Ad

சனி, 7 நவம்பர், 2020

தஞ்சை: துரைக்கண்ணு ஆதரவாளர்கள் கைது; 5 பேர் பினாமியா? - பிரமிக்கவைக்கும் பின்னணி!

வேளாண்மைதுறை அமைச்சர் துரைக்கண்ணு மறைவிற்கு பிறகு பணம் விவகாரம் தொடர்பாக அவரிடம் நெருக்கமாக இருந்தவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த நிலையில் துரைக்கண்ணு மகன் அய்யப்பன் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க நேரம் கேட்டு காத்திருக்கிறார். அதன் பிறகு இந்தப் பிரச்னை முடிவிற்கு வரும் என அவரது ஆதரவாளர்கள் மத்தியில் பேசப்படுகிறது.

முதல்வருடன் துரைக்கண்ணு

வேளாண்மைதுறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பலனின்றி, கடந்த 31-ம் தேதி இரவு அவர் உயிரிழந்தார். இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட பாபநாசத்தில் உள்ள அவரது சொந்த ஊரான ராஜகிரி வன்னியடி சாலையில் உள்ள அவருக்கு சொந்தமான தோப்பிலேயே துரைக்கண்ணு உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

திடீரென துரைக்கண்ணு மறைந்ததால் பாபநாசம் தொகுதி மக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் ஏற்பட்ட சோகம் இன்னும் மறையவில்லை. அதே நேரத்தில் பணம் வரவு, செலவு கணக்குகளில் அ.தி.மு.க தலைமைக்கும், துரைக்கண்ணு குடும்பத்திற்கும் இடையே மனக்கசப்பு நிலவி வருவதாகவும் கூறப்படுகிறது. அ.தி.மு.க-வின் தஞ்சை வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையில் செயலாளராக உள்ள துரைக்கண்ணுவின் இளையமகன் அய்யப்பனிடம் முதல்வர் தரப்பு பணம் குறித்த கணக்குகளைக் கேட்டதாகத் தெரிகிறது.

இறுதி அஞ்சலி நிகழ்ச்சியில்

அய்யப்பன், `எங்க அப்பா பணம் வரவு செலவு குறித்து எங்களிடம் தையும் தெரிவிக்கவில்லை. யாரிடம் எந்தப் பணம் இருக்கிறது என்ற விவரம் எதுவும் எங்களுக்குத் தெரியாது’ எனப் பதில் கூறியதாகச் சொல்கிறார். இது முதல்வர் தரப்பைக் கடும் கோபத்துக்கு ஆளாக்கியது. அ.தி.மு.க-வைத் தாண்டி மாற்றுக் கட்சியைச் சேர்ந்த சிலரிடம் துரைக்கண்ணு நெருக்கமாக இருந்துள்ளார் இந்த தகவலும் மேலிடத்துக்குச் சென்றது.

Also Read: தஞ்சாவூர்: `எளிமையே உயர்த்தியது!’ - அமைச்சர் துரைக்கண்ணு மறைவால் உருகும் தொகுதி மக்கள்

இதையடுத்து துரைக்கண்ணுவிடம் நெருக்கமாக இருந்த கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவர் பெரியவன் என்கிற முருகன், அ.ம.மு.கவின் தஞ்சை வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சுரேஷ்குமார், கும்பகோணம் முன்னாள் நகர பா.ம.க செயலாளர் பாலகுரு, அகில இந்திய முக்குலத்தோர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் வேதா செல்வம், முருகனின் சகோதரி மகன் அய்யர் என்கிற சக்திவேல் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். நேற்று முன்தினம் இரவு கைது செய்யப்பட்ட அவர்களிடம் போலீஸார், தனித்தனி இடத்தில் வைத்து விசாரித்ததாகத் தகவல் வெளியானது.

கைது செய்யப்பட்ட பெரியவன் முருகன்

இதனைத் தொடர்ந்து சுரேஷ்குமார், வேதா செல்வம் ஆகியோர் புதுக்கோட்டை சிறையிலும், பெரியவன் முருகன், பாலகுரு, அய்யர் என்கிற சக்திவேல் ஆகிய மூன்று பேரும் தஞ்சாவூர் சிறையிலும் அடைக்கப்பட்டனர். மேலும், துரைக்கண்ணு குடும்பத்தினரும் கண்காணிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து தஞ்சை அ.தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம். ``கைது செய்யப்பட்டுள்ள 5 பேருமே வெளியே தெரியாத வகையில் துரைக்கண்ணுவிடம் மிக நெருக்கமாக இருந்தவர்கள். பிரச்னைக்குரிய இடங்களை பேசி, மிரட்டி அவற்றை துரைக்கண்ணுக்கு பினாமி பெயரில் வாங்கி கொடுத்துள்ளனர். துரைக்கண்ணு பெயரைப் பயன்படுத்தியும் இவர்கள் பல வேலைகள் செய்தனர். ஆனால், அவர் அதனைக் கண்டு கொள்ளவில்லை.

வக்கீல் சுரேஷ்குமார்

தனியார் பள்ளி, விவசாய நிலங்கள், திருமண மண்டபம் என துரைக்கண்ணு வாங்கிக் குவித்த சொத்து பட்டியல் பெரிதாக நீளும். இவற்றை பினாமி பெயரிலேயே துரைக்கண்ணு வாங்கியதாகக் கூறப்படுகிறது. வழக்கறிஞர் சுரேஷ்குமார் செல்வாக்கு மிகுந்தவர். இவர் மற்றும் பெரியவன் தலைமையிலேயே இந்த அணி செயல்பட்டுள்ளது.

Also Read: தஞ்சை: `வரவு, செலவுக் கணக்கு; கைவிரித்த மகன்?’ - துரைக்கண்ணு ஆதரவாளர்கள் கைது பின்னணி

சாதரணமாக இருந்த பெரியவன் முருகன் இன்றைக்கு கோடீஸ்வரனாக வலம் வருவதற்கு காரணம் அமைச்சர் துரைக்கண்ணு. தனக்கு விசுவாசமாக இருந்ததால் பெரியவன் முருகனுக்கு தமிழ்நாட்டிலேயே பெரிய மார்கெட்டான தாரசுரம் காய்கறி மார்கெட்டை மூன்றரை கோடி ரூபாய்க்கு சத்தமில்லாமல் ஏலம் எடுத்து கொடுத்ததுடன், அ.தி.மு.க-விலும் இணைத்து கொண்டார் துரைக்கண்ணு.

வேதா செல்வம்

சுரேஷ்குமார், பெரியவன் முருகன், வேதா செல்வம் ஆகியோர் துரைக்கண்ணுவின் பினாமி என்றே சொல்லப்படுகிறது. இவர்களுடன் அய்யப்பனும் வெளியே தெரியாமல் நெருக்கமாக இருந்து வந்துள்ளார். இந்நிலையில் வர இருக்கும் சட்டமன்றத் தேர்தல் செலவுகளுக்காகவும், நிர்வாகிகளுக்கு கொடுப்பதற்கும் பெரும் தொகை முதல்வர் தரப்பிலிருந்து துரைக்கண்ணுவிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது. யாரிடம் எவ்வளவு பணம் கொடுக்கப்பட்டது என்பதற்கான கணக்கு முழுமையாக வந்து சேரவில்லை.

இதில் பெரும் தொகையை துரைக்கண்ணு தரப்பில் யார் வசமோ இருக்கிறது என தலைமை நினைக்கிறது. மேலும், துரைக்கண்ணு சொத்துக்கள் குறித்து வெளியாகும் தகவல்கள் அதிர்ச்சியளிக்க கூடியவையாக இருக்கிறது. இவை அனைத்தையும் தெரிந்து கொள்ளவே இவர்கள் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்படுகின்றனர். மேலும் பலர் கண்காணிப்பில் உள்ளனர்’’ என்று தெரிவித்தனர்.

பாலகுரு

துரைக்கண்ணு ஆதரவாளர்கள் தரப்பில் விசாரித்தோம். ``துரைக்கண்ணு, அவரது மகன் அய்யப்பன் ஆகியோர் எப்படிப்பட்டவர்கள் என்பது முதல்வர் தரப்புக்கு நன்றாகவே தெரியும். கட்சியில் சீனியரான வைத்திலிங்கத்திடம் பணம் கொடுக்காமல் எப்படி கட்சித் தலைமை துரைக்கண்ணுவிடம் கொடுப்பார்கள்? அவருடைய குடும்பமோ, அய்யப்பனோ வளர்ந்துவிடக்கூடாது என சிலர் வதந்திகளைப் பரப்பில் வருகின்றனர்.

`வதந்திகளுக்கு சக்தி அதிகம். ஆனால், ரொம்ப நாள் நீடிக்காது. நிச்சயம் உண்மைகள் வெளிவரும்’’ என்று தனக்கு நெருக்கமானவர்களிடம் அய்யப்பன் கூறி வருகிறார். அதே நேரத்தில் துரைக்கண்ணு படத் திறப்புவிழா தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க நேரம் கேட்டிருப்பதுடன், இதற்காக தனக்கு கொரோனா பரிசோதனையும் செய்து கொண்டு காத்திருக்கிறார் அய்யப்பன். அவர் முதல்வரைச் சந்தித்த பிறகு, இதுதொடர்பான பிரச்னைகள் முடிவுக்கு வரும்’’ என்று தெரிவித்தனர்.



source https://www.vikatan.com/news/politics/minister-doraikannus-son-ayyappan-to-meet-cm-eps-amid-arrest-controversies

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக