அனல் பறக்கும் தேர்தல் பிரசார களத்தில், அரசியல்வாதிகளின் உளறல்கள் தொடர்கதையாகிவிட்டன. அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் என, எந்த கட்சியை எடுத்தாலும் உளறல் மற்றும் சர்ச்சை பேச்சுகளை தினமும் காண முடிகிறது. குறிப்பாக அ.தி.மு.க-வில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி ஆகியோர் மைக்கை பிடித்தாலே மீம கண்டெண்ட்கள் தயாராகிவிடுகின்றன. இவ்வளவு ஏன் “ வரும் தேர்தலில் தி.மு.க ஆட்சி அமைக்கும்” என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியே பிரசாரத்தில் பேசினார் என்றால் பாருங்களேன். அந்த வரிசையில் சிவகங்கை மாவட்டத்தில் அமைச்சர் ஜி.பாஸ்கரனின் உளறயிருக்கிறார்.
கதர் மற்றும் கிராமிய தொழில்கள் வாரியத்துறை அமைச்சரான ஜி.பாஸ்கரன், கொடுக்கும் பேட்டிகள் மற்றும் மேடைப்பேச்சுகள் எல்லாமே சர்ச்சை ரகம். கடந்த சில நாட்களுக்கு முன் திருப்பத்தூர் பகுதிக்கு பரப்புரை செய்ய வந்த மு.க.ஸ்டாலின் அமைச்சர் ஜி.பாஸ்கரனை கடுமையாக சாடினார். செல்லூர் ராஜூ, ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் லிஸ்டில் பாஸ்கரனும் வர முயற்சிக்கிறார் என்றார்.
அப்படிப்பட்ட டிராக் ரெக்கார்டு கொண்ட அமைச்சர் மீண்டும் ஒரு சர்ச்சை பேட்டி கொடுத்துள்ளார். சிவகங்கைக்கு முதல்வர், கழிவு நீரைக் கொண்டு வர ஆர்வமாக இருக்கிறார் என்று அவர் கூறியதே சர்ச்சைக்கு காரணம்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ” ஸ்டாலின் முதல்வரான பிறகுதான் திட்டங்களை செயல்படுத்துவேன் என்கிறார். ஆனால் முதல்வர் திட்டங்கள் அனைத்தையும் தற்போதே உடனுக்குடன் செயல்படுத்தி வருகிறார். பெட்ரோல், டீசல் விலை உயர்வு எல்லாம் மத்திய அரசு பிரச்னை. கண்டனூர் கதர்கிராம மையம் கொரோனாவால் மூடப்பட்டிருந்தது. தற்போது அது செயல்படுத்தப்படும்” என்றார்.
தொடர்ந்து அவர் பேசிய போது “ காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டத்தின் மூலம், ’கழிவு’ நீரை சிவகங்கை மக்களுக்கு கொண்டு வர முதல்வர் ஆர்வமாக இருக்கிறார்.” என தெரிவித்தார். குடிநீர் பிரச்னையை தீர்க்க ’உபரிநீரை’ கொண்டு வருவோம் என்பதற்கு பதில் கழிவு நீரைக் கொண்டு வருவோம் என்று கூறியதும், அவருடனிருந்து கட்சியினரே சற்று ஆடித்தான் போயினர்.
source https://www.vikatan.com/news/politics/minister-baskaran-speech-regarding-chief-minister-created-controversy
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக