Ad

வியாழன், 19 நவம்பர், 2020

எதிரும் புதிருமாக அப்பா மகன்... அபி வீட்ல அடுத்த கலாட்டா ஆரம்பிச்சிடுச்சே! #VallamaiTharayo

அபியின் வீட்டுக்குள் சேதுராமன் நுழைந்ததும் அவரின் அப்பாவும் அம்மாவும் அதிர்ச்சியடைகிறார்கள். அம்மா, அப்பாவைப் பார்த்து சேதுராமனும் அதிர்ச்சியடைகிறார். `நீங்கள் சென்னை வரும் விஷயத்தை ஏன் என்னிடம் சொல்லவில்லை' என்று கேட்கிறார். `சொன்னால், ஃப்ளைட்டில் டிக்கெட் எடுத்து அனுப்பிவிடுவாயா' என்று கேட்கிறார் சேதுராமனின் அப்பா.

அபிக்கு பதில் தானே ஹாஸ்பிடலுக்கு அழைத்துச் செல்வதாகச் சேதுராமன் சொன்னவுடன், அப்பாயின்மென்ட்டையே கேன்சல் செய்துவிடுகிறார் அப்பா. இப்படி அப்பாவும் மகனும் ஏட்டிக்குப் போட்டியாகப் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். அப்போது அபியின் மகள், “மாமா, நீங்களாவது கொஞ்ச நாள் இருப்பீங்களா? அனு ஆன்ட்டி மூணு நாள் தங்கறேன்னு சொல்லிட்டு ஒரே நாள்ல போயிட்டாங்க” என்று குழந்தைக்குரிய இயல்பான ஆவலில் கேட்கிறாள்.

Vallamai Tharayo

பெரியம்மாவும் பெரியப்பாவும் அபியைப் பார்க்க, அவள் சமாளிக்கிறாள். `அது உண்மையா' என்று பேத்தியிடம் கேட்க, சேதுராமனுக்குக் கோபம் வருகிறது. பெரியவர்களுக்கு ஒரு விஷயத்தில் சந்தேகம் வந்துவிட்டால், இப்படித்தான் `துப்பறியும் சாம்பு'வாக மாறி விசாரிப்பார்கள். அது சம்பந்தப்பட்டவரைச் சங்கடப்படுத்தும் என்றுகூட நினைக்க மாட்டார்கள்.

“நல்லவேளை மாப்பிள்ளை ஊரில் இல்லை. இல்லைன்னா சேதுராமனைப் பார்த்து காறித் துப்பியிருப்பார்” என்று வழக்கம் போல மகன் மீதுள்ள வெறுப்பில் பேசுகிறார், அவரின் அப்பா. சமூகப்பணி. இயக்க வேலைகளில் இருப்பவர்களைப் பெரும்பாலான வீடுகளில் மதிக்க மாட்டார்கள். அவர்கள் சமூக மாற்றத்துக்காக வேலை செய்துகொண்டிருப்பார்கள். ஆனால், சொந்த வீட்டில் எந்த மாற்றத்தையும் உருவாக்க இயலாதவர்களாகவும் குடும்பத்தினருக்கு எதிரிகளாகவும் மாறிவிடுவார்கள். இதற்கு முக்கியமான காரணம் வருமானம். அது மட்டும் இருந்துவிட்டால், இயக்க வேலையை ஒரு வேலையாக எண்ணி, கண்டுகொள்ளாமல் விட்டுவிடும் குடும்பம்!

Vallamai Tharayo

பெரியம்மா கோயிலுக்குப் போக வேண்டும் என்கிறார். சேதுராமன் அழைத்துச் செல்வதாகச் சொல்லவும் அவரின் அப்பா வர மறுக்கிறார். “கோயிலுக்கே வராதவன் கோயில் வாசலுக்காவது வர்றேன்னு சொல்றானே, வாங்க போகலாம்” என்று பெரியம்மா சொல்லவும் மூவரும் கிளம்புகிறார்கள்.

குழந்தைகள் பூங்காவில் விளையாடிக்கொண்டிருக்கிறார்கள். பெஞ்சில் தனியாக உட்கார்ந்திருக்கும் அபியிடம் வரும் ஹர்ஷிதா, “என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்கிறாள்.

“ஆரம்பத்தில் தவறாக நினைத்தேன். உங்க கதையைக் கேட்ட பிறகு என் எண்ணம் மாறியிருக்கு. ஆனால், இப்பவும் எனக்கு அபிப்ராயம் எதுவும் இல்லை” என்று அபி சொல்ல, அனு மாதிரி நல்ல தோழி இருந்திருந்தால் தன் வாழ்க்கையும் வேறு மாதிரி இருந்திருக்கும் என்கிறாள் ஹர்ஷிதா.

பக்கத்து வீட்டு கிரஹப்பிரவேசத்துக்கு பெரியம்மா, பெரியப்பா, குழந்தைகளுடன் செல்கிறாள் அபி. அந்த வீட்டுக் குழந்தைகளைப் பற்றி விசாரிக்க, அமைதியாகிறார்கள் அந்தத் தம்பதி. என்ன காரணம்?

இன்று இரவு 7 மணிக்குப் பார்க்கலாம்!

- எஸ்.சங்கீதா



source https://cinema.vikatan.com/women/vallamai-tharayo-digital-daily-series-readers-review-for-episode-18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக