Ad

திங்கள், 22 பிப்ரவரி, 2021

50, 69*, 91*, 93*, 99*... கண்டுகொள்ளாத ஐபிஎல் அணிகளை புலம்பவிடும் இந்த டெவன் கான்வே யார்?! #Conway

நியூஸிலாந்தில் டி20 தொடரைத்தொடங்கியிருக்கும் ஆஸ்திரேலியாவுக்கு முதல்போட்டியிலேயே மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்து வரவேற்றிருக்கிறது நியூஸிலாந்து கிரிக்கெட் அணி.

நேற்று க்றைஸ்ட்சர்சில் நடைபெற்ற டி20 போட்டியில் நியூஸிலாந்து வீரர் டெவன் கான்வே ஆடிய ஆட்டம் அனைவரையும் மிரளவைத்திருக்கிறது. மார்ட்டின் கப்ஷில், கேப்டன் வில்லியம்சன் உட்பட அணியின் முக்கிய பேட்ஸ்மேன்கள் அனைவரும் சொதப்பிய போதிலும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்று 59 பந்துகளில் 99 ரன்களை அடித்தார் கான்வே. ஒரே ரன்னில் சென்சுரி மிஸ் ஆனது.

நேற்றைய இன்னிங்ஸ் மட்டுமல்ல கடைசியாக விளையாடிய 5 டி20 போட்டிகளில் தொடர்ச்சியாக 5 அரைசதங்கள் அசால்ட்டாக அடித்திருக்கிறார் கான்வே. இதில் மூன்று 90+ ஸ்கோர்கள். சமீபத்திய டி20 சென்சேஷனாக உருவெடுத்திருக்கும் இந்த டெவன் கான்வே யார்??

டெவன் கான்வே நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் இல்லை. எலியாட், வேக்னர், காலின் மன்றோ வரிசையில் இவரும் தென்னாப்ரிக்காவைச் சேர்ந்தவர். தென்னாப்பிரிக்காவில் தொடர்ந்து 8 ஆண்டுகள் உள்ளூர் போட்டிகளில் ஆடியிருக்கிறார். ஆனால், தென்னாப்பாரிக்காவின் தேசிய அணியில் இடம்பிடிக்கமுடியவில்லை. தென்னாப்பிரிக்க கிரிக்கெட்டில் கடைபிடிக்கப்படும் பூர்வக்குடி வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டால் பல வெள்ளையின வீரர்கள் நியூஸிலாந்து, இங்கிலாந்து அணிகளில் விளையாட ஆர்வம் காட்டுகின்றனர். அந்த வரிசையில் வந்தவர்தான் டெவன் கான்வே.

டெவன் கான்வே

2017-ம் ஆண்டு முதல் நியூஸிலாந்தில் வெல்லிங்டன் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்தார். நியூஸிலாந்தில் ஆண்டுதோறும் நடைபெறும் சூப்பர் ஸ்மாஷ் டி20 தொடரிலும் வெல்லிங்டன் ஃபயர் பேர்ட்ஸ் அணிக்காக களமிறங்கி சிறப்பாக ஆடினார். கடந்த இரண்டு வருடங்களாக இந்த தொடரின் ப்ளேயர் ஆஃப் தி இயர் அவார்டை கான்வேதான் வென்றிருக்கிறார். இந்த ஆண்டு சூப்பர் ஸ்மாஷ் தொடரில் வெல்லிங்டன் அணிதான் சாம்பியன். இறுதிப்போட்டியில் 93 ரன்களை அடித்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் நின்றி வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக திகழ்ந்தார். இதன் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சர்வதேச டி20 தொடரில் நியூஸிலாந்துக்காக விளையாடும் வாய்ப்பு கிடைத்தது.

ஐசிசி கடந்த ஆண்டு மார்ச் மாதமே கான்வே நியூஸிலாந்து அணிக்காக ஆடுவதற்கான ஒப்புதலை அளித்துவிட்டது. கடந்த நவம்பரில் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டி20 போட்டியில் கான்வே அறிமுகமானார். அந்த போட்டியில் 29 பந்துகளில் 41 ரன்களை அடித்து அசத்தியிருந்தார். கான்வே திறமைமிக்க வீரராக இருந்தாலும் நேற்று ஆஸிக்கு எதிராக அவர் ஆடிய ஆட்டம்தான் அவர் மீது வெளிச்சத்தை பாய்ச்சியுள்ளது.

ஆஸ்திரேலிய அணி டாஸை வென்று பௌலிங்கைத் தேர்வு செய்தது. நியூசிலாந்து அணி சார்பில் கப்ஷிலும், சீஃபெர்ட்டும் ஓப்பனர்களாக களமிறங்கினர். முதல் ஓவரிலேயே அகரின் பந்துவீச்சில் கப்ஷில் டக் அவுட் ஆகி வெளியேறினார். அடுத்தடுத்து விக்கெட்டுகளும் விழுந்தது. முதல் நான்கு ஓவருக்குள்ளாகவே சீஃபெர்ட், கேப்டன் வில்லியம்சன் இருவரும் அவுட். பவர்ப்ளேவுக்குள் நியூஸிலாந்து அணியின் டாப் ஆர்டர் காலியாகிவிட்டதால் நியூஸிலாந்து சீக்கிரம் சுருண்டுவிடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கான்வே எல்லாவற்றையும் மாற்றத் தொடங்கினார். முதலில் ஆஸியின் அட்டாக்குக்கு கவுன்ட்டர் அட்டாக் கொடுத்தவர், அதன்பின்னர் கிளென் ஃபிலிப்ஸ் கொஞ்சம் அடித்து ஆடும்போது அவருக்கு சப்போர்ட்டாக நின்று ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து கொண்டிருந்தார்.

ஃபிலிப்ஸ் அவுட் ஆன பிறகு, நீஷம் உள்ளே வந்தார். அவரும் தொடக்கத்திலேயே அடித்து ஆட முற்பட அவருக்கும் இடத்தை கொடுத்து ஒத்துழைத்து ஆடினார். அதன்பிறகு கடைசி 3 ஓவர்களில் மொத்தமாக அதிரடியில் வெளுத்துக்கட்டினார். கடைசி 2 ஓவர்களில் மட்டும் 33 ரன்கள் வந்தது. கடைசி மூன்று பந்துகளில் கான்வே சதமடிக்க 12 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு பவுண்டரி மற்றும் சிக்சர் அடித்தவரால் கடைசி பந்தில் ஒரு ரன் மட்டுமே அடிக்க முடிந்தது. 99 ரன்களில் நாட் அவுட்டாக இருந்தார். சதமடிக்க முடியாவிட்டாலும் நியூசிலாந்து அணிக்காக மிக முக்கிய இன்னிங்ஸை ஆடியிருக்கிறார் கான்வே. 120-130 ரன்களைக் கூட எட்டவாய்ப்பில்லை என தோன்றிய நிலையில் நியூஸிலாந்தை 184 ரன்களை தொட வைத்தார் கான்வே.

டெவன் கான்வே

நியூஸிலாந்து பௌலர்களும் சிறப்பாக பந்து வீசி ஆஸியை 131 ரன்களுக்கு ஆல் அவுட்டாக்க, முதல் டி20 போட்டியை வென்றது நியூஸிலாந்து அணி.

நான்கு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் கான்வேயின் ஆரம்ப விலை 50 லட்சம்தான். ஆனால், இந்த விலைக்கே எந்த அணியும் கான்வே-வை ஏலத்தில் எடுக்காமல் அமைதி காத்தன. இப்போது கான்வேயை எடுக்கத்தவறிவிட்டோம் என எல்லா அணிகளும் புலம்புகின்றன. அடுத்த ஐபிஎல்-ல் பல மில்லியன்களை கான்வே குவிப்பார் என எதிர்பார்க்கலாம்!



source https://sports.vikatan.com/cricket/who-is-devon-conway

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக