Ad

வெள்ளி, 6 நவம்பர், 2020

ஆந்திரா: பள்ளிகள் திறப்பு... 575 மாணவர்கள், 829 ஆசிரியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி!

ஆந்திராவில் அரசுப் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் நவம்பர் 2-ம் தேதி திறக்கப்பட்டன. உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்ட மூன்று நாள்களுக்குள், 575 மாணவர்கள் மற்றும் 829 ஆசிரியர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று காரணாமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, படிப்படியாகத் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த 8 மாதங்களாக கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டு, மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.

இந்நிலையில், நவம்பர் 2 ம் தேதி ஆந்திர மாநிலத்தில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மீண்டும் திறக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக 40 சதவிகித மாணவர்கள் மட்டுமே வகுப்புகளுக்கு வரத் தொடங்கியுள்ளதாக அதிகாரிகள் கண்டறிந்தனர்.

கொரோனா

ஆந்திரா மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், பள்ளிக்கு வருகை தரும் மாணவர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் அரசால் மேற்கொள்ளப்பட்டது. இருப்பினும், பள்ளிக்கு வருகை தந்த 829 ஆசிரியர்களுக்கும், 575 மாணவர்களுக்கும் நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இச்சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: அச்சுறுத்தும் கொரோனா 2-வது அலை... பள்ளிகள் திறக்கும் முடிவைத் திரும்பப் பெறுமா தமிழக அரசு?

ஆந்திர கல்வித்துறை புள்ளிவிவரங்களின்படி, 9 மற்றும் 10 ஆம் வகுப்புகளில் 9.75 லட்சம் பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் உள்ளனர். கடந்த நவம்பர் 4-ம் தேதி அவர்களில் 3.93 லட்சம் மாணவர்களும், 1.11 லட்சம் ஆசிரியர்களில், 99,000 ஆசிரியர்களும் பள்ளிக்கு வருகை தந்துள்ளனர். நவம்பர் 5-ம் தேதி, மாநிலத்தில் 99.2 சதவீத உயர்நிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், 89.92 சதவீத ஆசிரியர்கள் வகுப்புகளுக்குச் சென்று பாடம் எடுக்கத் தொடங்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய, பள்ளிகல்வித் துறை ஆணையர் வி.சின்ன வீரபத்ருது (Chinna Veerabhadrudu), ``பள்ளியில் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும்போது இந்த புள்ளிவிவரங்கள் ஆபத்தானவை அல்ல. கோவிட்-19 பாதுகாப்பு நெறிமுறைகள் முறையாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஒரு வகுப்பறையில் 15-16 மாணவர்கள் மட்டுமே குழுவாக உள்ளனர்.

நவம்பர் 4-ம் தேதி, நான்கு லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர். ஆனால் 262 மாணவர்களுக்கு மட்டுமே நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது 0.1% கூட இல்லை. 1.11 லட்சம் ஆசிரியர்களில், சுமார் 160 ஆசிரியர்களுக்கு மட்டுமே நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. பள்ளிகளுக்கு வருவதால் மட்டுமே அவர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று சொல்வது சரியானதல்ல. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வாழ்க்கை எங்களுக்கு முக்கியம்.

பள்ளி மாணவர்கள்

ஆன்லைன் கல்வியைப் பெற வாய்ப்பில்லாத பொருளாதாரரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்காகப் பள்ளிகளை மீண்டும் திறப்பது முக்கியம். பள்ளிகள் திறக்கப்படாத சூழல் காரணமாக பழங்குடியினர் மற்றும் கிராமப்புறங்களைச் சேர்ந்த மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறவும், திருமணம் செய்து கொள்ளவும் அழுத்தம் கொடுக்கப்படலாம்" என்றார்.

இச்சம்பவம் குறித்து பள்ளிகல்வித் துறை அமைச்சர் அதிமுபாலு சுரேஷ் கூறுகையில், ``இதுகுறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் முறையான பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றன. ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பள்ளியில் இருக்கும்போது வைரஸால் பாதிக்கப்படுவது மிகவும் குறைவு. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட மாணவர்களின் மன ஆரோக்கியம் தொடர்பாக ஆலோசனை வழங்க இருக்கிறோம். அவர்களது மன அழுத்தத்தைப் போக்க மனநல பயிற்சியாளர்கள் மற்றும் உளவியல் பேராசிரியர்கள் மூலம் பயிற்சி அளிக்கப்படும்’’ என்றார்.



source https://www.vikatan.com/government-and-politics/education/students-and-teachers-test-covid-19-positive-after-schools-reopen-in-andhra-pradesh

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக