Ad

வெள்ளி, 13 நவம்பர், 2020

புதுச்சேரி: `எஃப்.ஐ.ஆர் பதியுங்கள்!’ - கிரிக்கெட் நிறுவனத்துக்கு எதிராகக் கொந்தளித்த கிரண்பேடி

புதுச்சேரி, துத்திப்பட்டு கிராமத்தில் சீசெம் (Siechem) டெக்னாலஜி என்ற தனியார் நிறுவனம் அமைத்திருக்கும் கிரிக்கெட் மைதானத்தில், கடந்த இரண்டு வருடங்களாக ரஞ்சி உள்ளிட்ட போட்டிகள் நடந்து வருகின்றன. புதுச்சேரியை மையமாக வைத்து தொடங்கப்பட்ட புதுச்சேரி கிரிக்கெட் கிளப்பில் உள்ளூர் விளையாட்டு வீரர்களைப் புறக்கணித்துவிட்டு, தகுதியில்லாதவரக்ளையும், அயல்மாநிலத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்களையும் சேர்த்திருப்பதாக ஏற்கெனவே பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கின்றன.

புதுச்சேரி சீசெம் உரிமையாளர் தாமோதரன்

இந்நிலையில், புதுச்சேரி அரசின் நிலங்களையும், நீர்நிலைகளையும் ஆக்கிரமித்து சீசெம் நிறுவனம் கிரிக்கெட் மைதானம் அமைத்திருப்பதாக ஊசுட்டேரி பாதுகாப்பு இயக்கத்தினர் துணைநிலை ஆளுநரிடம் புகார் தெரிவித்திருந்தனர். அதனடிப்படையில் ஆளுநர் கிரண் பேடி இன்று வாட்ஸ்-அப் மூலம் செய்தியாளர்களுக்கு அனுப்பியிருக்கும் செய்திக் குறிப்பில், ``புதுச்சேரி கிரிக்கெட் அசோசியேஷன் மற்றும் அங்குள்ள சீசெம் தனியார் நிறுவனத்தின் செயல்பாடு நெறிமுறையற்றது என்பதுடன் சட்டவிரோதமானது.

அது தொடர்பான அனைத்து ஆவணங்களும் துணைநிலை ஆளுநர் அலுவலகத்துக்கு முழுமையாகக் கிடைத்திருக்கிறது. அதனடிப்படையில் உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று ஆட்சியர் அருணுக்கு கடிதம் எழுதியிருக்கிறேன்” என்று குறிப்பிட்டு அந்த கடிதத்தையும் இணைத்திருக்கிறார்.

துத்திப்பட்டில் கட்டப்பட்டிருக்கும் தனியார் கிரிக்கெட் மைதானம்

அந்த கடிதத்தில், ``புதுச்சேரி துத்திப்பட்டில் அரசு நிலங்களை ஆக்கிரமித்து சீசெம் தனியார் (Siechem) கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டிருக்கிறது. அதில், நீர்நிலைகளை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருப்பதும், அனுமதியின்றி ஆழ்துளைக் கிணறுகளை அமைத்திருப்பதும் ஆவணங்களில் தெரிய வந்திருக்கிறது. அதனால், அரசு நிலங்கள் மற்றும் நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு செய்திருப்பது தொடர்பாக எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட வேண்டும்.

அந்த கிரிக்கெட் ஸ்டேடிய வளாகத்தில் தற்போது நடைபெறும் டி20 உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளையும் உடனடியாக நிறுத்துவதுடன் அனைத்து துறையினரும் ஆய்வை மேற்கொள்ள வேண்டும். அங்கு, விளையாட்டு போட்டித் தொடக்க விழாவில் கலந்துகொள்வதை நீங்கள் (ஆட்சியர் அருண்) தனிப்பட்ட முறையில் தவிர்த்திருந்தாலும், அங்குள்ள முழு விவரத்தையும் ஆளுநர் மாளிகைக்கு தெரிவித்து எச்சரிக்கத் தவறிவிட்டீர்கள்.

Also Read: புதுச்சேரி: `மனநல மருத்துவமனையை அணுகலாம்!’ - எம்.எல்.ஏ-க்களுக்கு கிரண் பேடி பதிலடி

ஸ்டேடியம் மற்றும் சீசெம் நிறுவன உரிமையாளர் தாமோதரனின் சட்டவிரோத செயல்களை பி.சி.சி.ஐ.யின் கவனத்திற்குக் கொண்டு செல்கிறேன். அதனால், கிரிக்கெட் விளையாட்டுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது" என்று காட்டமாக குறிப்பிட்டிருக்கிறார். ஆளுநரின் உத்தரவைத் தொடர்ந்து கடந்த 11-ம் தேதி தொடங்கிய டி20 போட்டிகள் தற்போது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.



source https://www.vikatan.com/news/politics/puducherry-governor-kiran-bedi-take-action-over-illegal-cricket-stadium-issue

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக