தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல்காந்தி கிராமத்து இளைஞர்களுடன் சேர்ந்து சமைத்துச் சாப்பிடும் வீடியோதான் கடந்த சில வாரங்களாகவே சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங். இளைஞர்கள் சமைத்த உணவை ருசித்த ராகுல்காந்தி, சமைத்த இளைஞர்களை வெகுவாகப் பாராட்டி விட்டுச் சென்றார். ராகுல் காந்தியிடமிருந்து கிடைத்த பாராட்டால் நெகிழ்ந்து போய் இருக்கும் அந்த இளைஞர்கள் யார்?
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே பத்து பதினைந்து தலக்கட்டுகளோடு இருக்கிறது சின்ன வீரமங்கலம் கிராமம். கிராமத்தில் குறுக்கும் நெடுக்குமாக மொத்தமே 40 வீடுகள்தான். கூகுள் மேப்பில்கூட காட்டாத இக்கிராமத்தைச் சேர்ந்த 6 இளைஞர்கள்தான், கடின உழைப்பு, விடா முயற்சியால் இன்று உலகத்தையே தங்கள் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்திருக்கின்றனர். இன்டெர்நெட்டே கிடைக்காத இந்த குக்கிராமத்திலிருந்து `வில்லேஜ் குக்கிங் சேனல்' என்ற யூ-டியூப் சேனலைத் துவங்கி, அதில் நம் மண் மணம் மாறாத கிராமத்து உணவுகளைச் சமைத்து பார்வையாளர்களுக்கு விருந்து படைத்து வருகின்றனர்.
துவங்கப்பட்ட 2 வருடங்களிலேயே, 150க்கும் மேற்பட்ட வீடியோக்கள். 70 லட்சத்துக்கும் அதிகமான சப்ஸ்கிரைபர்கள். உலகம் முழுவதுமே இவர்களின் வீடியோ எப்போது வரும் என்று ரசிகர்கள் காத்துக்கிடக்கின்றனர். இந்தக் குக்கிங் சேனலின் மூளை எம்.காம், எம்.பில் படித்திருக்கும் சுப்பிரமணியம்தான். யாருப்பா இந்த கேமராமேன் என்று அனைவரையும் கேட்க வைக்கும் வீடியோ கேமராமேனும் சுப்பிரமணியன்தான். லட்சக்கணக்கில் வருமானம் கிடைத்தாலும், எந்த வகையிலும் தங்களை மாற்றிக்கொள்ளாமல் எளிமையாக இருக்கின்றனர் அந்த இளைஞர்கள்.
எங்கும் பசுமை போர்த்தியபடி உள்ள வயல்காட்டில், பம்பு செட் ஓடிக்கொண்டிருக்க அங்குச் சமையல் செய்துகொண்டிருந்தது அந்த டீம். அதனை அப்படியே படமாக்கிக்கொண்டிருந்தார் அந்த டீமின் தலைவர் சுப்பிரமணியம். அன்றைய சேனல் வேலைகளை முடித்துக்கொண்டு நம்மிடம் பேசினார் சுப்பிரமணியம்.
"படிச்சி முடிச்சிட்டு வேலை இல்லாம இருக்கிறதுங்கிறது ரொம்ப கொடுமையானது. அதை அனுபவச்சிக்கிட்டு இருக்கவங்களுக்குத்தான் தெரியும். எம்.காம், எம்.பில் படிச்ச எனக்கும் ஆரம்பத்துல அதே நிலைதான். கம்ப்யூட்டர் அறிவு கொஞ்சம் இருந்துச்சு. அதை வச்சு உள்ளூர்லயே சாதிக்கணும்னு சொல்லி மொதல்ல, வெப்சைட்டை ஆரம்பிச்சு நடத்தினேன். ஓரளவுக்கு வருமானம் கிடைச்சது. கொஞ்ச நாள்லயே சந்தர்ப்ப சூழ்நிலையால் அந்த வெப்சைட்டை வேறொரு நிறுவனத்திடம் விற்க வேண்டிய சூழல், வித்துட்டேன்.
'எங்களப்பத்தி பிரச்னை இல்லைப்பா, உன் பொண்டாட்டி, பிள்ளையைக் காப்பாத்துறதுக்காவது வெளிநாட்டுக்குப் போடான்னு' அம்மாவும், அப்பாவும் சொன்னாங்க. ஆனா, உள்ளூர்ல இருந்து கை நிறைய சம்பாதிக்கணும்ங்கிறது என்னோட வைராக்கியம். கொஞ்ச நாளு அவங்ககிட்ட டைம் கேட்டேன். அந்த கொஞ்ச நாளுக்குள்ள அடுத்து என்ன செய்யலாம்னு யோசிச்சப்பதான், யூடியூப் சேனல் துவங்கலாம்ங்கிற ஐடியா வந்துச்சு. தம்பிங்களையும் சேர்த்து, உடனே அதற்கான வேலைகளையும் ஆரம்பிச்சிட்டோம். சமையலைக் கையில எடுத்தோம். அப்பா, அம்மா எல்லாம் வயல் வேலைக்குப் போயிட்டா, அப்பப்ப, நாமதான் வீட்டுல சமைக்கணும். அந்த அனுபவம் எங்களுக்குக் கைகொடுத்தது.
எங்களோட டீம்ல என்னோட சேர்த்து மொத்தம் 6 பேரு. எங்க குக்கிங் குருவே பெரியதம்பி ஐயாதான். ஐயா ஒரு சமையல் கலைஞர். விசேஷ வீட்டுக்கு சமைச்சிக்கிட்டு இருந்தவரை, நம்ம குக்கிங் சேனலின் ஆஸ்தான குருவா மாத்திட்டோம். வீடியோவில், மங்களகரமா மஞ்சள்ல ஆரம்பிக்கிறோம்னு சொல்லி மஞ்சள் அரைப்பவர்தான் ஐயனார். மஞ்சள், மல்லி, மிளகாய், சோம்பு, சீரகம் எல்லாத்தையும் சந்தனமாய் அரைச்சிக்கொடுப்பது இவரோட வேலை. முருகேசனுக்கு காய்கறி வெட்டுற வேலை. முத்துமாணிக்கம் சமையல் கலையில் பட்டப்படிப்பு முடிச்சவர். தமிழ்ச்செல்வன் நானோ டெக்னாலஜியில் எம்.பிஃல் முடிச்சவர், கோல்டு மெடலிஸ்ட்! நம்ம சமையலில் கறி வெட்டுறதில் ஸ்பெஷலிஸ்ட். அதோட முக்கியமா ஸ்பாட்ல எங்களை எல்லாம் கலகலப்பா வச்சிக்கிறதே இவர்தான். டீம்ல இருக்க 6 பேரும் சொந்த ரத்தபந்தங்கள்.
2018 ஏப்ரல் மாசம் சேனலை ஆரம்பிச்சோம். நாட்கள் போயிக்கிட்டே இருந்துச்சு. கிட்டத்தட்ட 8 மாசத்துக்கும் மேல ஆச்சு. வீடியோவை ஆயிரம் பேர் கூட பார்க்கலை. 100 லைக்ஸ் கிடைக்கிறதே பெரிய காரியமா இருந்துச்சு. எங்க நண்பர்கள் சர்க்கிள்ல அனுப்பி 100 லைக்ஸ் வர வைப்போம். வருமானம் எதுவும் இல்லை. நாள் போக, போக கையில இருந்த முதலீடும் செலவாகிடுச்சு. அடுத்த வீடியோ போடுறதுக்குக் கையில காசு இல்லை. மறுபடியும் வீட்டிலிருந்து நெருக்கடி. வேற வழியில்லை இன்னும் கொஞ்ச நாளுக்குள்ளே சாதிக்கணுங்கிற நெருக்கடி வந்திருச்சு. அப்பத்தான் செய்யிற தப்பைக் கண்டுபிடிக்க ஆரம்பிச்சோம். எல்லா வீடியோவையும் அடுப்படிக்குள் முடக்கி வழக்கமான சமையல்களை செஞ்சிக்கிட்டு இருந்ததை மாற்றினோம். இயற்கையைத் தேடி வெளிய வர ஆரம்பிச்சோம்.
அறந்தாங்கியைச் சுற்றியுள்ள அழகான கிராமங்களைச் சமையலுக்காகத் தேர்ந்தெடுத்தோம். வயல் நண்டு குழம்பு, கண்மாய் மீன் குழம்பு, ஈசல் வறுவல் எனப் போகிற போக்கில் நம் பாரம்பர்ய கிராமத்துச் சமையல்கள் ஒவ்வொன்றாகப் பதிவு செஞ்சோம். பெருசா அதில் எங்களுக்கு செலவு இல்லை. அதோடு, அழகிய வயல்வெளிகள், வாய்க்கால், நீரோடை, பறவைகளின் சத்தம், வண்டுகளின் ரீங்காரத்தை எல்லாம் வீடியோக்களில் கொண்ட வர வீடியோக்கள் எல்லாம் ஹிட் அடிக்க ஆரம்பிச்சிடுச்சு.
அடுத்த 2 மாசத்துலயே பார்வையாளர்கள்கிட்ட ரொம்ப சீக்கிரமா ரீச் ஆகிட்டோம். பார்வையாளர்கள் கூடக்கூட எங்களுக்கு லட்சக்கணக்கில் வருமானம் வந்துச்சு. நாங்க அதிகமா உழைச்சாலும், உழைப்புக்கு மீறிய வருமானம் கிடைச்சதுன்னுதான் சொல்லணும். உழைக்காம சாப்பிடுற சாப்பாடு உடம்புல ஒட்டாதுன்னு ஒரு பழமொழி இருக்கு. அதுக்குதான் ரொம்ப பயந்தோம். அதற்கப்புறம் நாங்க செய்யுற அளவை ரொம்பவே கூட்ட ஆரம்பிச்சோம். சமைக்கிற உணவை ஆதரவற்றோர் இல்லங்களுக்கும், முதியோர் காப்பகங்களுக்கும் கொடுக்க ஆரம்பிச்சோம். இப்போ நாங்க சம்பாதிக்கிறதுல ஒரு பகுதியை இதுபோன்ற நல்ல காரியங்களுக்குக் கொடுத்துட்டு வர்றோம்.
உலகம் முழுவதும் நாங்க பிரபலம். ஆனா, எங்க ஊர்க்காரங்களுக்கு நாங்க என்ன செய்யுறோம்னே தெரியாது. வேலை வெட்டி இல்லாம கூட்டாஞ்சோறு ஆக்கி சமைச்சி சாப்பிட்டுக்கிட்டு இருக்காய்ங்கன்னுதான் நினைச்சிக்கிட்டு இருந்தாங்க. ஆனா, ராகுல்காந்தி அண்ணன் சந்திப்புக்கு அப்புறம் எல்லாமே மாறியிருச்சு. அவரு எங்களோட சேர்ந்து சாப்பிட்ட விஷயத்தைக் கேள்விப்பட்டு நியூஸ் சேனல்கள் எங்களப்பத்தி டிவியில போட்டுக்கிட்டு இருக்காங்க. வீடியோ சோஷியல் மீடியாவில் டிரெண்ட் ஆகிடுச்சு. அதைப்பார்த்துட்டு ஊர்க்காரங்க ரொம்பவே பெருமையா இருக்காங்க.
'வெங்காயம்... தயிர்... கல் உப்பு...'னு அவராத்தான் எங்க ஸ்டைல்ல சொல்லணும்னு ஆசைப்பட்டாரு. அதெல்லாம் எவ்ளோ பெரிய கொடுப்பினை தெரியுமா? இந்திரா காந்தி அம்மாவோட பேரனுக்கே சமைச்சுப் போட்ட பயலுகனு ஊரே தூக்கிக் கொண்டாடுது. எம்.பி அக்காவுக்கு நன்றி!
மனசுக்கு ரொம்ப நெகிழ்ச்சியா இருக்கு. ராகுல் அண்ணனுக்கு எங்கள விட்டு பிரிய மனசு இல்ல. எங்களுக்கும் மனசு இல்ல. ஈசல் டிஷ் கேட்டிருக்கார். அடுத்த முறை வரும்போது கண்டிப்பா அவருக்குச் செஞ்சு கொடுக்கணும்.
யூ-டியூப்ல 10 நிமிஷம்தான் வீடியோ பதிவு செய்வோம். அதைப் பதிவு செய்யவே படாதபாடு பட வேண்டியிருக்கும். எங்க ஊர்ல இன்டர்நெட் வசதி ரொம்பவே குறைவு. மொபைலில் ஹாட்ஸ்பாட் ஆன் பண்ணித்தான் யூ-டியூப்பில் வீடியோ அப்லோட் பண்ணுவோம். ஒரு வீடியோ அப்லோட் ஆக 4 மணி நேரம் வரையிலும் ஆகும். சில வீடியோக்கள் அடுத்த நாள் ஆகும். இன்னைக்கும் அதே நிலைதான். வீடியோவில் சமையல் சில நிமிடங்கள்தான் காட்டுவோம். ஆனால், பாதி நாளை அதற்காக செலவிடணும்.
Also Read: `சொன்னது மண்பானை உணவகம்; புதுக்கோட்டை டீம் படுரகசியம்!’ - `குக் ராகுல்’ ரகசியம் பகிரும் ஜோதிமணி
வீடியோ பார்க்கிற பலருக்கும், எவ்வளவு நேரம் சமையல் செய்யுறாங்க, எப்படி செய்யிறாங்க, டேஸ்ட் இருக்குமான்னு எல்லாம் டவுட் இருக்கும். அந்த டவுட்டை சரிசெய்யிறதுக்காக, வாய்ப்புக் கிடைக்கும் தீவிர ரசிகர்களை ஸ்பாட்டுக்கே வரவச்சி அவங்களையும் ருசி பார்க்க வச்சிடுவோம். ரசித்துச் சாப்பிட்டு வாழ்த்திட்டு போவாங்க. ஏன்னா அந்தளவுக்குப் பார்த்து, பார்த்து நேர்த்தியா சமையல் செய்யுவோம். காய்கறிகள் துவங்கி எல்லாமே ஃபிரஷ்ஷா இருக்கும். செக்கில் ஆட்டிய எண்ணெய் துவங்கி கலப்படமில்லாமல்தான் செய்வோம். அதனால்தான் என்னவோ இதுவரைக்கும் எங்கள் உணவைச் சாப்பிட்டு யாருக்கும் எந்தப் பாதிப்பும் இல்லை.
நல்லா சம்பாதிக்கிறோம். குடும்பத்தோட மகிழ்ச்சியா இருக்கோம். நெனச்ச மாதிரியே வெளிநாடு போகாமல் இன்னைக்கு உள் நாட்டில் கை நிறையச் சம்பாதிக்கிறோம். யூ-டியூப் ஆரம்பிக்கிறதுக்கு முன்னால அதைப் பத்தி ஆழமா தெரிஞ்சிக்கிட்டுதான் இறங்கினோம். ஆரம்பத்துல சறுக்கல்கள் இருந்துச்சுதான்... ஆனால் ஒருபோதும் முயற்சியை கைவிடலை. அதே நேரத்தில் அதிக லைக்ஸ் வர வேண்டும் என்பதற்காக அப்பவும் சரி, இப்பவும் சரி செயற்கையா எதையும் செய்யலை. புதுமையான விஷயங்களைத் தேட ஆரம்பிச்சு இன்னைக்கு இந்தத் துறையில் ஜெயிச்சிருக்கோம்" என்கிறார் உற்சாகமாக.
வாழ்த்துகள் மக்களே!
source https://www.vikatan.com/food/food/village-cooking-channel-team-talks-about-rahul-gandhis-visit-and-their-growth
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக