Ad

புதன், 24 பிப்ரவரி, 2021

`மாஸ்க் கழற்றிய பிறகுதான் யார் என்று தெரிந்தது!’ -கொல்லம் கடலில் ராகுல்.. படகில் நடந்தது என்ன?

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், வயநாடு தொகுதி எம்.பி-யுமான ராகுல் காந்தி கேரள மாநிலத்தில் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து கொல்லம் வாடி கடற்கரைக்குச் சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள மீனவர்களுடன் கடலுக்கு மீன் பிடிக்க மோட்டார் பொருத்திய படகில் புறப்பட்டுச் சென்றார். கடலில் மீனவர்களுடன் வலை விரித்தார். அந்த சமயத்தில் சில மீனவர்கள் கடலில் குதித்து மீன்கள் தப்பிச் செல்லாமல் இருக்க வலையை சரி செய்தனர். எதற்காக மீனவர்கள் கடலில் குதித்தார்கள் என்பதை கேட்டறிந்த ராகுல்காந்தி, உடனடியாக அவரும் கடலில் குதித்தார்.

பின்னர் ராகுல் காந்தியும் வலையை சரிசெய்தார். பின்னர் சிறிது நேரம் கடலில் நீந்திய ராகுல்காந்தி, தொடர்ந்து மீண்டும் வள்ளத்தில் ஏறி, மீன்பிடிக்க கடலில் வீசியிருந்த வலையை மீனவர்களுடன் இணைந்து இழுத்தார். சுமார் இரண்டரை மணி நேரம் கடலில் மீனவர்களுடன் செலவிட்டார் ராகுல்காந்தி. ராகுல் மீன்பிடிக்கும் புகைப்படத்தை காங்கிரஸ்காரர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகிறார்கள். ராகுல்காந்தி மீன் பிடிக்கச் சென்றது குறித்து அவருடன் சென்ற மீனவர்கள் தங்கள் அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

மீனவர்களுடன் வலையை இழுக்கிறார் ராகுல் காந்தி

மீனவர்கள் கூறுகையில், "ராகுல் காந்தி கடலுக்கு செல்வது குறித்து யாருக்கும் தெரியவில்லை. காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாபன் தனது உறவினர் ஒருவர் கடலுக்கு படகில் வருவதாக கூறியிருந்தார். அவருடன் எம்.பி. கே.சி.வேணுகோபாலன் வந்திருந்தார். மாஸ்க் வைத்திருந்ததால் முதலில் ராகுல் காந்தியை அடையாளம் தெரியவில்லை. மாஸ்க் கழற்றிய பிறகுதான் அடையாளம் கண்டுகொண்டோம்" என்றனர்.

ராகுல்கந்தி வழக்கம்போல பாதுகாப்பு குறித்து கவலைப்படாமல் படகில் ஏறியிருக்கிறார். அவருடன் இரண்டு பாதுகாவலர்கள் மட்டுமே சென்றிருக்கிறார்கள். கடலில் சுமார் ஆறு கிலோ மீட்டர் தூரத்தில் சென்று மீன் பிடித்திருக்கிறார் ராகுல் காந்தி. வலையை சரிசெய்வதற்காக ராகுல்காந்தி கடலில் குதிக்க முயன்றபோது சிலர் தடுத்திருக்கிறார்கள். அதற்கு ராகுல் காந்தியின் பிரைவெட் செக்கரட்டரி அலங்காய் சவாய், 'அவர் ஸ்கூபா டைவிங் தெரிந்தவர். ஒரு பிரச்னையும் இல்லை' எனக் கூறியிருக்கிறார்

கடலில் ராகுல் காந்தி

ராகுல்காந்தி மற்றும் மீனவர்கள் கடலில் விரித்த வலையில் சில கணவாய் மீன்கள் மட்டுமே கிடைத்திருக்கின்றன. அதை பார்த்த ராகுல்காந்தி, "நான் நிறைய மீன்கள் கிடைக்கும் என எதிர்பார்த்தேன். நீங்கள் எதிர்கொள்ளும் பிரச்னையை அறிந்துகொண்டேன். உங்கள் கடின உழைப்பை பாராட்டுகிறேன். நான் என்றும் உங்களுடன் உண்டு" என கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாது, "மீனை சமைத்து கொண்டுவரும்போது உங்கள் கஷ்டத்தை யாராவது நினைத்துபார்க்கிறார்களா?" என மீனவரக்ளுடம் கேட்டு அவர்களை நெகிழ வைத்திருக்கிறார் ராகுல்காந்தி.



source https://www.vikatan.com/news/politics/fisherman-experience-with-rahul-gandhi-in-kerala-sea

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக