Ad

சனி, 20 பிப்ரவரி, 2021

`தனியார் நிறுவனங்களை அரசு ஊக்குவிக்க வேண்டும்!' - நிதி ஆயோக் கூட்டத்தில் மோடி

நிதி ஆயோக் அமைப்பின் 6-வது ஆட்சிக் குழுக் கூட்டம் பிரதமர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் அனைத்து மாநில முதல்வர்கள், ஆட்சிக் குழு உறுப்பினர்கள், அமைச்சர்கள், துணை நிலை ஆளுநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ``இந்தியா தன்னிறைவு பெற வேண்டும் என்றால், தனியார் நிறுவனங்களை அரசு ஊக்குவிக்க வேண்டும். தனியார் நிறுவனங்கள் வளர மத்திய மாநில அரசுகள் உதவ வேண்டும்.” என்றார்.

6வது நிதி ஆயோக் கூட்டம்

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில், பொதுத்துறை நிறுவனப் பங்குகளை தனியாருக்கு விற்கவும், காப்பீட்டுத் துறையில் வெளிநாட்டு முதலீட்டின் பங்குகளை அதிகரிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடி தனியார் நிறுவனங்களை ஊக்குவிக்க வேண்டும் என்று பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

கூட்டாட்சித் தத்துவம் பற்றியும் அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி குறிப்பிட்டு பேசினார். அதில், ``கொரோனா ஏற்படுத்திய பொருளாதார சிக்கலில் இருந்து நாடு மீண்டு வரும் நேரத்தில், சரியான கொள்கை கட்டமைப்பு நமக்கு தேவை.

காணொலி மூலம் பங்கேற்ற அமைச்சர்கள், முதலமைச்சர்கள்

மத்திய மாநில அரசுகளிடையே ஒத்திசைவை வளர்க்க வேண்டும். இதன் மூலம் கூட்டாட்சி தத்துவத்திற்கு அர்த்தம் சேர்க்க வேண்டும். கொரோனா காலத்தில் மத்திய மாநில அரசுகள் ஒன்றிணைந்து பணியாற்றியதை நாம் கண்டோம். அதனால் உலக அரங்கில் இந்தியாவுக்கு நன்மதிப்பு ஏற்பட்டுள்ளது.

கூட்டாட்சித் தத்துவம் என்பது மாநிலங்களுக்கு இடையே மட்டுமல்லாமல் மாவட்டங்களுக்கு இடையேயும் இருக்க வேண்டும். அப்போதுதான் வளர்ச்சி என்ற இலக்கை நோக்கி முன்னேற முடியும்” என்றார்.

Also Read: `5 பெரும் பணக்காரர்களுக்காக மட்டும்தான் மோடி அரசை நடத்துகிறார்!’ புதுச்சேரியில் சீறிய ராகுல் காந்தி

மேலும், ``சர்வதேச முதலீடுகளைக் கவர இந்தியா தொழில் செய்ய ஏதுவான நாடாக இருக்க வேண்டியது அவசியம். அதை உறுதி செய்ய 1,500 சட்டங்களை மத்திய அரசு நீக்கியுள்ளது. தொழில் செய்ய மட்டுமல்ல வாழவும் ஏதுவான நாடாக இந்தியா இருக்க வேண்டும். அதற்கு மாநில அரசுகள் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டும். அப்போது தான் இந்திய மக்களின் லட்சியங்கள் நிறைவேறும், மக்கள் வாழ்வும் சிறப்பாக அமையும்” என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/we-should-support-private-companies-to-grow-modi-in-niti-aayod-meet

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக