Ad

வியாழன், 18 பிப்ரவரி, 2021

மும்பை: எரிபொருள் விலை உயர்வு; குரல் கொடுக்காத அமிதாப், அக்‌ஷய்! - எச்சரிக்கும் காங்கிரஸ்

மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சிக்கு சமீபத்தில் புதிய தலைவராக நானா படோலே நியமிக்கப்பட்டார். அவர் தனது சொந்த மாவட்டமான பண்டாராவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வுக்கு எதிராக நடந்த மாட்டுவண்டி மற்றும் டிராக்டர் பேரணியில் கலந்து கொண்ட பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

``2012ம் ஆண்டு பெட்ரோல் மற்றும் டீசல் விலை அதிகரித்த போது நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து இருந்தனர். இப்போது பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டியுள்ள நிலையில் இருவரும் அமைதியாக இருப்பது ஏன்?. சமையல் எரிவாயு விலை 800 ரூபாயாக அதிகரித்துள்ளது. நரேந்திரமோடி அரசு சாமானிய மக்களுக்கு செய்யும் அநீதிக்கு எதிராக அமிதாப்பச்சன் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் கருத்து தெரிவிக்கவில்லையெனில் அவர்களின் படங்களை வெளியிடவோ அல்லது படப்பிடிப்புகளை நடத்தவோ அனுமதிக்கமாட்டோம். மன்மோகன் சிங் ஆட்சியில் நடந்து கொண்டது போல் இப்போது மத்திய அரசின் தேச விரோத கொள்கைக்கு எதிராகவும் குரல் கொடுக்கவேண்டும்” என்று தெரிவித்தார்

நானாபட்டோலே

தேசியவாத காங்கிரஸ் அமைச்சர் அஜிதேந்திரா அவாட்டும் காங்கிரஸ் தலைவரின் கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். ``அமிதாப்பச்சன் மற்றும் அக்‌ஷய் குமாரைவிட வெளிநாட்டு பாடகர் ரிஹான்னா எவ்வளவோ மேல். அக்‌ஷய் குமார் படங்கள் மூலம் அதிகபடியாக சம்பாதிக்கிறார். ஆனால் அவர் சம்பாதிக்கும் பணம் முழுக்க கனடாவிற்கு செல்கிறது. அக்‌ஷய் குமாருக்கு கனடா குடியுரிமை இருக்கிறது. அமிதாப்பச்சன் பொதுமக்களின் முன் மாதிரியானவர் கிடையாது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பெட்ரோல், டீசல் விலை குறித்து சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்து கார்களை எரிக்கவேண்டும் என்று தெரிவித்திருந்தார். இப்போது எரிபொருள் விலை விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்து இருக்கிறது. அமிதாப்பச்சன் இப்போது தனது காரை எரிப்பாரா ?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

இவர்களின் கருத்துக்கு முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ``இந்தியா ஒரு ஜனநாயக நாடு. எப்படி படப்பிடிப்பை நிறுத்த முடியும். மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சிக்கு நானாபடோலே புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். அவர் தனக்கு விளம்பரம் தேவை என்பதற்காக அமிதாப்பச்சன் மற்றும் அக்‌ஷய் குமார் ஆகியோர் பெயரை பயன்படுத்தியுள்ளார்” என்று தெரிவித்தார். அக்‌ஷய் குமார் ராமர் கோயில் கட்ட அனைவரும் நிதி கொடுக்க வேண்டுமென்று சமூக வலைத்தளத்தில் வீடியோ வெளியிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



source https://www.vikatan.com/news/india/congress-nana-patole-threatens-amitabh-akshay-for-being-dumb-against-petrol-diesel-price

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக