Ad

செவ்வாய், 23 பிப்ரவரி, 2021

தூங்காநகர நினைவுகள் - 6 | சங்கம் வளர்த்த மாமதுரை!

இன்றைய தேதியில் இந்த உலகின் மூத்த மொழிகள் எவை? உலகின் ஆகச் சிறந்த பல்கலைக்கழகங்களின் மொழியியல் துறையினரிடம் இந்தக் கேள்வியை நீங்கள் கேட்டுப்பாருங்கள் ஒரே பதில் தான் வரும். அவை கிரேக்கம், சீனம், தமிழ். இந்த மூன்று மொழிகளுமே மிகப் பழைமையானவை, வரலாறு நெடுகிலும் பல சவால்களை சந்தித்தவை என்ற போதிலும் அதை எல்லாம் தாண்டி தன்னை நிலைநிறுத்திக் கொண்டு ஒரு பெரும் மக்கள் கூட்டத்தில் பேசப்படுகிற மொழியாக, உயிருள்ள மொழியாக இவை மட்டுமே திகழ்கின்றன.

ஓர் இனத்தின் தொன்மையை அறிந்துகொள்ள வேண்டுமானால் அந்த மக்கள் பயன்படுத்திய மொழிதான் மிக முக்கியச் சான்றாக உள்ளது. அந்த மொழியும் அந்த மொழியில் அந்த மக்கள் கூட்டம் என்னென்ன பதிவு செய்து வைத்திருக்கிறது என்பதும் அந்த மக்களை பற்றிய ஒரு மதிப்பீட்டுக்கு வர உதவுகிறது.

மதுரையில் கிடைத்த பாறை ஓவியங்கள், அகழாய்வில் கிடைத்த பொருட்கள், பல காலங்களைச் சேர்ந்த கல்வெட்டுகள் போல், தமிழ் மொழியின் பழைமைக்கு முக்கிய சான்றுகளாக விளங்கும் சங்க இலக்கியங்களை இயற்றி பாதுகாத்த நகரமாக மதுரை திகழ்கிறது. மதுரைக்கும் தமிழுக்குமான உறவு என்பது மூவாயிரம் ஆண்டுகளுக்கும் முந்திச் செல்கிறது.

ஓலைச்சுவடிகள்

சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழில் பாடப்பட்ட பாடல்களின் தொகுப்பை சங்க இலக்கியம் என்று அழைக்கிறோம். இந்தப் பாடல்கள் அனைத்தும் தமிழ் நிலத்தில் வரலாற்றுச் செய்திகளை, வாழ்வியல் முறைகளைத் தன்னகத்தே கொண்டுள்ளன.

இந்தப் பாடல்களை அகம், புறம் என இரு வகையாக பிரிக்கிறோம். அகத்துறை என்பது காதலைப் பற்றி பேசுகிறது. புறத்துறை பிற விஷயங்களைப் பற்றி பேசுகிறது. பாணர்கள், புலவர்கள் என இரு மரபாக இவை சொல்லப்படுகின்றன. காதலும் வீரமும் சங்க இலக்கியத்தின் உயிர்நாடியாக திகழ்கிறது. சங்க இலக்கியப் பாடல்கள் ஒர் ஒழுங்குமுறையுடன் எட்டுத்தொகை, பத்துப்பாட்டு எனப் பிரிவுகளாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

நற்றிணை, குறுந்தொகை. ஐங்குறுநூறு, பதிற்றுப்பத்து, பரிபாடல், கலித்தொகை, அகநானூறு, புறநானூறு, ஆகியவை எட்டுத்தொகை நூல்களாகும்.

நெடுநல்வாடை, பட்டினப்பாலை, குறிஞ்சிப் பாட்டு, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, கூத்தராற்றுப்படை (மலைபடுகடாம்), பெரும்பாணாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, திருமுருகாற்றுப்படை ஆகியவை பத்துப்பாட்டு நூல்களாகவும் திகழ்கின்றன.

இந்த இலக்கியங்களில் அப்படி என்ன இருக்கிறது?

ஒரு மொழியின் சாத்தியங்கள் எவை என்பதை அறிந்துகொள்ள சங்க இலக்கியங்களை ஒருவர் வாசிப்பது அவசியம். இந்த இலக்கியங்களில் உள்ள உணர்ச்சி, அவை முன்வைக்கும் மதிப்பீடுகள், அதில் பொதிந்துள்ள கற்பனைத் திறன், இந்த மொழியின் அழகிய வடிவமைப்பு என்கிற பல தளங்களில் தமிழ் மொழி எப்படி செம்மொழியாக திகழ்கிறது என்பதை உலகளாவிய மொழியியல் துறை வல்லுநர்கள் தமிழ் மொழியை முன்வைத்து சிலாகித்துள்ளார்கள்.

சங்க கால புலவர்
சங்க இலக்கியங்களில் ஒரு பாடல் கூட ஆகாயத்தில் இருந்து வந்த பாடல் அல்ல. இந்தப் பாடல்கள் அனைத்துமே மண்ணில் இருந்தும் மக்களின் வாழ்கையில் இருந்தும் விளைந்துள்ளது. உலகத்திலேயே சாமானியர்களை அவர்களின் வாழ்க்கையை இத்தனை விரிவாக விவரித்துள்ள இலக்கியம் வேறு இல்லை, மொழி வேறு இல்லை. இந்த இலக்கியங்களின் மற்றுமொரு சிறப்பு அதன் சொற்சிக்கனம், அது கையாளும் நுட்பம், மொழியின் அடர்த்தி மற்றும் இந்தப் பாடல்கள் நமக்கு அளிக்கும் உலகளாவிய உணர்வு.

சங்க இலக்கியங்கள் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்து வகை நில அடையாளங்கள், புவியியல் சார்ந்த வெவ்வேறு விதமான வாழ்க்கை முறைகள், திணைக் கோட்பாடுகள் பற்றியும் பேசுகின்றன. ஒரு பெரும் மக்கள் கூட்டத்தின் நுட்பமாக சூழலியல் அறிவைப் பற்றியும் புரிதலைப் பற்றியும் பேசுகிறது. இந்த நிலத்தின் பறவைகள் மற்றும் விலங்குகள் பற்றியும் அத்துடன் தமிழர்கள் கொண்டுள்ள உறவைப் பற்றியும் பேசுகிறது.

சங்ககாலத்தை ஒட்டி உலகம் முழுவதும் உள்ள இலக்கியங்கள் மன்னர்களை, கடவுளர்களைப் பற்றி பேசும், இதுதான் உலக மரபு. சங்க இலக்கியங்களும் மன்னர்களைப் பற்றி பேசுகிறது குறுநில மன்னர்களைப் பற்றியும் பேசுகிறது, அத்துடன் அவை தங்களின் எல்லைகளை சுருக்கிக் கொள்ளவில்லை, பெரும்பகுதி மக்களைப் பற்றியே பேசின. சங்க இலக்கியங்கள் இந்த நிலத்தின் சாமானியர்களை அவர்களின் பாடுகளை, அவர்களின் வாழ்வியலை விரிவாக அலசுகிறது. தமிழ் நிலத்தின் கடைக்கோடி கிராமத்தில் வசிப்பவனின் உற்பத்தி, உறவுகள் மற்றும் வணிகத்தைப் பற்றிப் பேசுகிறது. குடியானவர்களின் பொது உண்மைகளை, உளவியலை, குடிமக்களின் வலிமையைப் பற்றி, அவர்களின் அரசியல் அதிகாரம் பற்றியும் பேசுகிறது. தமிழ் நிலத்தின் ஒட்டு மொத்த அனுபவத்தையும் உள்வாங்கி உருவாக்கப்பட்ட இலக்கியங்களாகவே சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன.

ஔவையார்

சங்க இலக்கியங்கள் தமிழகத்திற்கும் கிரேக்க, ரோமாபுரிக்கும் இருந்த தொடர்புகளைப் பற்றி விரிவாக பேசுகிறது. அதே போல் இதே காலகட்டத்தில் உருவான கிரேக்க, ரோமன், சுமேரிய இலக்கியங்களில் தமிழகம் பற்றிய விரிவான குறிப்புகள் இருக்கின்றன. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையிலான பல வரலாற்று தகவல்களையும் சங்க இலக்கியத்தில் காணலாம். மோரியப் பேரரசு செல்வாக்குப் பெற்றிருந்ததைப் பற்றியும், அவர்களின் செல்வாக்கு தமிழக எல்லை வரை வந்ததையும் அது எப்படி முறியடிக்கப்பட்டது என்பதையும் காட்டும் சான்றுகள் சங்கப்பாடல்களில் உள்ளன.

சங்க காலத்தில் பாடிய புலவர்களில் நாற்பதிற்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது சிறப்பு. குற மகள் இளவெயினியார், பாரிமகளிர், காவற்பெண்டு, காக்கைப்பாடினி நச்செள்ளையார், ஔவையார், வெள்ளி வீதியார், மதுரை ஓலைக் கடையத்தார் நல்வெள்ளையார் உள்ளிட்டவர்கள் தமிழ்ச் சமூகத்தின் வெவ்வெறு புன்புலங்களில் இருந்து வந்தவர்கள் என்பது இந்த இலக்கியத்தின் ஜனநாயகத்தன்மையை பறைசாற்றுகிறது.

சங்க இலக்கியங்களில் எங்குமே வெறுப்புணர்வு இல்லை, வேற்று நிலத்தின் மக்கள் இங்கே வருகிறபோது கூட அவர்களையும் நம் வாழ்வியலுடனும் மக்களுடனும் இணைக்கிற பல கூறுகளை நாம் காணலாம். இந்த நிலம் பன்மைத்துவமானது, இந்த நிலத்தில் பல மொழிகள், பல இனங்கள், பல நிலத்தவர்கள் ஒன்றுகூடியே வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை சங்க இலக்கியங்கள் அழுத்தமாக விவரிக்கிறது. நாம் என்கிற உணர்வை விதைக்கிற ஓர் இலக்கியமாகவே சங்க இலக்கியம் மலர்ந்திருக்கிறது.

இன்று நடைபெறும் பல்வேறு அகழாய்வுகளில் சாமானியர்கள் பயன்படுத்திய பானைகள் கிடைக்கின்றன. இந்தப் பானை ஓடுகளின் மேற்பரப்பிலும் உட்பரப்பிலும் தமிழ் எழுத்துக்கள், பெயர்கள் ஏராளமாக கிடைத்து வருகின்றன. இன்று நாம் கடையில் சில்வர், அலுமினிய பாத்திரங்கள் வாங்கியதும் அதில் பெயர் வெட்டுகிறோம் அல்லவா... இந்தப் பழக்கம் நமக்கு மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்து தொடர்ச்சியாக வருகிறது என்பதைத்தான் இது சுட்டிக்காட்டுகிறது. அத்துடன் சங்க காலத்திலேயே மக்கள் எழுத்தறிவு பெற்றிருந்தார்கள் என்பதையும் காட்டுகிறது.

இவ்வாறாக சங்க இலக்கியங்கள் மக்களின் வாழ்விலிருந்து முகிழ்த்து எழுந்த ஓர் இலக்கியமாக, மக்கள் முன் அரங்கேற்றப்பட்ட இலக்கியமாக, ஒரு நிலத்தின் மக்கள் அதனை ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக ஓர் எடுத்துக்காட்டாக, தங்களின் முன்னோர்களின் நினைவுகளின் சேமிப்பாக, தங்களுடன் ஒரு பொக்கிசமாக பாதுகாத்து ஒரு நெடும் பயணத்தின் சேமிப்பாக தலைமுறைகள் தாண்டியும் கடத்தியிருக்கிறார்கள். நிச்சயமாக சாமானியர்களை பற்றி பாடியதாலேயேதான் சாமானியர்கள் அனைவரும் இதனை தங்களின் சொத்தாகக் கருதி பாதுகாத்து இதன் தொடர்ச்சியை இன்று நமக்களித்துள்ளனர்.

Also Read: மதுர மக்கள் - 6 |"அதே பால், அதே சீனி, அதே பிசின்... ஆனா டேஸ்ட்?!" - 'பேமஸ் ஜிகர்தண்டா' ஜிந்தா மதார்

சங்க இலக்கியத்துக்கு முந்திய காலத்தில் தொல்காப்பியமும், சங்க காலத்திற்கு பிந்தைய இலக்கியங்களாக பதினெண் கீழ்க்கணக்கு நூல்களும் ஐம்பெரும் காப்பியங்களும் திகழ்கின்றன. உலக மொழியின் இலக்கணங்கள் யாவையும் எழுத்து - சொல் ஆகிய இரு வகைமைகளின் கீழ் ஒரு மொழி தன் சிறப்பை பேசியதற்கும் முன்பே தொல்காப்பியம் எழுத்து - சொல் - பொருள் ஆகிய மொழியின் புதிய பரிணாமத்தை உலகிற்கு வழங்கியது.

நாலடியார் நான்மணிக்கடிகை, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, களவழி நாற்பது, கார் நாற்பது, ஐந்திணை ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, திருக்குறள், திரிகடுகம், ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, சிறுபஞ்சமூலம், முதுமொழிக்காஞ்சி, ஏலாதி, கைந்நிலை ஆகியவை பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்.

சிலப்பதிகாரம், மணிமேகலை, குண்டலகேசி, வளையாபதி, சீவக சிந்தாமணி என்னும் காப்பியங்களை ஐம்பெருங் காப்பியங்கள் என அழைக்கிறோம்.

இளங்கோவடிகள்

சங்க கால மதுரையை வைகை ஆற்றின் வளத்தை, மதுரையில் இருந்த பாண்டிய மன்னரின் அரண்மனையை அதனைச் சுற்றிய தெருக்களை பரிபாடல் விவரிக்கிறது. மதுரை நகர மாடங்களை விவரிக்கிறது அகநானூறு. மதுரை அரண்மனையின் அமைப்பை நெடுநெல்வாடையின் வரிகள் நமக்கு காட்சிப்படுத்துகிறது. மதுரையில் இருந்த பெளத்த பள்ளிகள், சமணப் பள்ளிகள், ஆசீவகப் பள்ளிகள் குறித்து விரிவாக பேசுகிறது மதுரை காஞ்சி. மதுரையை அங்குலம் அங்குலமாக விவரிக்கிறது சிலப்பதிகாரம்.

சங்க காலத்து புலவர்களில் நக்கீரர், சீத்தலைச் சாத்தனார் என்று நீளும் பெரும் பட்டியலான புலவர்களில் முப்பத்தி ஒன்பது பேர் தங்களின் பெயர்களின் முன்னொட்டாக மதுரை என்கிற தங்களின் நகரத்தின் பெயரை இணைத்துள்ளனர். தமிழகத்தில் தலைச் சங்கம், இடைச் சங்கம் மற்றும் கடைச் சங்கம் என மூன்று சங்கங்கள் இருந்துள்ளது, அவை மூன்றும் பாண்டிய நாட்டிலேயே அமைந்திருந்தன. அதனால் தான் சங்கம் வளர்த்த மதுரை என்று இந்த நகரத்தை பெருமிதத்துடன் மக்கள் அழைக்கிறார்கள்.

ஒரு நிலத்தின் மக்கள் உயிர் மூச்சாக மொழியை சுவாசித்திருக்கிறார்கள் என்றால் அது உலகத்திலேயே மதுரை என்கிற வரலாற்று நகரத்திற்கு மட்டுமே பொருந்தும்.


source https://www.vikatan.com/arts/literature/the-glory-of-sangam-literature-and-how-madurai-was-its-capital

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக