அக்னி நட்சத்திரம் ஆரம்பிக்க இன்னும் இரண்டு, மூன்று மாதங்கள் இருக்கின்றன. ஆனால், வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலை முன் வைத்து, தமிழக அரசியல் களம் அனலாகத் தகிக்கத் தொடங்கிவிட்டது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அ.தி.மு.க-வும், தி.மு.க-வும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் ஊழல் குற்றச்சாட்டுகளைச் சுமத்தி வருகின்றன.
அதிலும் எதிர்க்கட்சி என்ற கோதாவில், எடப்பாடி தலைமையிலான அ.தி.மு.க அரசு மீது தினமும் ஒரு ஊழல் குற்றச்சாட்டைக் கூறி, இறங்கி அடிக்கிறது தி.மு.க. இதன் உச்சமாக ஆளுநர் பன்வாரிலாலைச் சந்தித்து எடப்பாடி அரசு மீது, இரண்டு மாதங்களுக்குள் இரண்டாவது முறையாக ஊழல் புகார் பட்டியலைக் கொடுத்து, விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி இருப்பது அக்கட்சியினரை ஏகத்துக்கும் டென்ஷனாக்கி உள்ளது.
எடப்பாடியும் விடுவதாக இல்லை. சர்க்காரியா கமிஷன், 2ஜி புகழ் தி.மு.க, ஊழல் குறித்தெல்லாம் பேசத் தகுதி உண்டா என எகிறுகிறார்.
தமிழக அரசியலில் ஆளும் அரசு மீது ஊழல் புகார் எழுவதெல்லாம் புதிதல்ல. 1967 ஆம் ஆண்டில் அப்போதைய பக்தவச்சலம் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி தொட்டே ஊழல் குற்றச்சாட்டுகள் ஊர்வலம் வரத் தொடங்கிவிட்டன.
பக்தவச்சலத்தைப் பதற வைத்த எருக்கன்சேரி ஊழல்!
ராஜாஜி, காமராஜருக்குப்பின் காங்கிரஸ் முதல்வராக பதவியேற்ற பக்தவச்சலத்துக்கு, காமராஜரைப்போல சாமான்ய மக்கள் ஆதரவு இல்லை. இன்னொருபுறம் விலைவாசியேற்றம், வேலையின்மை, உணவுப் பற்றாக்குறை, பசி, பட்டினி என மக்கள் சந்திக்கும் அன்றாட பிரச்சனைகள், காங்கிரஸ் அரசுக்கு எதிரான மக்களின் கோபத்தை உக்கிரமாக்கிக் கொண்டிருந்தன. குறிப்பாக, காங்கிரஸ் ஆதரவு பெருவியாபாரிகள் உணவுப் பொருட்களைப் பதுக்கி, செயற்கை பஞ்சத்தை உருவாக்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், ஏற்கெனவே அகில இந்திய அளவில் சரிவைச் சந்தித்து வந்த அந்தக் கட்சியின் செல்வாக்கு, தமிழகத்தில் மேலும் அதலபாதாளத்துக்குச் சென்றது.
கூடவே பக்தவச்சலம் அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் வெடித்துக் கிளம்பின. அந்த சமயத்தில்தான் தேர்தல் அரசியலில் தடம் பதித்து, தமிழகமெங்கும் ஒரு புதிய அரசியல் அலையை ஏற்படுத்திக் கொண்டிருந்தது தி.மு.க.
எருக்கன்சேரி என்ற இடத்தில் நிலம் ஆர்ஜிதம் செய்யப்பட்டதில் ஊழல் நடந்ததாக அப்போதைய தி.மு.க உறுப்பினர் கருணாநிதி, சட்டசபையில் கூறிய குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. எருக்கன்சேரி ஊழல் குறித்து விசாரிக்கக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இப்போது போன்று கவர்னரைச் சந்தித்து ஊழல் புகார் பட்டியலெல்லாம் கொடுக்கவில்லை என்றபோதிலும், மக்கள் மன்றத்தில் வீரியத்துடன் தி.மு.க மேற்கொண்ட பிரசாரம், 1967 ஆம் ஆண்டோடு தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
இந்த நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க ஆட்சிக்கு வந்ததும், என்ன காரணத்தினாலோ, `எருக்கன்சேரி ஊழல் குறித்து மேல் நடவடிக்கை தேவையில்லை' என அதற்கு முடிவுரை எழுதியது.
பின்னாளில் 01.05.1972 தேதியிட்ட துக்ளக் வார இதழுக்குப் பேட்டியளித்த பக்தவச்சலமே,``நான் முதல்வராக இருந்தபோது எங்கேயாவது சில இடங்களில் ஊழல் நடந்திருக்கலாம். ஆனால் மேல்மட்டத்தில் ஊழல் ரொம்பக் கொஞ்சமா இருந்தது" எனக் கூறியிருந்ததை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.
சர்க்காரியா கமிஷன்... தி.மு.க-வின் தீராத களங்கம்!
காங்கிரஸ் ஆட்சியின் ஊழல் கதை இதுவென்றால், தி.மு.க மீதும் அதன் முன்னாள் தலைவர் கருணாநிதி மீதும் தீராத களங்கத்தை ஏற்படுத்தியது சர்க்காரியா கமிஷன் மற்றும் 2ஜி ஊழல் புகார்கள்.
1967 தேர்தலில் தி.மு.க அமோக வெற்றி பெற்று, முதலமைச்சராக அண்ணா பொறுப்பேற்ற போதிலும், இரண்டே ஆண்டுகளில் அவர் மறைந்து, கருணாநிதி அக்கட்சி எம்.எல்.ஏ-க்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரது ஆட்சியில், வீராணம் ஊழல், பூச்சி மருந்து ஊழல், மஸ்டர் ரோல் ஊழல், கோதுமை பேர ஊழல் என கருணாநிதி மீது எழுந்த அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் அரசியல் அரங்கை அதிரவைத்தன.
இந்த நிலையில், 1972-ல் கருத்துவேறுபாட்டால் தி.மு.க-விலிருந்து பிரிந்து சென்ற எம்ஜிஆர், 32 புகார்கள் அடங்கிய பட்டியலை எடுத்துக் கொண்டு அப்போதைய கவர்னர் கே.கே.ஷாவிடம் ஊர்வலமாகச் சென்று கொடுத்தார். இந்தப் புகார் பட்டியலை அப்போதைய முதல்வர் கருணாநிதிக்கு அனுப்பப்போவதாக கவர்னர் தெரிவிக்க, புகாரை எடுத்துக்கொண்டு திரும்பி விட்டார் எம்.ஜி.ஆர்.
அதன்பிறகு குடியரசுத் தலைவர் வி.வி.கிரியை 1972 நவம்பர் 5-ஆம் தேதி சந்தித்து, கருணாநிதியின் மீதான ஊழல்களைப் பட்டியலிட்டுப் புகார் கொடுத்தார். அப்போதைக்கு அந்தப் புகாரைக் கிடப்பில் போட்டது இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசு. 4 ஆண்டுகள் கழித்து தி.மு.க உடனான மோதலைத் தொடர்ந்து அந்தப் புகாரைத் தூசு தட்டி எடுத்த மத்திய அரசு, ஊழல் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காக நீதிபதி சர்க்காரியா கமிஷனை அமைத்தது.
அக்குழு இது குறித்து விசாரித்து,``ஊழல்கள் நடைபெற்றது உண்மைதான். ஆனால், அவை விஞ்ஞானபூர்வமாக நடைபெற்றுள்ளது" எனச் சான்றளித்ததாக அப்போது பேசப்பட்டது. ஆனால், அந்த அறிக்கையின் மீது அன்றைய இந்திரா அரசு எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லை.
இதை வைத்துதான், அ.தி.மு.க-வினர் இன்றளவும்,``திமுக விஞ்ஞான பூர்வமாக ஊழல் செய்யும் கட்சி" என்ற பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆனால், இந்தக் குற்றச்சாட்டை மறுக்கும் தி.மு.க-வினர், கருணாநிதியையும் தி.மு.க-வினரையும் ஊழல்வாதிகளாகச் சித்திரிக்கவேண்டும் என்கிற ஒற்றை நோக்கத்தில் கூறப்படும் பொய் இது. சர்க்காரியா கமிஷனிலும் சரி, 2ஜி வழக்கிலும் சரி, ஊழல் நடைபெற்றதாக எதுவும் நிரூபிக்கப்படவில்லை என்றாலும் மீண்டும் மீண்டும் பொய் மூலம் தி.மு.க-வைக் களங்கப்படுத்தும் முயற்சி தொடர்கிறது" என்கிறார்கள்.
``கூடவே எம்.ஜி.ஆர் மீதான ஊழல் புகார்களை நாங்கள் அடுக்கட்டுமா..? ரே கமிஷன், பால் கமிஷன்களெல்லாம் அ.தி.மு.க-வினருக்கு மறந்து விட்டதா?" என்றும் கேள்வி எழுப்பும் அவர்கள்,`ரே கமிஷன் ஒன்று போதாதா... எம்ஜிஆரின் ஊழலை உலகுக்கு உணர்த்த..? எம்ஜிஆர் அமைச்சரவையில் அங்கம் வகித்த காளிமுத்து மீதான ராபின் மெயின் ஊழல் வழக்கெல்லாம் மக்களுக்கு மறந்திருக்கலாம், நாங்கள் மறக்கவில்லை" என்று பதிலடிக் கொடுக்கிறார்கள்.
எம்ஜிஆரை கலங்கவைத்த ரே கமிஷன்!
அது என்ன ரே கமிஷன்..? 1980 தேர்தலில் வென்ற பிறகு ஏற்பட்ட எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில், எரிசாராயத்துக்கு அனுமதி வழங்குவதில் ஊழல் நடைபெற்றதாகவும், இதனால், தமிழ்நாடு அரசுக்கு பல ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது என்றும் குற்றம் சுமத்தப்பட்டது.
அப்போதைய கேரள அரசு தமிழக அரசிடம் 65 லட்சம் லிட்டர் எரி சாராயத்தை கேட்டதாகவும், முதலில் 26 லட்சம் லிட்டரும் பின்னர் 7.5 லட்சம் லிட்டரும் அனுப்பிய தமிழக அரசு, பின்னர் கையிருப்பு இல்லை என்றும் கூறி அத்துடன் நிறுத்திக்கொண்டதாகவும், ஆனால், காலாவதியான அந்த வாகன அனுமதியை வைத்துக்கொண்டு, கேரள கடத்தல் புள்ளிகள், எம்ஜிஆருக்கு நெருக்கமான அப்போதைய எரிசாராய முதலாளியிடம் இருந்து தொடர்ந்து எரிசாராயத்தைத் தொடர்ந்து பெற்றதாகவும் புகார் கூறப்பட்டது.
அப்படி ஒரு நாள் கடத்தப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் எரி சாராயம், ஒரு கேரள அதிகாரியால் கைப்பற்றப்பட, கடத்தல் புள்ளிகள் அப்போதைய ஆட்சித் தலைமைக்கு 5 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகத் தெரிவித்ததாகவும் வெளியான தகவல், அன்றைய அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியது. எம்.ஜி.ஆர் ரொம்பவே கலங்கிப் போனார்.
இதையடுத்து, எம்.ஜி.ஆர் உடனடியாக நீதிபதி கைலாசம் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார். ``குற்றவாளியே கமிஷனை அமைப்பதா..?" எனக் கேட்டு எதிர்க்கட்சிகள் நடத்திய கடுமையான போராட்டத்தினால், இந்த கமிஷனுக்கு தலைமையேற்று விசாரிக்க விரும்பவில்லை என்று விலகி விட்டார் நீதிபதி கைலாசம்.
நிலமையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு, இது குறித்து விசாரிக்க நீதிபதி ரே என்பவரின் தலைமையில் ஒரு கமிஷனை அமைத்தது. அந்த ரே கமிஷனும் பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு பாட்டிலிங்க், பிளான்டிங் தொழிற்சாலைகளில் இருந்து சென்ற லஞ்சப்பணம் 5 கோடி என்று அறிக்கையில் குறிப்பிட்டதாகச் சொல்லப்பட்டது.
ஆனால், எம்.ஜி.ஆர் இறந்து போனதால் அத்தோடு ரே கமிஷனும் மூடு விழா கண்டது, எரிசாராய ஊழல் புகாரும் ஊத்தி மூடப்பட்டது.
ஜெயலலிதாவின் செல்வாக்கை சரித்த டான்சி வழக்கு!
எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பின்னர் அ.தி.மு.க தலைமையைக் கைப்பற்றினார் ஜெயலலிதா. 1991 - 96 வரையிலான அவரது ஆட்சியில், அவருக்கு எதிராகப் பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இது குறித்து அன்றைய ஆளுநர் சென்னா ரெட்டியிடம் ஊழல் புகார் அளித்து விசாரணை கமிஷன் அமைக்க வேண்டுமென்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
இது தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் கருணாநிதி. ஆளுநர் மாளிகைக்கு ஊர்வலமாகச் சென்று ஜெயலலிதா மீது வழக்குத் தொடர அனுமதி கேட்டார்.`டான்சி நில பேரத்தை ரத்து செய்ய வேண்டும்' என 1993-ம் ஆண்டு தி.மு.க சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது. சுப்பிரமணியன் சுவாமியும் ஜெயலலிதாவுக்கு எதிராகப் புகார் தெரிவித்தார்.
1996 ல் தி.மு.க. வெற்றி பெற்று, முதல்வரானார் கருணாநிதி. ஜெயலலிதா மீதும், அவரது ஆட்சியில் பதவி வகித்த அமைச்சர்கள் மீதும், 46 வழக்குகள் தொடரப்பட்டன. குறிப்பாக, ஜெயலலிதாவுக்கு எதிராக, 14 வழக்குகள் தொடரப்பட்டன. ஜெயலலிதா தோழி சசிகலாவும் சில வழக்குகளில் சிக்கினார்.
அவற்றில் வெகு சில வழக்குகளில் மட்டுமே இருவரும் தண்டனை பெற்றுள்ளனர். அவற்றில் முதல் வழக்கு, கடந்த 2000ம் ஆண்டு, கொடைக்கானலில் விதிமுறைகளை மீறி பிளசன்ட் ஸ்டே ஓட்டல் கட்ட அனுமதி வழங்கியதற்காக, ஜெயலலிதாவுக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், மேல்முறையீட்டில், ஜெயலலிதா விடுதலையானார்.
அடுத்து மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது டான்சி ஊழல் வழக்கும், சொத்து குவிப்பு வழக்கும்தான். இதில் சொத்துக் குவிப்பு வழக்கில்தான் அவர் தண்டனையும் பெற்று சிறையிலடைக்கப்பட்டார். டான்சி ஊழலைப் பொறுத்தவரை, 'டான்சி' நிறுவன நிலத்தை, ஜெயா பப்ளிகேஷன்ஸ், சசி என்டர்பிரைசஸ் நிறுவனங்கள் விலைக்கு வாங்கின. இது ஜெயலலிதாவும் சசிகலாவும் பங்குதாரர்களாக இருந்த நிறுவனம். இதனால் அரசுக்கு 4.16 கோடி இழப்பு ஏற்பட்டதாகப் புகார் கிளம்பியது. இந்த ஊழல் வழக்கில், ஜெயலலிதாவுக்கும், சசிகலாவுக்கும் மூன்று ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த உத்தரவுதான், முதன் முதலில், ஜெயலலிதாவின் அரசியல் வாழ்வுக்கு, பலத்த அடியை கொடுத்தது.
எனினும், இதனை எதிர்த்து, ஜெயலலிதா தரப்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய, அதிலும் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதனால், 2001ம் ஆண்டு முதல்வர் பதவியை ஜெயலலிதா இழந்தார். பன்னீர்செல்வம் முதல்முறையாக, முதல்வர் பதவியேற்றார்.
இதைத்தொடர்ந்து, உச்ச நீதிமன்றத்தில் செய்யப்பட்ட மேல்முறையீட்டில், அபகரித்த டான்சி நிறுவனத்திற்குச் சொந்தமான நிலத்தை மட்டும் திருப்பி அளித்தால் போதும் என தீர்ப்பு வழங்கப்பட்டது. இதன்பின்னர் மீண்டும் ஜெயலலிதா, முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கு அடுத்த அதிரடியாக, சொத்துக்குவிப்பு வழக்கில், ஜெயலலிதாவும், சசிகலாவும் 21 நாள்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்து, ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் பிணையில் வெளிவந்தனர்.
இந்நிலையில், 2016, டிசம்பரில் ஜெயலலிதா இறந்துவிட, உச்ச நீதிமன்றம் அவரை வழக்கில் இருந்து விடுவித்தது. அதேசமயம் அவருக்கு ரூ.3 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. தற்போது எடப்பாடி அரசு மீது ஊழல் புகார்... அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்படுமா அல்லது விசாரணை கமிஷன் அமைக்கப்படுமா என்பதையெல்லாம் வரும் தேர்தல்தான் தீர்மானிக்கும்!
source https://www.vikatan.com/best-of-vikatan/vikatan-vintage/corruption-allegations-against-the-ruling-government-in-tamil-nadu-politics-arasiyal-appo-apdi-2
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக