Ad

சனி, 7 நவம்பர், 2020

ஈ சாலா இல்லை... அடுத்த சாலா கப் நம்தே... பெங்களூரு பார்சல் ஆன கதை! #SRHvRCB

`மிடில் ஆர்டர்னா என்னங்கய்யா' என கேட்கக்கூடிய அணிகள்தான் இரண்டுமே. இருந்தாலும், சீசன் துவக்கத்தில் வண்டு முருகனாக வலம்வந்த ஆர்சிபி, கடைசி மூன்று மேட்சுகளாகதான் வவுத்துலேயே மிதி வாங்கி நண்டு முருகன் ஆகிவிட்டது. சன்ரைசர்ஸ் அணியோ, திடீரென கொடுக்கு முளைத்த புள்ளப்பூச்சியைப் போல் கொலைவெறியுடன் திரிந்துகொண்டிருக்கிறது. எலிமினேட்டரிலாவது ஆர்சிபி தன்னை மீட்டெடுக்குமா அல்லது சன்ரைசர்ஸே மீண்டும் சம்பவம் அடிக்குமா? என ஆவலோடு காத்திருந்தார்கள் ஐபிஎல் ரசிகர்கள்.

நேற்று அபுதாபியில் நடைபெற்ற இந்த ஐபிஎல் சீசனில் எலிமினேட்டர் சுற்றில், ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர், பெளலிங்கைத் தேர்ந்தெடுத்தார். காயம் காரணமாக இப்போட்டியில் சாஹா விளையாடவில்லை. அவருக்கு பதிலாக ஶ்ரீவத்ஸ் கோஸ்வாமி அணியில் இணைந்தார். சாஹா இல்லாததுபோல் சோகம் உண்டோ என வருத்தத்தில் ஆழ்ந்தார்கள் ஐதராபாத் வாசிகள். இந்தப் பக்கம், க்றிஸ் மோரிஸுக்கு பதிலாக ஆடம் ஸாம்பா, ஜோஷ் ஃபிலிப்புக்கு பதிலாக ஆரோன் ஃபின்ச், சபஷ் அகமதுக்கு பதிலாக நவ்தீப் சைனி மற்றும் இஸிரு உடானாவுக்கு பதிலாக மொயின் அலி என எக்கசக்க மாற்றங்கள். மாற்றம், முன்னேற்றம், ஆர்.சி.பி!

இந்த சீசனில் முதல்முறையாக கோலியும் படிக்கல்லும் ஆர்சிபி-யின் இன்னிங்ஸை ஓப்பன் செய்தார்கள். சந்தீப் ஷர்மா முதல் ஓவரை வீசினார். பவுண்டரிகள் ஏதுமின்றி ஐந்து ரன்கள். இரண்டாவது ஓவரை வீசவந்தார் ஹோல்டர். இரண்டாவது பந்திலேயே கோலி அவுட்! ஓயாத அலைகள் ஒடிந்துப்போய் நிற்க, பறக்கும் புள்ளினங்கள் துவண்டுபோய் நிற்க, வீசும் காற்று விரக்தியில் நிற்க, ஆர்.சிபி ரசிகர்கள் நெஞ்சைப் பிடித்தார்கள். 6 ரன்னில் வெளியேறினார் கேப்டன் கோலி. 4வது ஓவரை வீச, மீண்டும் ஹோல்டரே வந்தார். இம்முறை, படிக்கல்லை உடைத்துவிட்டார். ஆர்.சி.பி ரசிகர்கள், பேரமைதிக்கு மத்தியில் போர்வையைப் போத்திக்கொண்டு படுத்தார்கள். சந்தீப் வீசிய 5வது ஓவரில், எக்ஸ்ட்ரா கவர் திசையில் ஒரு பவுண்டரியை விரட்டிவிட்டார் ஃபின்ச். `ப்ச்ச்ச்' என சோகத்தில் மூழ்கியிருந்தார் ஆர்.சி.பியர்கள். 6வது ஓவரை வீசினார் நம்ம ஊர் நட்டு. அவர் பந்திலும் ஒரு பவுண்டரியைத் தட்டினார் ஃபின்ச். பவர் ப்ளேயின் முடிவில், 32/2 என தவழ்ந்துக்கொண்டிருந்தது ஆர்.சி.பி.

நதீம் வீசிய 7 மற்றும் 9வது ஓவர்களிலும், ரஷீத் வீசிய 8வது ஓவரிலும் பவுண்டரி ஏதும் கிட்டவில்லை. ரஷீத் வீசிய 10வது ஓவரில், படக்கென ஒரு சிக்ஸரைப் போட்டார் ஃபின்ச். இந்த சிறிய சந்தோஷத்துக்கு பெரிய விலையாக, இரண்டு விக்கெட்களை அடுத்த ஓவரிலேயே இழந்தது ஆர்.சி.பி! பொறுப்பாக ஆடிக்கொண்டிருந்த ஃபின்ச் விக்கெட்டைத் தூக்கினார் நதீம். அடுத்து வந்த மொயின் அலியோ, ரன் அவுட். நதீம் வீசிய 13வது ஓவரில், லாங் ஆன் திசையில் மிஸ் ஃபீல்ட் செய்யப்பட, டி வில்லியர்ஸுக்கு ஒரு பவுண்டரி கிடைத்தது. பாவத்த! நடராஜன் வீசிய 14வது ஓவரில் இன்னுமொரு பவுண்டரியைத் தட்டினார். ரஷீத் வீசிய 15வது ஓவரில், லாங் லெக்கில் ஒரு பவுண்டரியை அள்ளிப்போட்டார் டி வில்லியர்ஸ். ஹோல்டர் வீசிய, 16வது ஓவரில், க்ரூப்புல டூபே அவுட். வார்னரிடம் கேட்ச் கொடுத்துவிட்டு கிளம்பினார். அதே ஓவரில், ஆர்சிபி காதுக்கு வந்த ஒற்றை நற்செய்தியான `அரைசதம் கடந்தார் டி வில்லியர்ஸ்' எனும் சம்பவம் நிகழ்ந்தது.

18-வது ஓவரை வீச யார்க்கர் நட்டு வந்தார். முதல் பந்தில், வாஷிங்டன் விக்கெட்டைக் கழட்டினார். அதே ஓவரின், ஐந்தாவது பந்தில் ஸ்டெம்ப்களைத் தெறிக்கவிட்டார். பாவம், ஸ்டம்புக்கு முன்பு நின்றுக்கொண்டிருந்தது டி வில்லியர்ஸ். முக்கியமான ஒரு இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. ஹோல்டர் வீசிய 19வது ஓவரில், வெறும் 5 ரன்கள் மட்டுமே கிடைத்தது. நட்டு வீசிய கடைசி ஓவரில், சைனி ஒரு பவுண்டரியும் சிராஜ் ஒரு பவுண்டரியும் விரட்டி, ஆர்சிபி அணிக்கு ஏதோ ஸ்டேட்மன்ட் கொடுத்தனர்.

132 என்பது எளிய இலக்குதான். இருந்தாலும், ஐதராபாத் அணியின் முந்தைய ரெக்கார்டுகளை நினைக்கும்போது ரசிகர்களுக்கு கொஞ்சம் `கெதக்' என்றுதான் இருந்தது. கோஸ்வாமியும் வார்னரும் ஓபனிங் இறங்க, முதல் ஓவரை வீசினார் முகமது சிராஜ். 4வது பந்திலேயே கோஸ்வாமி அவுட். ஆர்.சி.பி ரசிகர்கள் அலறினார்கள். மீண்டும் 3வது ஓவரை வீசவந்தார் சிராஜ். மிட் விக்கெட் திசையில் ஒரு சிக்ஸரை வெளுத்து பனிஷ் பண்ணினார் மனீஷ். அத்தோடு விடவில்லை. சைனி வீசிய 4வது ஓவரில், இரண்டு பவுண்டரிகள் பறந்தன. வாஷிங்டன் வந்தார். முதல் பந்திலேயே பவுண்டரியை விரட்டினார் மனீஷ். 3-வது பந்திலும் மிட் ஆஃப் திசையில் பவுண்டரி கிட்டியது. சிராஜ் வீசிய 6வது ஓவரில், இரண்டு பவுண்டரிகளை விறுவிறுவென விரட்டிவிட்டு, நூலிழையில் அவுட்டாகி கிளம்பினார் வார்னர். ஐதராபாத் ரசிகர்களுக்கு கண்கள் வியர்த்தன.

அடுத்த ஏழு ஓவர்களும் சாஹலும், அரே ஓ ஸம்பாவும் ஐதராபாத் அணியை ஒரு வழி செய்தார்கள். இருவரும் சேர்ந்து `பிதாமகன்' படத்தில் பலாப்பழத்தை உறிப்பதுபோல் ஐதராபாத் அணியை உறித்தெடுத்தார்கள். ஒரு பவுண்டரி கூட கிடைக்கவில்லை. இந்த கேப்பில் பாண்டேவின் விக்கெட்டை ஸம்பாவும், கார்கின் விக்கெட்டை சாஹலும் தூக்கியிருந்தார்கள். `அப்போ அபுதாபி காத்து இன்னைக்கு அரபிக்கடலோரம் வீசுது' என சந்தோஷம் அடைந்தார்கள் ஆர்.சி.பியர்கள். 14வது ஓவரில், வில்லியம்சனுக்கு ஒரு சிக்ஸர் கிடைத்தது. வாஷிங்டன் வீசிய பந்தை, டீப் மிட் விக்கெட் திசையில் பறக்கவிட்டார். 15 ஓவர் முடிவில், 87/4 என நெருக்கமாக போய்க்கொண்டிருந்தது மேட்ச். 30 பந்துகளில் 45 ரன்கள் தேவை.

சஹால் வீசிய 16வது ஓவரில், டீப் மிட் விக்கெட் திசையில் இன்னொரு சிக்ஸரை விளாசினார் கேன் வில்லியம்சன். 17வது ஓவரை வீசவந்த டூபே, ஒரு பவுண்டரியைக் கொடுத்துவிட்டுப் போனார். சைனி வீசிய 18வது ஓவரில், வில்லியம்சனுக்கு இன்னொரு பவுண்டரி கிட்டியது. சிராஜ் வீசிய 19வது ஓவரில், ஹோல்டர் ஒரு பவுண்டரியைப் போட்டார். 6 பந்துகளில் இன்னும் 9 ரன்கள் தேவை. கடைசி ஓவரை வீசவந்தார் சைனி. முதல் பந்தில் ஒரு சிங்கிளைத் தட்டிவிட்டு தனது அரைசதத்தை நிறைவு செய்தார் வில்லியம்சன். அந்தப்பக்கம், தொடர்ந்து இரு பவுண்டரிகளை விளாசி மேட்சை முடித்தார் ஹோல்டர்.

6 விக்கெட் வித்தியாசத்தில் ஆர்.சி.பியை எலிமினேட்டரில் வென்று, குவாலிஃபையருக்கான எஸ்கலேட்டரில் ஏறியது சன்ரைசர்ஸ். `தேவ்தத் படிக்கல், முகமது சிராஜ் போன்றோருக்கு இது நல்ல சீசனாக அமைந்தது. சஹாலும் டி வில்லியர்ஸும் எப்போதும் போல் சிறப்பாக ஆடினார்கள். ஈ சாலா விடுங்கள், அடுத்த சாலா கப் நம்தே' என்றார் கோலி. "இன்னைக்கு காலையில்தான் நம்ம நட்ராஜனுக்கு பெண் குழந்தை பிறந்திருக்கு. மாலையில், மிகச்சிறப்பா பந்து வீசியிருக்கார் நம்மாளு. இதைவிட வேறென்ன கிஃப்ட் கொடுக்கமுடியும்! திரும்பி வருவோம்னு சொன்னேன், வந்துட்டோம். ஜெயிப்பேன்னு சொன்னேன், கண்டிப்பா ஜெயிப்போம்'' என்றார் வார்னர். கேன் வில்லியம்சனுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது!



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-sunrisers-hyderabad-vs-royal-challengers-bangalore-match-report

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக