Ad

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

விலையில்லா மிதிவண்டி: `டோக்கனில் மாணவிகள் பெயரோடு சாதிப் பிரிவு!’ - மயிலாடுதுறையில் சர்ச்சை

மயிலாடுதுறை அருகே செம்பனார்கோவில் அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட அரசின் விலையில்லா மிதிவண்டிகளில், ஜாதிவாரியாக டோக்கன் வைக்கப்பட்ட சம்பவம் மாணவிகள், பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி, சர்ச்சையாகியுள்ளது.

பள்ளியில் மாணவர்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வின்றி, சமத்துவம் நிலைக்க வேண்டும் என்பதற்காகச் சீருடை திட்டம் கொண்டு வரப்பட்டது. தற்போது விலையில்லா மடிக்கணினி முதல் சைக்கிள் வரை அரசு சார்பில் சமமாக வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விலையில்லா மிதிவண்டிக்கான டோக்கனில் மாணவிகளின் பெயரோடு, சாதி பிரிவும் எழுதி வழங்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலையில்லா மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா செம்பனார்கோவிலில் அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கல்வி பயிலும் மாணவிகளுக்குத் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நடப்பு கல்வி ஆண்டில் 11-ம் வகுப்பு பயிலும் மாணவிகள் 185 பேருக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் கலந்து கொண்டு மாணவிகளுக்குத் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார். மாணவிகளுக்கு வழங்கப்பட்ட அனைத்து மிதிவண்டிகளிலும் மாணவியின் பெயர் மற்றும் எஸ்.சி (SC)., பி.சி (BC)., எம்.பி.சி (MBC)., என மாணவிகளின் ஜாதியின் பிரிவுகளைக் குறிப்பிட்டு டோக்கன்கள் வைக்கப்பட்டிருந்தது. இதனைப் பார்த்த மாணவிகளும், பெற்றோர்களும் அதிர்ச்சி அடைந்தனர்.

சைக்கிள்களில் டோக்கன் வைக்கப்பட்டிருந்தது அறியாமலேயே, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் பவுன்ராஜ் மாணவிகளுக்கு மிதிவண்டிகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இச்சம்பவம் முகநூல் வாட்ஸ்அப் போன்ற சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம், சாதி ரீதியாக மாணவிகளிடையே பாகுபாட்டை உருவாக்கும் வகையில் உள்ளதாகவும், உடனடியாக பள்ளி தலைமையாசிரியர் மற்றும் நிர்வாகத்தினர் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய மாணவர் சங்கத்தினர் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து மயிலாடுதுறை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் (பொறுப்பு) புகழேந்தியிடம் பேசினோம், "சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் உரிய விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளோம். பள்ளிக்கு நேரில் சென்று ஆசிரியர்களிடமும் விசாரித்து வருகிறேன். அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் அனைவரும் சிறப்பாக பணியாற்றக் கூடியவர்கள் தான். தவறுதலாக டோக்கனில் சாதி பெயரைக் குறிப்பிட்டிருக்கிறார்கள். விசாரணை நடத்தி அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/controversy/caste-category-of-students-was-mentioned-in-mayiladuthurai-free-cycle-scheme

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக