Ad

வெள்ளி, 13 நவம்பர், 2020

ஈரோடு: பட்டாசுகளால் மட்டும்தான் சுற்றுச்சூழல் மாசுபடுகிறதா? - உரிமையாளர்கள் வேதனை #SpotVisit

கடந்த எட்டு மாத காலமாக நிலவி வந்த தொழில் முடக்கம் காரணமாக பொதுமக்களிடையே பணபுழக்கமானது பெரிதும் குறைந்திருந்தது. பொதுமுடக்கமானது தளர்த்தப்பட்டாலும் கொரோனாவின் தாக்கமானது இன்னும் குறைந்தபாடில்லை. `கொரோனா காலக்கட்டத்தில் வரும் தீபாவளிப் பண்டிகையை மக்கள் எவ்வாறு கொண்டாடப்போகிறார்கள்? இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையை எதிர்கொள்ளும் அவர்களின் மனநிலை எவ்வாறாக இருக்கிறது? கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்தாண்டு பட்டாசு விற்பனை எவ்வாறாக உள்ளது?’ போன்ற கேள்விகளுக்கு விடையறிய ஈரோடு மாவாட்டத்திலுள்ள பட்டாசுக் கடைகளுக்கு ஒரு ரவுண்ட்-அப் அடித்தோம்.

பட்டாசு

கொரோனா காலத்தில் இந்த தீபாவளிப் பண்டிகையை மக்கள் எவ்வாறு கொண்டாட விரும்புகிறார்கள்?, பட்டாசுகளின் விலையில் ஏதாவது மாற்றங்கள் ஏற்பட்டுள்ளனவா? பசுமை பட்டாசுகளுக்கான வரவேற்பு எப்படி உள்ளது?, விற்பனை எவ்வாறு உள்ளது? போன்ற பொதுவான கேள்விகளை ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பட்டாசுக் கடைகளை வைத்திருக்கும் உரிமையாளர்களிடம் முன்வைத்தோம். ஈரோடு மாவட்ட ஸ்பெஷல் ஸ்பாட் விசிட் ரிப்போர்ட் இங்கே!

ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தளவில் கொரோனாவின் தாக்குதலுக்கு முதன்முதலில் பல்வேறு பாதிப்புகளைச் சந்தித்தாலும், அதன் பின்னர் நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. இந்தாண்டு தீபாவளிப் பண்டிகையையொட்டி துணிக்கடைகளிலும், பலகாரக் கடைகளிலும் புதுத் துணிகள் எடுப்பது, இனிப்புகள் வாங்குவது என பரவலாக எல்லா இடங்களிலும் மக்களின் வழக்கமான கூட்டமே தென்பட்டது. ஆனால், தீபாவளின் முக்கிய அம்சமாக கருதப்படும் பட்டாசு விற்பனையில் வழக்கமான சுறுசுறுப்பு இல்லை என்பது கண்கூடாகத் தெரிந்தது.

பட்டாசு

பட்டாசுக் கடைகளை விசிட் அடிக்கக் கிளம்பினோம். முதலில் இடையன்காட்டு வலசு பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ சக்தி பட்டாசு கடைக்கு சென்றோம். அக்கடையின் உரிமையாளர் துரைமுருகன் நம்மிடம் பேசுகையில், ``இந்த வருஷம் தீபாவளி ரொம்பவே டல்தாங்க. போன வருஷம் 5 லட்ச ரூபாய்க்கு பட்டாசு பர்சேஸ் பண்ணினோம். ஆனா, இந்த முறை 2 லட்ச ரூபாய்க்கு மட்டும்தான் பண்ணியிருக்கோம்.

துரைமுருகன்

கொரோனா காலம் என்பதால விற்பனை எப்படி இருக்குனும் தெரியல. ஒருவேளை விற்பனை ஆகாம மிஞ்சிருச்சுனா அத பத்திரமான இடத்துல பாதுகாத்து வைக்கணும். இதுமாதிரி சிக்கல்கள் இருக்குறதுனால. நாங்களும் ரிஸ்க் எடுக்க விரும்பல. மக்களும் இந்த முறை பெரிய அளவுல வாங்க முன்வரல ” என்றார் வருத்தம் தேய்ந்த குரலில்.

அடுத்ததாக முனிசிபல் காலனியில் அமைந்திருக்கும் சிறிய மைதானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் போகோ பட்டாசுத் திருவிழா கடைக்குச் சென்று, கடையின் உரிமையாளர் சக்திவேலிடம் பேச்சுக் கொடுத்தோம். ``நான் 26 வருஷமா தீபாவளி சமயத்துல பட்டாசுக் கடை நடத்திக்கிட்டு இருக்கேன். இந்த முறை விலையிலயும் பெருசா மாற்றமில்ல. இந்த கொரோனா காலக்கட்டத்துல மக்களோட வாங்குற சக்தி ரொம்பவே குறைஞ்சிருக்கு. பெரும்பாலும் குழந்தைகளோட ஆசைக்காத்தான் கொஞ்சமா பட்டாசுகள் வாங்கிக்கிட்டு போறாங்க. அதிகமா பட்டாசு வாங்குறவங்ககூட இந்த முறை ரொம்ப குறைவாத்தான் வாங்கியிருக்காங்க. போன வருஷமெல்லாம் இந்நேரம் 25 சதவிகித பட்டாசுகள் வித்திருப்போம். ஆனா, இந்த முறை 5 சதவிகிதம் கூட இன்னும் விற்கல. மக்களும் பொதுவான பட்டாசுகள் மட்டும்தான் வாங்குறாங்க அதிக விலை பேன்ஸி ரகப் பட்டாசுகள யாரும் வாங்க விரும்பறதில்ல. அதேமாதிரி அரசாங்கம் சொல்ற பசுமை பட்டாசு விற்பனையும் இன்னும் முழுசா கொண்டுவரப்படல நூற்றில் முப்பது சதவிகிதம் மட்டும்தான் முழுமை அடஞ்சிருக்கு" என்று கூறினார்.

செல்வகுமார்

மூலப்பட்டறை பகுதியில் ரோட்டரி சேவா சங்கம் சாா்பில் சிவகாசியின் காா்னேஷன் பட்டாசுக் கடை போடப்பட்டிருக்கிறது. சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை நடத்தும் செல்வகுமார் கூறுகையில், ``கொரோனா காலத்துல எங்களுக்கு மூணு, நாலு மாசமா வேலையே சுத்தமா இல்ல. பட்டாசு கம்பெனிகாரங்கதான் தொழிலாளர்களுக்கு ரேஷன் பொருட்கள், பண உதவின்னு செஞ்சிக்கிட்டு இருந்தோம். இந்த முறை வட மாநிலங்கள் போக வேண்டிய பட்டாசுகள், அரசுகள் போட்டிருக்கும் தடை காரணமா நிறைய பட்டாசுகள் சிவகாசியிலேயே தேங்கிடிச்சு.

பட்டாசு

போன வருஷம் தீபாவளிக்கு நாங்க 250 கேஸ் பட்டாசு, இங்க கொண்டு வந்தோம். ஆனா, இந்த முறை 159 கேஸ்தான் கொண்டு வந்திருக்கோம். அதுலயும் இன்னும் நிறைய ஸ்டாக் ஓப்பன் பண்ணமலே இருக்கு. சிவகாசியிலிருந்து நாங்க 25 பேர் வந்திருக்கோம். எங்க சம்பளம் உட்பட எல்லாமே இது விக்கிறத பொறுத்துதான், இந்த வருஷ வியாபாரம் லாபமா, நட்டமான்னு தெரியவரும்" என்றார்.

Also Read: சிவகாசி: `அதிகரிக்கும் பட்டாசு மீதான தடை!’ - கேள்விக்குறியாகும் தொழிலாளர்கள் வாழ்வாதாரம்?

இறுதியாக ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பகுதியான மஜீத் வீதியில் தீபாவளி சீஸன் மட்டுமல்லாது வருடம் முழுவதும் பட்டாசுகளை விற்கும் கடைகளுக்குச் சென்றோம்.

``வழக்கமா இந்த நேரத்துல எல்லாம் எங்க கடையில நிக்க கூட முடியாத அளவுக்கு கூட்டம் இருக்கும். ஆனா, இந்த தடவை வியாபாரம் இன்னும் பெரிய அளவுல தொடங்காமலே இருக்கு. ஜவுளி வாங்கினா அத வருஷம் முழுக்கப் பயன்படுத்தலாம். இனிப்புகள், உணவுப் பொருள் - இதெல்லாமே அத்தியாவசியமா இருக்கிறதுனால. மக்கள் பட்டாசு வாங்குறத தேவையற்ற செலவாத்தான் பாக்குறாங்க" என்று மகாதேவி பட்டாசுக் கடை நடத்தும் செல்வகுமாா் கூறினார்.

தியானேஷ்

"இந்த வருஷம் தீபாவளி வியாபாரம் மந்தமா இருக்கிறது உண்மைதான். அரசாங்கம் சுற்றுச்சூழல் மாசுபடுதுனு பட்டாசுகளுக்குத் தடை விதிக்கறாங்க. ஆனா, சுற்றச்சூழல மாசுபடுத்தற எவ்வளவோ விஷயங்கள் வருஷம் முழுக்க இயங்கிக்கிட்டேதான் இருக்கு. அதனால கெடாத சுற்றுச்சூழல், மக்கள் ஒருநாள் பட்டாசு வெடிச்சுக் கொண்டாடுற தீபாவளியால் மாசுபடுதுன்னு சொல்றத எப்படி எடுத்துக்கிறதுன்னே தெரியல. இந்த தீபாவளிப் பண்டிகையை நம்பிதான், சிவகாசியில பல குடும்பங்களோட வாழ்வாதாரமே இருக்கு. அதனால அரசாங்கம் பட்டாசு வெடிக்கிற நேரத்த இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி இதற்கான நடவடிக்கை எடுக்க முன்வரனும்" என்று கிருஷ்ணா பட்டாசுக் கடையின் மேலாளர் தியானேஷ் கேட்டுக்கொண்டாா்.

`தீபாவளி சமயத்தில் அக்கம் பக்கத்தில் பட்டாசுகள் வெடிப்பார்கள் என்பதால், நாங்களும் ஆசைக்காக கொஞ்சம் பட்டாசுகள் வாங்கி வெடிப்போம். மற்றபடி பட்டாசுகளை அதிக விலை கொடுத்து வாங்க விருப்பமில்லை’ என்பதே பொதுமக்களில் பெரும்பாலானோரின் கருத்தாக உள்ளது.

பட்டாசு

ஈரோடு மாவட்டம் தொழில் சார்ந்த நகரம் என்பதால் தொழிற்சாலைகளில் வேலைசெய்யும் வேலையாட்கள் பண்டிகை நாள்களில் போனஸ் பணத்தின் பெரும்பகுதியை பட்டாசுகளுக்குச் செலவிடுவாா்கள். ஆனால், கொராேனா தாக்குதலால் தொழிற்சாலைகள் செயல்படாதிருந்த நிலையில் இம்முறை தீபாவளி போனஸ் பணம் கொடுக்கப்படாத நிலைதான் பெரும்பாலான இடங்களில் இருக்கிறது. அதுவே பட்டாசு விற்பனையில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவுக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

பட்டாசு உற்பத்தி, விற்பனையை மட்டுமே நம்பி சிவகாசியில் பல லட்சம் குடும்பங்கள் இருக்கின்றன. அவர்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது!



source https://www.vikatan.com/news/tamilnadu/fireworks-shop-owners-share-the-experience-about-sales

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக