஹால் எடுத்து அசத்திய அக்ஸரும் தவிர்க்க முடியாதவர்களாகி விட, குல்தீப்புக்குத்தான் வழியனுப்புப்படலம் நடத்த வேண்டிய நிலை ஏற்படும். ஓய்வுக்குப்பின் திரும்பியுள்ள பும்ராவுக்கும், காயத்திலிருந்து திரும்பி இருக்கும் உமேஷுக்கு வழிவிட்டு, குல்தீப்பும் சிராஜும் வெளியேறலாம். இந்தப் போட்டி இஷாந்த்தின் 100-வது டெஸ்ட் போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதான் இந்தியாவின் பிளேயிங் லெவனாக இருக்கலாம் என கிட்டத்தட்ட உறுதிப்படுத்தப்பட்டாலும், 'கடைசி நேர மாறுதலுக்குட்பட்டதாக' எதுவும் நடக்கலாம் என்ற சந்தேகத்தை எழ வைக்கின்றனர் சென்னையில், பிங்க்பாலோடு பயிற்சியில் ஈடுபட்ட பாண்டியாவும், சுந்தரும்.
இங்கிலாந்தின் பேட்டிங்!
கிராவ்லி மற்றும் பேர்ஸ்டோவின் வருகையால், பர்ன்ஸ் மற்றும் லாரன்ஸ் வெளியேற உள்ளனர். இவர்களது வரவு, அணிக்கான நேர்மறைப் புள்ளிகளை கணக்கில் ஏற்றிக் கொள்ள உதவியுள்ளது.
இங்கிலாந்தின் பௌலிங்!
சுழற்சி முறையில் வீரர்களைப் பயன்படுத்தும் இங்கிலாந்தின் திட்டத்தால், சென்ற போட்டியில் வெளியே உட்கார வைக்கப்பட்ட ஆன்டர்சன் திரும்பவும் உள்ளே வருகிறார். காயத்திலிருந்து திரும்பி இருக்கும் ஆர்ச்சரும் இணைய இங்கிலாந்து மேலும் தங்களது வலுவை ஏற்றிக் கொண்டுள்ளது.
இஷாந்த் சர்மா குறிப்பிட்டுள்ளதைப் போல, உலகக் கோப்பைக்கு இணையானதுதான், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பை வெல்வதுவும். எனவே அதற்கான இந்த ஓட்டத்தில் இந்தியா, இந்தப் போட்டியின் மூலம், தன்னை முன்னிலைப்படுத்திக் கொள்ளவே முனையும். அதேப்போல, இங்கிலாந்தும் அவ்வளவு சீக்கிரம் விட்டுக் கொடுத்து விடாதென்பதால், போட்டியில் பரபரப்பின் நெடி, சற்று அதிகமாகவே இருக்கும்.
இந்தியா இங்கிலாந்து பெரும்யுத்தத்தின், இரண்டாவது பகுதி, இன்று இனிதே தொடங்குகிறது. எதிர்பார்ப்புகளுடன் காத்திருப்போம்!
source https://sports.vikatan.com/cricket/india-vs-england-pink-ball-test-at-motera-stadium-preview
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக