Ad

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிடப்போகும் அ.தி.மு.க வேட்பாளர் யார்?

தேர்தல் களத்தில் வி.ஐ.பி-க்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு எப்போதும் தனி மவுசு உண்டு. தமிழகத்தில், கடந்த சட்டமன்றத் தேர்தலில், தி.மு.க தலைவர் கருணாநிதி, மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மு.க.ஸ்டாலின், துரைமுருகன், விஜயகாந்த், ஓ.பன்னீர்செல்வம், திருமாவளவன், அன்புமணி ராமதாஸ், ஹெச்.ராஜா, வானதி சீனிவாசன், சீமான், விஜயதரணி, வசந்தகுமார் ஆகியோர் போட்டியிட்ட தொகுதிகள் வி.ஐ.பி தொகுதிகளாக இருந்தன.

வி.ஐ.பி

வருகின்ற தேர்தலில், மேற்கண்டவர்களில், மறைந்தவர்கள் தவிர மற்றவர்கள் போட்டியிடும் தொகுதிகள் வி.ஐ.பி தொகுதிகளாக இருக்கும். கூடுதலாக முதல்வர் போட்டியிடும் எடப்பாடி தொகுதியும் இந்தமுறை வி.ஐ.பி தொகுதிப் பட்டியலில் சேர்ந்திருக்கிறது. தவிர, தி.மு.க-வின் இளைஞரணிச் செயலாளர், உதயநிதி போட்டியிட்டால் அந்தத் தொகுதியும் வி.ஐ.பி தொகுதியாகவே பார்க்கப்படும். தவிர, சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களமிறங்கியிருக்கும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல், பா.ஜ.க-வில் இணைந்துள்ள குஷ்பு போன்ற திரை நட்சத்திரங்கள் போட்டியிடும் தொகுதிகள் வி.ஐ.பி தொகுதிகளாக இருக்கும்.

Also Read: நாம் தமிழர் இன்; தே.மு.தி.க அவுட்... அ.தி.மு.க கூட்டணியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு சீட்டு?

அந்தவகையில், அ.தி.மு.க மற்றும் அதன் கூட்டணியிலுள்ள கட்சிகளின் தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகள் என நம்பத்தகுந்த வட்டாரத்திலிருந்து சில தகவல்கள் கிடைத்துள்ளன.

கோகுல இந்திரா அ.தி.மு.க

அதன்படி. முதல்வர் பழனிசாமி எடப்பாடி தொகுதியிலும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கம்பம் தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டால், அவரை எதிர்த்து முன்னாள் அமைச்சர் கோகுல இந்திராவும், உதயநிதி ஆயிரம் விளக்கு தொகுதியில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து முன்னாள் அமைச்சர் வளர்மதியும் போட்டியிடுகின்றனர். அதேபோல, ஆவடி தொகுதியில் கடந்த முறை போட்டியிட்டு வெற்றிபெற்ற அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் இந்தமுறை விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகிறார். அதேபோல., தே.மு.தி.க பொருளாளர் பிரேமலதா ஆம்பூர் தொகுதியிலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஒரு தொகுதியில் சுதீஷும் போட்டியிடுகின்றனர். பா.ஜ.க-வில் ஹெச்.ராஜா, தி.நகர் தொகுதியிலும், குஷ்பு திருவல்லிக்கேணி தொகுதியிலும், கௌதமி ராஜபாளையம் தொகுதியிலும் போட்டியிட வாய்ப்பு உண்டு. அதேபோல, அன்புமணி ராமதாஸ் இந்தமுறையும் பென்னாகரம் தொகுதியில்தான் போட்டியிடுகிறார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/aiadmk-candidate-to-contest-against-mk-stalin

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக