வெள்ள காலங்களில் காவிரி, கொள்ளிடம் ஆறுகளிலிருந்து வெளியேறும் உபரி நீர் கடலில் வீணாகக் கலக்கிறது. இதனைக் கால்வாய் மூலம் கரூரிலிருந்து- புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களுக்குக் கொண்டுவரும் திட்டம் தான் காவிரி- வைகை- குண்டாறு இணைப்புத் திட்டம்.காவிரி நீர் இந்த வறண்ட பகுதிகளில் அமைக்கப்படும் கால்வாய் மூலம் குண்டாற்றுடன் இணைக்கப்படும். இதன் மூலம் லட்சக்கணக்கான விவசாயிகள் பயன்பெறும் நிலை உருவாகு. சுமார் 100ஆண்டுக்கால விவசாயிகளின் கனவுத் திட்டமான இந்தத் திட்டத்தைத் திட்ட மதிப்பீடு செய்து அப்போதைய முதல்வர் காமராஜ் நிறைவேற்ற முயன்றும் முடியாமல் போனது.
இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தித் தொடர்ந்து விவசாயிகள் வலியுறுத்தி வந்த நிலையில், கடந்த வருடம் இந்தத் திட்டத்தை ரூ.14,000 கோடி செலவில் செயல்படுத்தப்போவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். முதற்கட்டமாக ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டது. தொடர்ந்து, நிலம் கையகப்படுத்தும் பணி நடந்தது. இந்த நிலையில், விராலி மலை அருகே குன்னத்தூரில் முதல்கட்டமாக ரூ.6,941 கோடி மதிப்பில் தெற்கு வெள்ளாறு-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கான பூமி பூஜை மற்றும் இதன் ரூ.3,384 கோடி மதிப்பில் புதுப்பித்தல், நவீனப்படுத்தல் திட்டத்தின் கீழ் காவிரி உப வடி நிலத்தில் உள்ள நீர்ப் பாசன உள்கட்டமைப்புகளைப் புனரமைக்கும் முதல்கட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு இதனைத் தொடங்கி வைத்தனர்.
திட்டத்தைத் தொடங்கி வைத்துப் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ``எத்தனையோ அரசு விழாக்களுக்குச் சென்று இருக்கிறேன். அதையெல்லாம் விட இன்றைய நாள், என் வாழ்நாளின் பொன்னாள் என்று உணர்கிறேன். காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டத்தைத் துவங்கி வைப்பதன் மூலம் வாழ்நாளில் நான் பிறவிப் பயனை அடைந்திருக்கிறேன் என்று எண்ணுகிற அளவுக்கு மகிழ்ச்சியான நாளாக அமைந்துவிட்டது. நீர் மேலாண்மையில் தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. 2019-20-ல் நீர் மேலாண்மையில் சிறந்த மாநிலம் என்ற தேசிய விருதையும் நாம் பெற்றிருக்கிறோம். ஒரு சொட்டு நீரைக் கூட வீணாக்காமல் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் நம்முடைய அரசின் நோக்கம்.
அந்த வகையில்தான், குடிமாரமத்து திட்டத்தின்கீழ் பல ஆண்டுகளாகத் தூர்வாரப்படாமல் இருந்த ஏரிகள், குளங்கள், ஊரணிகள் ஆகியவற்றை விவசாயிகளின் ஒத்துழைப்போடு தூர்வாரியுள்ளோம். உள்ளாட்சித் துறை மூலமும் சிறிய ஏரிகள், குளங்கள் தூர்வாரப்பட்டு மழை நீர் சேமிக்கப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் உயர்கிறது. விவசாயிகள் 100ஆண்டுகாலமாக எதிர் நோக்கி இருந்த இந்தத்திட்டத்தை தற்போது தொடங்கி வைத்திருக்கிறோம். எனக்குத் தெரிந்தவரை ரூ.14,400 கோடி மதிப்பீட்டில் பொதுப்பணித்துறையில் எந்தத் திட்டமும் நிறைவேற்றப்படவில்லை. இதுதான் முதன்முறை. காவிரி-வைகை-குண்டாறு இணைப்புத் திட்டம் நிறைவேற்றப்பட்டால், கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உட்பட 7 மாவட்ட விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறுவார்கள்.
நீங்கள் வைத்த எந்தக் கோரிக்கையையாவது மத்திய அரசு ஏற்றிருக்கிறதா? என்று எதிர்க்கட்சித் தலைவர் திரு.ஸ்டாலின் கேட்கிறார். நாங்கள் வைத்த கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்றிருக்கிறது. நடந்தாய் வாழி காவேரி என்ற அற்புதமான திட்டத்தை எங்களுடைய அரசு செயல்படுத்தும் போது, நதி சுத்தம் செய்யப்பட்டு தூய்மையான குடிநீர் கடைக்கோடியில் இருக்கும் மக்களிடம் சென்று சேரும். இந்தத்திட்டத்தையும் நிறைவேற்றுவோம். அதோடு, கோதாவரி-காவிரி திட்டத்தையும் நிறைவேற்றுவோம். காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணைக் கட்டிக்கொண்டிருக்கிறோம். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரிடம் தொடக்க விழாவுக்கான பணியைக் கொடுத்தேன். அதனைச் சிறப்பாகச் செயல்படுத்திவிட்டார். அம்மாவின் ஆட்சியில் புதுக்கோட்டை மாவட்டம் பல்வேறு வளர்ச்சி கண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் ஏழை எளிய மக்கள் நிறைந்த பகுதிகளில் 2,000 அம்மா மினி கிளினிக்குகளை துவங்கி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளோம்.
வேளாண் மக்களின் துயரங்களை, வேதனைகளைத் துடைக்கும் அரசாக அம்மாவின் அரசு விவசாயிகள் கூட்டுறவுச் சங்கங்களில் வாங்கிய பயிர்க் கடன்களை ரத்து செய்திருக்கிறது. மத்திய அரசின் உதவியோடு டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்தோம். ஹைட்ரோ கார்பன் திட்டம் வருவதற்குப் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டவர் திரு.ஸ்டாலின்தான். இந்தத் திட்டத்தைக் கொண்டு வந்து அறிமுகப்படுத்தியது தி.மு.க. ஆனால், அதனை ரத்து செய்தது அம்மாவின் அரசு. தமிழகம் முழுவதும் அரசைக் குறை கூறுவதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள திரு.ஸ்டாலின் திட்டமிட்டு அவதூறு பிரச்சாரத்தைப் பரப்பி வருகிறார். நாங்கள் செய்த திட்டங்களை உங்களிடத்தில் கூறுகிறேன். எங்காவது திரு.ஸ்டாலின் தி.மு.க ஆட்சிக்காலத்தில் செய்த திட்டங்களைக் குறிப்பிடுகிறா? நாங்கள் சொல்வதை எல்லாம் செயல்படுத்தியுள்ளோம். செயல்படுத்திக் கொண்டே வருகிறோம்" என்றார்.
source https://www.vikatan.com/government-and-politics/politics/cm-eps-speech-in-pudukottai-government-function
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக