மேற்கு வங்க அரசு சுமார் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஐந்து ரயில்வே மேம்பாலங்கள் கட்ட முடிவெடுத்துள்ளது. இதனால் 356 மரங்கள் வெட்டப்படும் சூழல் உருவாகியுள்ளது.
மத்திய அரசு 'சேது பாரதம் மெகா திட்டம்' என்ற திட்டத்தின் கீழ் 19 மாநிலங்களில் 20,800 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 208 ரயில்வே மேம்பாலங்களைக் கட்ட முடிவெடுத்துள்ளது. அவற்றில் ஐந்து மேம்பாலங்கள் மேற்கு வங்க மாநிலத்தில் அமையவிருக்கின்றன. இந்த மேம்பாலங்கள் கட்டுமானத்துக்கும், இந்திய-வங்கதேச எல்லையில் அமைந்திருக்கும் தேசிய நெடுஞ்சாலை 112-ஐ அகலப்படுத்துவதற்கும் மரங்கள் வெட்டப்பட இருப்பது சர்ச்சையாகியுள்ளது.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு, ஒரு மரத்தின் உண்மையான பொருளாதார மதிப்பைக் கண்டறிய ஐந்து பேர் கொண்ட குழு ஒன்றை அமைத்தது.
சோஹம் பாண்டியா, பி.கே.மஜி, நிரஞ்ஜிதா மித்ரா, என்.கே.முகர்ஜி மற்றும் சுனிதா நாராயண் ஆகியோர் அடங்கிய அந்தக் குழு, மரத்தின் வயதோடு 74,500 ரூபாயைப் பெருக்கும்போது கிடைக்கும் தொகையே மரத்தின் உண்மையான பொருளாதார மதிப்பு என்று கண்டறிந்துள்ளது.
Also Read: மரங்களை வெட்டாமல் தடுத்த சிப்கோ பெண்களின் புது வியூகம்! #ChipkoMovement
இந்தியாவில் முதல்முறையாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நெறிமுறை, மரம் வெளியிடும் ஆக்ஸிஜென், அதன் வேறு பலன்கள் ஆகியவற்றைக் கொண்டு அதன் பொருளாதார மதிப்பைக் கணக்கிடுகிறது. அந்த வகையில், மேற்கு வங்கத்தில் வெட்டப்படவிருக்கும் 356 மரங்களின் ஒட்டுமொத்த மதிப்பு 220 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மத்திய வனத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றின்படி, சாலை உருவாக்கத் திட்டம் ஒன்றின் தூரம் 100 கி.மீ-க்குக் குறைவாக இருந்தால், அதற்கு அரசாங்க முகமைகளிடம் இருந்து சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு பெற வேண்டியதில்லை என்று கூறுகிறது. ஆனால், குறிப்பிட்ட இந்த வழக்கில் அது செல்லுபடியாகவில்லை.
நீர்வழி, ரயில் வழி ஆகிய மாற்றுவழிகளைப் பரிசீலித்த பிறகே சாலை உருவாக்கத் திட்டங்களை யோசிக்க வேண்டும். ஒருவேளை சாலை கண்டிப்பாகத் தேவை என்றால், அதற்கு வெட்டப்படும் மரங்களின் மதிப்பும் திட்ட பட்ஜெட்டில் உள்ளடக்கப்பட வேண்டும் என்று அந்த அமர்வு கூறியுள்ளது.
source https://www.vikatan.com/government-and-politics/environment/west-bengal-true-value-of-350-trees-worth-220-crores
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக