Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

``என்னடா பூசை நடத்துறீங்க?!''- அநீதி ஆந்தாலஜி கதைகள் - 2

பூசை!

“உத்திரம்... உத்திரம் உன்னைப் பார்க்க வந்திருக்காங்க... கொஞ்சம் தெருப்பக்கம் வந்துட்டுப்போ…”

கொல்லையில் முருங்கைக்காயை குச்சியால் தட்டிக்கொண்டிருந்த உத்திரம் ''தோ வாரேன்'' என்று சத்தம் கொடுத்தாலும் முருங்கைக்காயில் கவனமாக இருந்தாள். நெற்றியில் பெரிய பொட்டு, முகம் முழுக்க மஞ்சள். கணுக்கால் தெரிவது போல ஏற்றிக் கட்டிய சேலை. நகை, நட்டு என தடபுடலாக ஏதுமில்லை. எனினும், உடல் முழுக்க புதிதாகக் கல்யாணம் ஆனவள் என்ற பூரிப்பு தண்டோரா போட்டுக்கொண்டிருந்தது. காலில் தடவியிருந்த மஞ்சளும் அதன்மேல் பளீரென்று வெளிச்சம் போட்டுக்கொண்டிருந்த தடித்த கொலுசும் அதை உறுதிப்படுத்தியது.

பறித்த முருங்கைக்காய்களை ஓரமாய் போட்டுவிட்டு வீட்டினுள் நுழைந்து ஒருக்கணம் கண்ணாடியில் முகம் பார்த்துக்கொண்டு, வாசலுக்கு வந்தாள்.

நான்கைந்து பெண்கள் வீட்டு வாசலில் சாணி மெழுகியிருந்த இடத்தில் அமர்ந்திருந்தார்கள். அதற்குப் பக்கத்தில் ஒரு செம்பருத்திச் செடி பூத்துக் குலுங்கியிருந்தது.

“வாம்மா... இப்டி ஒக்காரு…” என்று கையைப் பிடித்து பக்கத்தில் அமரவைத்துக்கொண்ட சற்றே வயதான அம்மாள், “நல்லா அழவாத்தான் இருக்க“ என்றாள்.

உத்திரத்திற்கு வெட்கம் மெல்ல எட்டிப் பார்த்தது.

உறவு முறை சொல்லி அறிமுகப் படுத்திக்கொண்ட பெண்கள், அவர்கள் ஊரில் நடக்க இருக்கும் மயானக் கொள்ளைத் திருவிழா பற்றி பெருமகிழ்ச்சியுடன் பேசிக்கொண்டிருந்தார்கள். அதைத் தொடர்ந்து ஆற்றில் நடக்க இருக்கும் பெண்கள் விளையாட்டுப் பற்றி பேச்சு திரும்பியது.

உத்திரத்திற்குத் தெரிந்த விளையாட்டுக்கள் என்ன என்றெல்லாம் விசாரித்தப் பெண்கள், கையோடு கொண்டு வந்திருந்த பலகாரங்களைக் கொடுத்தார்கள். உத்திரத்திடம் அனுமதி ஏதும் கேட்காமல், அவள் தலை முடியை பிரித்து ஒரு பெண்மணி சடை போட்டுப் பூத்தைக்கத் தொடங்கினாள்.

திருமணமான பின்பு சில மாதங்கள் கழித்து கணவனின் சொந்தக்காரர்கள் இருக்கும் இந்த ஊருக்கு வந்திருக்கிறாள் உத்திரம்.

“வடிவேலுக்கு இந்த ஊர்ல பொண்ணு குடுக்க நிறைய பேர் இருந்தாங்க. ஆனா அவனுக்கு நீதான்னு அமைஞ்சிருக்கு" என்றாள் ஒருத்தி.

“வடிவேலு எப்பவாச்சும்தான் இந்த ஊருக்கு வரும். அதை சைட் அடிக்க இங்க காலங்கருக்கல்லயே தலை குளிச்சிட்டு திரிஞ்சிட்டு இருப்பாளுங்க" என்று வெடிச் சிரிப்பு சிரித்தனர்.

உத்திரத்திற்குப் பெருமையாய் இருந்தது.

அநீதி ஆந்தாலஜி கதைகள் - 2

வடிவேல் வருடா வருடம் காளி வேஷம் போடுவான். அதனால்தான் இந்த வருடம் மனைவியுடன் ஊருக்கு வந்திருக்கிறான். உத்திரத்திற்கு வடிவேலுவை காளி வேஷத்தில் பார்ப்பதற்கு ஆர்வமாக இருந்தது. அந்த ஆர்வத்தை விட வடிவேலு ஆடுவதைப் பார்க்க சிறுகுழந்தைபோல எதிர்பார்ப்புடன் காத்திருந்தாள்.

திருமணமான புதிதில் வடிவேலு இந்த விஷயத்தைச் சொன்னவுடன், விழிகள் விரிய கேட்டுக்கொண்ட உத்திரம், ஒரு முறை ஆடிக் காண்பிக்கச் சொன்னாள். அதெல்லாம் தெய்வ குத்தம் என்று மறுத்த வடிவேலு, தானே விருப்பப்பட்டாலும் தன்னால் ஆட முடியாது என்றும், காளி வேஷம் போட்டு, அம்மன் ஊர்வலம் ஆரம்பித்ததும் என்ன நடக்கிறது என்று தனக்குத் தெரியாது என்றும் கூறினான்.

“ஆட்டத்துல வடிவேலை அடிச்சிக்க முடியுமா?"

உரையாடல் வடிவேலின் ஆட்டத்தைப் பற்றித்திரும்பியது.

“வடிவேலு ஆட்ற ஆட்டத்துல பூமியே பொளக்குற மாதிரி இல்ல இருக்கும்?”

உத்திரத்திற்குக் கொஞ்சமாய் பயம் எட்டிப் பார்த்தது.

இந்தப் பயம் எல்லாம் வடிவேலுவுக்கு காளி வேஷம் போடுவதற்காக லிப்ஸ்டிக் பூசும் போது பறந்தே போனது. அவனுக்கு சடை பின்னும் போதும், புடவை கட்டும் போதும், அவனை சீண்டி விளையாடிக்கொண்டு இருந்தாள். பூ வைத்து பொட்டு வைத்து, காலில் சலங்கை கட்டியதும் முற்றிலும் திடகாத்திரமான பெண்ணாக மாறிப் போய் இருந்தான் வடிவேல். திடகாத்திரமான ஆண் உடலும், பெண் மனமும்தான் காளியின் தத்துவமோ என்று யோசிக்கும் அளவுக்கு வடிவேல் உருப்பெற்றிருந்தான். ஆனால், காளி இன்னும் அவன் மீது இறங்காததால் மென்மையாக சிரித்துப் பேசியபடியே இருந்தான். பெண் உடை இருக்கும் உடலில் இருந்து ஆண் சிரிப்பு வெளிப்படுவது அசட்டுதனமாக இருந்தது. ஒரு தெய்வ உருவில் இருந்து மனித சிரிப்பு வெளிப்படும் போதுதான் மனித சிரிப்பு எவ்வளவு கேவலமானது என்பதே புரிகிறது.

வெளியே பம்பை சத்தம் கேட்டுக்கொண்டு இருந்தது. ஒவ்வொரு காளியாக பூசாரியிடம் போய் பொட்டுக் கட்டிக்கொண்டு சலங்கையை ஆட்ட ஆரம்பிக்க வேண்டும்.

உத்திரம் அந்த ஊரில் அமைந்த தோழிகளுடன் பேசி சிரித்தபடி கோயில் வளாகத்தில் புழங்கியபடி இருந்தாள். கூட்டம் திமுதிமுவென அதிர ஆரம்பித்தது. ஒவ்வொரு காளியாக பொட்டு கட்டிக்கொண்டு, மெல்ல மெல்ல வட்டமடிக்க ஆரம்பித்தன. வட்டமடித்து அடித்து ஆடுவதற்கான இடத்தை காளிகள் ஏற்பாடு செய்து கொண்டிருந்தன. வடிவேலு பொட்டு கட்டிக்கொண்டு ஆடும் தருணத்திற்காக உண்மையிலேயே நகத்தைக் கடித்தபடிக்கு காத்திருந்தாள் உத்திரம்.

பொட்டு கட்டிக்கொண்ட வடிவேல், மற்ற காளிகள் போல அல்லாமல் திடீரென்று ஆவேசம் வந்தவன் போல சூலத்தைக் கையில் எடுத்துக்கொண்டு கூட்டத்தை நோக்கி அதிர அதிர ஓடினான். இல்லையில்லை... ஓடினாள் என்பதே சொல்லத்தகும். ஓடும்போது சூலத்தால் வலதும் இடதும் திருப்பிக் காட்டியபடியே ஓடினாள். கூட்டம், நெற்கதிர்கள் சிறுமழைக்கு ஒரு பக்கம் சாய்வது போல, அதைவிட வேகமாகச் சாய்ந்தன.

மற்ற காளிகள் உண்டாக்கிய வட்டத்தினுள் நுழைந்த வடிவேல் நளினமாக, அதே சமயம் வலுவாக தன்னுடைய நடன அசைவுகளை விதைத்தபடிக்கு ஆடத் தொடங்கினான்.

உத்திரம் கண்களில் நீர் தளும்ப அவனது ஆட்டத்தைப் பார்த்தபடி இருந்தாள்.

கூட்டத்தில் இருந்து கிழித்துக்கொண்டு ஓடிவந்த ஒரு பெண், தலைமுடியை பிரித்துப்போட்டுக்கொண்டு சுழன்று சுழன்று ஆடினாள்.

ஆடிக்கொண்டிருந்த வடிவேலுவை நெருங்கிய அந்தப் பெண், ''சொல்லுடி... நீதான் ஒரு பதிலைச் சொல்லணும்... என்னைத் தவிக்க விட்டுட்டு, ஒனக்கு ஆட்டம் கேக்குதா?'' என சீறிய படியே ஆடினாள்.

பூசாரி உள்ளே நுழைந்து கற்பூரத்தை கொளுத்தி வாயில் போட வர அதைத் தட்டி விட்ட அந்தப் பெண் வடிவேலுவைப் பற்றிக்கொண்டாள். ''சொல்லுடி... சொல்லுடி" என உலுக்கினாள். வடிவேலும் சளைக்காமல் ஆடிக்கொண்டிருந்தான்.

இந்தப் பெண் தனியாக கொஞ்ச நேரம் ஆடுவது, வடிவேலு ஒரு வட்டம் போட்டு விட்டு இவளருகில் வரும்போது வடிவேலுவைப் பற்றிக்கொள்வது என ஆட்டம் போய்க்கொண்டிருந்தது. கோயிலில் இருந்து ஊர் சுற்றி வர ஆரம்பிக்கும் நேரம் நெருங்கி, காளிகள் நகர ஆரம்பித்தனர். இந்தப் பெண்ணின் உக்கிரம் அதிகம் ஆனது. வடிவேலுவைப் பற்றிக்கொண்டு சுழன்று சுழன்று ஆடினாள். வடிவேலு காளிகளுடன் நகர முற்பட்டான். ஆட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்திய அந்தப் பெண் வடிவேலு மேலேயே மயங்கி விழுந்தாள்.

சூலத்தை வாயில் கவ்விக்கொண்டு இரு கைகளாலும் அந்தப் பெண்ணைத் தூக்கிய வடிவேல் கோயிலை நோக்கி ஓடினான். கோயிலின் வாசலில் அவளைக் கிடத்திய வடிவேல் ஆடிக்கொண்டிருக்கும் காளிகளுடன் ஊர்வலமாக ஆடிக்கொண்டே சென்றான். நாக்கைத் துருத்தி ஒரு அபிநயம் பிடிக்கையில் பார்த்துக்கொண்டிருந்த உத்திரத்திற்கு அந்த உருவில் வடிவேல் சுத்தமாக இறந்துவிட்டது போலத் தோன்றியது.

ஊர் முழுக்க சுற்றி வடிவேல் ஆடிக்கொண்டு போகும் இடமெல்லாம் உத்திரமும் போனாள். சுடுகாட்டுக்குப் போகக் கூடாது எனத் தடுத்து விட்டார்கள். உத்திரத்திற்குத் தானே நடனம் ஆடியதைப் போல கால் வலித்தது. அதிகாலை அசந்துபடுத்த வடிவேலிடம் ஒப்பனை முழுக்க கலையாமல் இருந்தது. அவனைத் தொடக்கூட பயந்து தூரத்தில் படுத்து பார்த்தபடியே தூங்கிப்போனாள்.

மறுநாள் மாலை கோயிலில் மஞ்சள் நீர்த் திருவிழா. அரைக்காளி உருவில் இருந்த வடிவேலு ஓடியாடி வேலை செய்து கொண்டிருந்தான். பூசாரி அருள் வந்து வாக்கு சொல்லிக்கொண்டிருந்தார். சில பெண்கள் சாமியாடினர். வடிவேலு மற்றும் சிலர் சேர்ந்து அவர்களைப் பிடிப்பது, ஆடி முடிந்ததும் அமர வைப்பது என விறுவிறுப்பாக சுழன்று கொண்டிருந்தனர்.

முதல் நாள் சன்னதம் வந்து ஆடிய பெண் ஆடியபடி வந்தாள். கூட்டத்தின் நடுவே நின்று குலுங்கினாள்.

“டேய், உங்க இஷ்டத்துக்கு எல்லாம் பண்ணுவீங்க, நீங்க ஒரு நாளு விழா வச்சி என்னைக் கண்டுகிட்டு போவீங்க…” என்று ஆரம்பித்து வடிவேலுவின் முடியைப் பற்றி உலுக்க ஆரம்பித்தாள்.

“டேய்ய்ய்ய்" என்று பெருங்குரலெடுத்து யாரும் எதிர்பாராவிதமாக ஆடிக்கொண்டே அம்மன் சிலையை நோக்கி ஓடினாள் உத்திரம்.

பூசாரி உள்பட சிலர் உத்திரத்தை அம்மன் சிலையை நெருங்காமல் தடுத்து நிறுத்தினார்கள். உத்திரம் திமிறத் திமிற அவளை கோயில் வாயிலுக்கு மீண்டும் இழுத்து வந்து விட்டனர்.

“என்னடா பூசை நடத்தறீங்க? கண்டவளுங்க கண்டதையும் பெனாத்தறதுக்கு நான்தான் கெடைச்சனா? என்னை இப்டில்லாம் அசிங்கப்படுத்தினீங்க, ஊர்ல தெனம் ஒரு பொணம் விழும். நான் இந்த ஊர்லயே இருக்க மாட்டேன். எனக்கு பூசையா இல்ல கண்ட பேய் பிசாசுக்கு எல்லாம் பூசையா? நான் என் அக்கா ஊருக்கு போறேண்டா..." என்று கத்தியபடி ஆடினாள்.

தடுக்க வந்த வடிவேலுக்கு பொளேர் என்று ஒரு அறை. அந்தப் பெண்ணை யாரும் தடுக்க ஆள் இல்லாமல் தனியாக ஆடிக்கொண்டிருந்தாள்.

“என்னாம்மா கொற, என்ன பண்ணனும்?'' பூசாரி கேட்டார்.

“இங்க எதுவும் சுத்த பத்தமா இல்ல... சாமி பேரைச் சொல்லி மக்க ஆட்டம் போடுது. நம்ம ஊர்க்காரனுங்க மட்டும் இனிமே காளி வேஷம் கட்னா போதும். அசலூர்க்காரங்க ஆடக்கூடாது. நம்மூர்லேர்ந்து அசலூர்க்குப்போனா கூட அவங்க இனிமே காளி வேஷம் கட்டக் கூடாது. போனா போனதுதான்.''

“ஆத்தா, அப்படியே பண்ணிடலாம்... நீ மலையேறு'' என்று சூடத்தைக் கொளுத்தி வாயில் போட்டார் பூசாரி.

மயங்கிச் சரிந்த உத்திரம் அடுத்த நாளும் மயக்க நிலையிலேயே இருந்தாள்.

“அம்மா வூட்டுக்கு உடனே போகணும்" என்றாள்.

பேருந்தில் ஜன்னலோரம் அமர்ந்து வடிவேலின் தோளில் அதே மயக்க நிலையில் சாய்ந்து சென்று கொண்டிருந்தாள்.

“ஊர்ல இன்னும் ரெண்டு நாள் திருவிழா உத்திரம், இருந்துட்டு வந்திருக்கலாம். நீதான் அவசரமா போகணும்னு...”

விலுக்கென்று நிமிர்ந்தாள். உத்திரம் இப்போது காளி வேஷம் போட்ட வடிவேலு போல இருந்தாள்.

“யோவ் நான் சுத்தி வளைச்சி பேச விரும்பல. கல்யாணத்துக்கு முன்னால எந்த சிறுக்கி கூட எப்டி வேணா இருந்து தொலைச்சிட்டு போ. அதான் கல்யாணம் ஆயிடிச்சில்ல? இனிமே நான் மட்டும்தான். எவளாச்சும் உன்னை நினைச்சிட்டு இருந்தா, உன் கூட பழகிட்டு இருந்தானு வந்து இளிச்சிட்டு நின்னா, அறுத்துடுவேன். இந்த வாட்டி நீ ஊருக்குள்ள போய் என்னன்னா பண்ணிட்டு இருந்தனு எனக்குத் தெரியாதுனு நினைக்காதே. எல்லாம் இத்தோட முடியட்டும். இத்தோட நீ காளி வேஷம் கட்டி ஆடுனது போதும். ஆத்தா கோச்சிக்க மாட்டா. ஆத்தாதான் என் கனவுல வந்து சொன்னா. எதெல்லாம் எனக்குத் தெரியும்னு எல்லாம் போட்டுக் கொழப்பிக்காத. எனக்குத் தெரிஞ்சது, தெரியாதது எல்லாம் நான் மறந்துட்டேன். நீயும் மறந்துடு. நீ வேஷம் கட்ன காளி. நான் மெய்யாலுமே காளி!"

மீண்டும் முன்பு போல அரை மயக்க நிலைக்குச் சென்று வடிவேல் மேல் ஆதரவாய்ச் சாய்ந்து கொண்டாள் உத்திரம்.

மீட்டிங் அட் மஹாப்ஸ்!

“அலும்னை மீட்டுன்னா புருஷன் பொண்டாட்டியை எல்லாம் கூட்டிட்டு வரக்கூடாதுடா. எவன் கண்டு புடிச்சான் இப்டி பண்றதை?”

“ப்ச்... ஃபேமிலியா மீட் பண்ணலாம்னுதான்டா. இதுல என்ன தப்பு?” நண்பனிடம் பேசிவிட்டு விமானத்துக்குள் போனான் சேனாதிபதி.

விமானம் 20 டிகிரி சாய்ந்து பறந்தது. பைலட்டுக்கு போர் அடித்திருக்கும் போல. இந்த இடத்தில் சாய்க்க வேண்டிய அவசியம் இல்லை என்பது வழக்கமாக இந்த ரூட்டில் பயணப்படும் நிமல்யாவுக்கு தெரிந்திருந்தது.

“ஒரு தப்பும் இல்ல. சுத்த நம்பிக்கை இல்லாத பயலுங்க. எவனும் பொண்டாட்டியைத் தனியா அனுப்ப மாட்டான்... அதானே” என்றாள்.

“ஹலோ நம்பிக்கை இல்லாமல்லாம் இல்ல. எல்லாத்தையும் நெகட்டிவா பார்க்காத நிமல்!"

“நெகட்டிவை நெகட்டிவா பார்க்காம பாசிட்டிவா பார்க்குறதுதான் தப்பு. யேய் ப்ளீஸ், நீங்க எல்லாம் ஜாலியா கூத்தடிங்க. நான் சும்மா அட்டென்டெண்ஸ் போட்டுட்டு, ஊர் சுத்த போகட்டுமா?''

“ஒரு நாள் கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிட்டு கூட இரும்மா. மறுநாள் உன் இஷ்டத்துக்கு சுத்தலாம்.”

“நீங்க போடும் கடும் மொக்கை ஜோக்குக்கு எல்லாம் நான் சிரிக்கிணுமாடா?!''

விமானம் சென்னையைத் தொட்டுக் குதித்து ஆத்திரத்தை அடக்க முடியாமல் உறுமிக்கொண்டு தவழ்ந்தது. காத்திருந்த காரில் ஏறி மகாபலிபுரம் சென்று அந்த உயர்ரக கடற்கரை விடுதியில் இருவரும் நுழைந்தார்கள்.

நிமல்யாவும், சேனாதிபதியும் நன்கு காதலித்து பழகி திருமணம் செய்து கொண்டவர்கள். திருமணத்திற்கு முன்பான இருவரின் வாழ்க்கையையும் இருவரும் வெளிப்படையாகப் பகிர்ந்து கொண்டவர்கள்.

அலும்னை மீட் ஏற்பாடு நன்கு செய்யப்பட்டிருந்தது. ஒருசில சென்னை வாசிகள் ஏற்கெனவே வந்திருந்தார்கள். சம்பிரதாய தலையாட்டல்கள், அறிமுகங்கள், குபீர் ரக ஜோக் என்பதாக வெடித்த புஸ் ரக ஜோக்குகள் என நாள் ஓடி மாலை நெருங்கியது. நிமல்யா கூடுமானவரை சேனாதிபதியுடனேயே இருந்தாள். அறைக்குச் சென்று குளித்து உடை மாற்றி வந்ததும் நிகழ்ச்சி களைகட்டி இருந்தது தெரிந்தது.

சேனாதிபதி இப்போது கொஞ்சம் பிஸியாக இருந்தான். ஒரு பெண் அவனுடன் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தாள். பிறகு எல்லோரும் சேனாதிபதியையும் அவளையும் கிண்டல் செய்தார்கள். பார்க்க அழகாகவே இருந்தாள். பெயர் வினோதிகா என்று தெரிய வந்தது.

கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட ஜோடிகள் வந்திருந்தனர். வினோதிகா சேனாதிபதியை கையைப் பிடித்து அழைத்துச் செல்வது தெரிந்தது. மற்ற நண்பர்களுடன் பேசிக்கொண்டிருக்கையில் வினோதிகா இயல்பாக சேனாதிபதி மேல் சாய்ந்து கொள்வது, அவன் நெஞ்சில் குத்தி சிரிப்பது எல்லாம் நிமல்யாவுக்கு தெரிந்து கொண்டேயிருந்தன.

நிமல்யா இதையெல்லாம் சாதாரணமாக எடுத்துக்கொள்ளும் பெண்தான். ஆனாலும் வினோதிகாவின் இந்தச் செய்கை கொஞ்சம் நெருடலாக இருந்தது.

சேனாதிபதி நிமல்யாவை அருகில் அழைத்தான்.

நிமல்யா அருகில் வந்ததும், “ஹாய் நிமல்யா... நீங்கதான் இந்த ரௌடியோட ராணியா? சாரி என்னால மேரேஜுக்கு வர முடியலை" என்று வினோதிகா ஆரம்பித்ததும்...

இன்னொரு நண்பன், “அது எப்படி உன்னால போயிருக்க முடியும்?” என்று சொல்ல, எல்லோரும் கொல்லென்று சிரித்தனர்.

பார்ட்டி ஆரம்பித்ததும், வினோதிகா, சேனாதிபதி அருகே அமர்ந்து கொண்டாள். சேனாதிபதியின் கோப்பையை எடுத்துக் குடித்தாள். சேனாதிபதியின் முக்கைப் பிடித்துக் கிள்ளினாள். நிமல்யாவுக்கு சேனாதிபதி அருகே இடம் கிடைக்கவில்லை.

“காலேஜ்ல எப்படி இருந்தாங்களோ, அப்டியே இருக்காங்க ரெண்டு பேரும் இப்பவும்" என்ற கமென்ட் நிமல்யாவின் காதை வந்தடைந்தது.

சேனாதிபதி, நிமல்யாவைத் தேடி அருகே அழைத்தான். அவளுக்கு ஒரு கோப்பையைக் கொடுத்தான்.

“ஹாய் நிமல், ரௌடி வீட்ல எப்டி? ஸ்மார்ட்டா, மொக்கையா" என்றாள் வினோதிகா.

“ஹி இஸ் ஆல்வேஸ் ஸ்மார்ட்!”

“ஆமா ஆமா... இவரு ஸ்மார்ட்னஸ் எனக்குத் தெரியாதா" சேனாதிபதியின் வயிற்றில் குத்தினாள் வினோ.

மற்ற நண்பர்களும், சேனாதிபதியையும் வினோதிகாவையும் இணைத்து காவியம் போல பேசினார்கள். ''அப்டி பண்ணிட்டு இருப்பீங்களே, இங்க இப்டி பண்ணீங்களே" எனப் புராணம் ஓடிக்கொண்டிருந்தது.

“நிமல், இவனைப் பத்தின சீக்ரெட், வீக்னஸ் எல்லாம் நான் உங்களுக்குச் சொல்லித் தரேன்" என்று வினோதிகா ஆரம்பித்ததும், “சேனா, நீ வினோதிகா பத்தி என்கிட்ட சொல்லவே இல்லை?” என்றால் நிமல்யா.

“இல்ல, ஷீ இஸ் மை காலேஜ் மேட், ஃபிரெண்ட்… பட் சொல்ல நேரம் வரலை…” என சேனாதிபதி இழுக்க…

“லுக் வினோதிகா, நீ சேனாதிபதியை லவ் பண்றியா?”

“ஹேய் கமான்…” என வினோதிகா ஆரம்பிக்க...

“பண்றியா இல்லையா?”

நண்பர்கள் லேசாக சலசலக்க…

“சேனாதிபதியை உனக்கு ரொம்ப புடிக்கும். உனக்கு அவனைப் பத்தி எல்லாம் தெரியும். அவன் மேல அட்ராக்‌ஷன்… எல்லாம் ஓக்கே... அவனை கட்டிக்கிறியா?”

“நிமல், ஸ்டாப் திஸ் நான்சென்ஸ்”

“யெஸ்... ஆக்சுவலி ஐ'ம் ஸ்டாப்பிங் திஸ் நான்சென்ஸ்''

“ ”

“க்ரஷ், பழைய லவ் எல்லாத்தைப் பத்தியும் சொன்ன… இது என்ன? ஏன் இதைச் சொல்லல? சொல்லக் கூடாத அளவுக்கு கேவலமானதா இது?”

அநீதி ஆந்தாலஜி கதைகள் - 2

வினோதிகா இடைமறித்தாள்...

“நிமல், நீங்க ரொம்ப மெச்சூர்டான பொண்ணுன்னு...”

“யெஸ்... நான் மெச்சூர்ட்தான்... ஆனா, எல்லா கேவலத்தையும் ஈஈன்னு இளிச்சிட்டுப் பார்த்துட்டுப் போறதில்லை. சீ வினோதிகா... மேட்டர் சிம்ப்பிள். இவனை லவ் பண்றியா, கல்யாணம் பண்ணிக்கிறியா? ஓக்கேன்னு சொன்னா, இப்பவே நான் டிவோர்ஸ் பேப்பர்ல சைன் பண்றேன்!”

“நிமல் திஸ் இஸ் டூ மச்… வீ ஆர் ஜஸ்ட்…”

“ஜஸ்ட், வாட்?”

“...”

“ஃப்ரெண்ட்ஸா... வெக்கமா இல்ல... இதான் ஃபிரண்ட்ஷிப் லைசென்ஸா.. பொண்டாட்டி மாதிரியே பிஹேவ் பண்ற? பொண்டாட்டி மாதிரி எல்லாம் பண்ணுவ, ஆனா தாலி கட்டிக் குடுத்தனம் நடத்த மாட்ட… இல்ல?”

வினோதிகா எழுந்து கொண்டாள்.

“சாரி எவ்ரி ஒன், லெட் மீ லீவ்!''

“நோ, பீ சீட்டட்... தெளிவா எல்லாத்தையும் சொல்லிட்டுப்போ... இல்லன்னா பிராஸ்டிட்யூஷன் நடக்குதுன்னு போலீஸைக் கூப்பிடுவேன்!''

கூட்டமே திகிலடைந்தது.

நிமல்யா, மொபைலை எடுத்து 100 டயல் செய்ய ஆயத்தமானாள்.

“ஓக்கே நிமல்... இப்ப என்ன செய்யணும்!''

சேனாதிபதி அமைதியாகக் கேட்டான். சேனாதிபதிக்குத் தெரியும், நிமல்யா என்ன வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் செய்வாள். எப்போது சுலபமாக எடுத்துக்கொள்வாள், எதற்கு அதிரடி காட்டுவாள் என்றே தெரியாது. ஆனால் அதிரடி காட்டுவது எப்போதாவதுதான். இந்த அனுபவம் சேனாதிபதிக்கே புதிது.

இந்த அதிரடியில் உண்மையான கணவன் மனைவிகளே இடைவெளி விட்டு நின்றிருந்தனர் பயத்தோடு.

“ஒண்ணும் செய்ய வேணாம். நான் சொல்றதை எல்லாம் திரும்ப சொல்லிட்டு வினோதிகா போகணும்... அவ்ளோதான் “

“ப்ளீஸ் வினோ, கோ ஆப்பரேட்!''

“வினோதிகான்னு சொல்லுடா “

“ஓக்கே”

“நான் சேனாதிபதியை லவ் பண்ணல “

“நான் சேனாதிபதியை லவ் பண்ணல “

“இனிமே சேனாதிபதியோட பொண்டாட்டி மாதிரி பிஹேவ் பண்ண மாட்டேன்!“

“இனிமே சேனாதிபதியோட பொண்டாட்டி மாதிரி பிஹேவ் பண்ண மாட்டேன்!“

“இனிமே சேனாதிபதிகிட்ட காதுல ரகசியம் பேசுற மாதிரி, நைஸா கிஸ் பண்ண மாட்டேன்!“

“இனிமே சேனாதிபதிகிட்ட காதுல ரகசியம் பேசுற மாதிரி , நைஸா கிஸ் பண்ண மாட்டேன்''

“இதுவரைக்கும் சேனாதிபதிகூட ரிலேஷன்ஷிப்ல இருந்திருந்தாலும், இனி இருக்க மாட்டேன்!“

“...”

“சொல்லு“

“சொல்ல முடியாது... உன்னால முடிஞ்சதை பார்த்துக்கோ“

வினோதிகா எழுந்து அகன்றாள்.

சேனாதிபதி... வயிற்றில் அடிபட்டவன் போல நின்றிருந்தான்.

“சேனா... பாவம், உன்னோட தியரிட்டிக்கல் வைஃப் கோச்சிட்டுப் போறா... சமாதானப்படுத்தி கூட்டிட்டு வா... அவ வந்து கன்ஃபர்ம் பண்ற வரைக்கும், நம்ம ரிலேஷன்ஷிப் ஹோல்ட்ல வைக்கிறேன்!“

அந்த வீடு?!

அந்த அரசுப்பள்ளியில் இன்டர்வெல் மணி அடித்தது. சௌந்திரா டீச்சர் வகுப்பறைக்கு சுலோச்சனா டீச்சர் வந்தார்.

“நேத்து பாதில கதையை விட்டுட்டீங்க டீச்சர்... நைட்லாம் தூக்கம் வரலை!

“எனக்கும் கட்டிக்கிட்டு வந்த புதுசுல இப்படித்தான் தூக்கம் வராம இருந்துச்சு. யார் வூட்டுக்கோ போறாருன்னு தெரிஞ்சி எப்டி தூக்கம் வரும்?”

“எப்படி டீச்சர் கண்டு புடிச்சீங்க?”

“இது என்ன அதிசயம்? நைட் மனுஷன் லேட்டா வராரு. அந்த ஊருல கிளப்பா, மண்ணா? ஹோட்டல் எல்லாம் நைட்டு 9 மணிக்கு சாத்திடும்!''

“கண்டுபுடிச்சி என்ன பண்ணீங்க?''

“மொதல்ல தூக்கம் வராம அழுதுட்டு இருந்தேன். ஊர் வேற புதுசு. கொஞ்சம் கொஞ்சமா பழகி, விஷயத்தை தெரிஞ்சிக்கிட்டேன்!“

“அப்புறம்?”

“அவங்க ரெண்டு பேருக்கும் ரொம்ப நாளா... கல்யாணத்துக்கு முன்ன இருந்தே பழக்கமாம்.''

“அப்புறம் ஏன் உங்களைக் கட்டிக்கிட்டாரு?”

அநீதி ஆந்தாலஜி கதைகள் - 2

“நான் டீச்சரு“ சொல்லிச் சிரித்தார் சௌந்திரா டீச்சர்.

சுலோச்சனாவும் சிரிக்க...

அவரு பின்னாலயே போய் ஒரு நாள் வீட்டைக் கண்டுபுடிச்சிட்டு வந்துட்டேன்.

“அப்புறம் ?”

இன்டர்வெல் பெல் மீண்டும் அடித்தது.

“சரி டீச்சர்... லன்ச்ல மீதிய சொல்றேன் “

சுலோச்சனா எழுந்து சென்றார்.

மதிய உணவின்போது சௌந்திரா அப்படியே நடந்ததைச் சொல்லுவாரா தெரியாது. நடந்தது இதுதான்.

சௌந்திரா டீச்சர் புருஷன் இன்னொருத்தியுடைய வீட்டுக்குள் நுழைந்தார். உள்ளே நடுநாயகமாக சௌந்திரா டீச்சர் அமர்ந்திருந்தார். அவரைப் பார்த்து திடுக்கிட்ட புருஷருக்கு கண்கள் மங்கி, மயக்கம் வருவது போல இருந்தது.

செளந்திரா புருஷனிடம் என்ன சொல்லியிருப்பாள்? அடுத்து என்ன நடந்திருக்கும்? கமென்ட்டில் உங்கள் க்ளைமேக்ஸை சொல்லுங்கள்! அடுத்தவாரம் உங்களின் பெஸ்ட் க்ளைமேக்ஸை என்னுடைய க்ளைமேக்ஸோடு இணைத்துவிடுவோம்!


source https://www.vikatan.com/arts/literature/couple-talks-and-relationships-aneethi-anthology-stories-part-2

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக