Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

பெப்பர் பாயா விருந்து... - சீட் பங்கீட்டுக்குத் தயாராகும் அமித் ஷா!

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, வரும் நவம்பர் 21-ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்னை வருகிறார். அன்றைய தினம், சென்னை மக்களின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்வதற்காக திருவள்ளூர் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள தேர்வாய் கண்டிகை நீர்த் தேக்கத்தைத் தொடங்கி வைக்கிறார் அமித் ஷா. சென்னை மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் விழாவிலும் அமித் ஷா கலந்து கொள்கிறார். இந்தத் திட்டங்களை வீடியோ கான்ஃபிரன்ஸ் மூலமாக அவர் தொடங்கி வைப்பதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.

அமித் ஷா

திட்டங்களை அமித் ஷா தொடங்கிவைத்த பிறகு, அவருடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முக்கியமான ஐந்து அமைச்சர்கள் மட்டும் கலந்து கொள்ளும் மதிய விருந்து நடைபெறவிருக்கிறது. இதுகுறித்து நம்மிடம் பேசிய அ.தி.மு.க வட்டாரங்கள்,``தொகுதி பங்கீடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தத்தான் அமித் ஷா சென்னை வரவிருக்கிறார். 60 தொகுதிகளைப் பெறுவது என்பதில் பா.ஜ.க விடாப்பிடியாக இருக்கிறது. ஆனால், `20 தொகுதிகளுக்கு மேல் ஒதுக்குவதில்லை’ என்பதில் அ.தி.மு.க தலைவர்கள் தீர்மானமாக இருக்கின்றனர். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வைக் காண்பதற்காகத்தான் மதிய விருந்து நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Also Read: `தமிழகம் வரும் அமித் ஷா... அரசியல் மாற்றங்கள் போகப் போகத் தெரியும்!’ - எல்.முருகன்

இந்த மதிய விருந்தில் முக்கியமான சில அ.தி.மு.க தலைவர்கள் மட்டும் கலந்து கொள்கின்றனர். கட்சியின் மூத்த தலைவர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோரையும் விருந்தில் உடன் வைத்துக் கொள்ள எடப்பாடி விரும்புகிறார். கடைசி நிமிடத்தில் அவர்களுக்கும் அனுமதி அளிக்கப்படலாம். இந்த விருந்தின் முடிவிலேயே, சீட் ஒதுக்கீடு குறித்து ஒரு தெளிவு பிறந்துவிடும்” என்றனர்.

பன்னீர்செல்வம் - எடப்பாடி பழனிசாமி

ராஜ்பவன் அல்லது தனியார் நட்சத்திர ஹோட்டலில் இந்த விருந்து நடைபெறலாம் என்கிறது அ.தி.மு.க வட்டாரம். விருந்து எங்கு நடைபெற்றாலும் சரி, பெப்பர் பாயா, செட்டிநாடு வஞ்சிரம் மீன் வறுவல், மட்டன் கோலா உருண்டை குழம்பு, சப்பாதி ரொட்டி பருப்பு மசாலா உள்ளிட்ட பதார்த்தங்கள் எல்லாம் விருந்தில் இடம்பெற வேண்டுமென்று முதல்வர் தரப்பு அறிவுறுத்தி இருக்கிறதாம். இந்த தடபுடல் விருந்தின் முடிவில் அ.தி.மு.க - பா.ஜ.க கூட்டணி குறித்தான இறுதி முடிவுகள் எட்டப்படலாம் என்கிறது ராயப்பேட்டை அ.தி.மு.க அலுவலக வட்டாரம்.



source https://www.vikatan.com/government-and-politics/politics/amit-shah-hosts-lunch-for-admk-leaders-alliance-talks-will-be-in-dais

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக