Ad

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

`இப்போதுதான் காவிரி - குண்டாறு திட்டம் நினைவுக்கு வருகிறதா?’ - கே.எஸ்.அழகிரி கேள்வி

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வரும் 27, 28 மற்றும் மார்ச் 1 ஆகிய மூன்று நாள்கள் தமிழகத்தின் தென் மாவட்டங்களில் தேர்தல் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அடுத்த மாதம் 1-ம் தேதி ராகுல் காந்தி கன்னியாகுமரி வருகிறார் அவருக்கு அளிக்கப்பட வேண்டிய வரவேற்பு மற்றும் நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நாகர்கோவிலில் நடந்தது. இதில், தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டார். அப்போது கே.எஸ். அழகிரி செய்தியாளர்களிடம் கூறுகையில், ``பெட்ரோல், டீசல் விலை ஏற்றத்தைக் குறைக்க எந்தத் திட்டமும் மத்திய மோடி அரசிடம் இல்லை. மோடிக்கு  52 இன்ச் மார்பு இருக்கலாமே தவிர மக்களின் பொருளாதாரத்தை சிந்திக்கக் கூடிய ஆற்றல்  கிடையாது. பிரதமர் மோடி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை ஒரு புதிய பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறார். ஒரு பிரச்சினையையும் தீர்க்க இயலாத அரசாக மத்திய அரசு தோல்வி அடைந்துள்ளது.

காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

தமிழகத்தில் சிறுபான்மை மக்களின் போராட்டங்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு, இப்போது அனைத்தும் வாபஸ் பெற்றுவிட்டதால் சிறுபான்மையினரின் வாக்கு அ.தி.மு.க-வுக்குக் கிடைக்காது. வழக்கு வாபஸ் அறிவிப்பு வேடிக்கையாக உள்ளது. எடப்பாடியின் இந்த அறிவிப்பை காங்கிரஸ் கடுமையாக கண்டிக்கிறது. ஐந்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்தவர்களுக்கு இப்போதுதான் காவிரி - குண்டாறு திட்டம் நினைவுக்கு வருகிறதா? மதுரை எய்ம்ஸ்க்கு நாட்டிய அடிக்கலை காணவில்லை. அதுபோலதான் இதுவும் இருக்கப் போகிறது. இந்த திட்டம் தேர்தலுக்காக அறிவித்தது என்பதை மக்கள் புரிந்துகொள்வார்கள்.

Also Read: `விவசாயிகள் போராட்டத்துக்குக் காரணம் அரசியல் அல்ல; சட்டங்கள்தான்!’ - கே.எஸ்.அழகிரி

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி இவ்வளவு நாள்கள் ஆகியும் இந்த அரசால் இரண்டாவது கல்லைக் கூட எடுத்து வைக்க முடியவில்லை. இது அ.தி.மு.க. அரசின் தோல்விக்கான சான்று. பணமதிப்பிழப்பு திட்டத்தைக் கொண்டு வந்ததால் அது வெற்றி அடையவில்லை. வெற்றியடைவில்லை என்பதை மோடி நாடாளுமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். கமல் மற்றும் ரஜினி ஆகியோர் நண்பர்கள். அவர்கள் சந்திப்பது அரசியலில் தாக்கத்தையும்  ஏற்படுத்தாது. தற்போதைய அரசு தனியார் நிறுவனங்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை கொண்டுவருகிறது. இதற்கு பி.எஸ்.என்.எல். ஓர் உதாரணம். பி.எஸ்.என்.எல் நிறுவனத்தின் காலை முறித்து ஜியோவுக்குக் கொடுத்துள்ளார்கள்.

கே.எஸ்.அழகிரி

தமிழக காங்கிரஸ் செயற்குழு 24-ம் தேதி கூடுகிறது அதன்பிறகு தேர்தலில் போட்டியிடும் தொகுதிகள் குறித்து முடிவெடுப்போம். தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் புதிய கட்சிகள் இடம்பெற வாய்ப்பு இல்லை.

எங்கள் அணியில் கூட்டணிகள் இறுதி செய்யப்பட்டு விட்டன. தமிழக சட்டமன்றத்தில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு காங்கிரஸில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு அளிக்கப்படும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் புதிய வேட்பாளர்களும் இடம்பெறுவார்கள். தென்னிந்தியாவில் பா.ஜ.க-வால் ஒருபோதும் காலூன்ற முடியாது’’ என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/ks-alagiri-slams-state-central-governments-in-nagercoil-press-meet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக