Ad

வியாழன், 19 நவம்பர், 2020

முதலீட்டாளர்கள் மட்டுமல்ல; மிடில் கிளாஸ் மக்களும் தங்கம் வாங்க இதுவே சரியான நேரம்... ஏன்?

கொரோனா மற்றும் ஊரடங்கு காரணமாகக் கடந்த எட்டு மாதங்களாக மக்களிடையே தங்கம் வாங்குவது மந்தமாகவே இருந்தது. இந்த நிலையில், கடந்த சில தினங்களாக மக்களிடையே தங்கம் வாங்குவது அதிகரித்திருக்கிறது.

இதற்குக் காரணங்கள் இரண்டு. ஒன்று, சென்ற வாரம் வடமாநிலங்களில் கொண்டாடப்பட்ட தந்தேராஸ் பண்டிகை. நம் ஊரில் அட்சய திருதியைக் கொண்டாடுவோம் இல்லையா, அதே போன்றதொரு பண்டிகைதான் தந்தேராஸும். இரண்டாவது காரணம், இனி வரவிருப்பது திருமண சீஸன். அதனாலும் தங்க நகைகள் வாங்குவது அதிகரித்திருக்கிறது.

gold

இந்திய நகை விற்பனையாளர் சங்கத்தின் தேசிய செயலாளர் சுரேந்திர மேத்தா, ``தந்தேராஸ் பண்டிகையையொட்டி சுமார் 20,000 கோடி மதிப்புள்ள 40 டன் தங்கம் விற்பனையாகியுள்ளது. இது சென்ற ஆண்டைவிட 35 சதவிகிதம் அதிகம். சென்ற ஆண்டைவிட தங்கத்தின் விலை 70 சதவிகிதம் உயர்ந்து இருந்தாலும் தங்க விற்பனை அதிகரித்துள்ளது. இதற்கு, கூடிய விரைவில் திருமண சீஸன் வரப்போவது மட்டுமே காரணமல்ல, இந்த வருடம் தந்தேராஸ் பண்டிகை வியாழன், வெள்ளி என இரண்டு நாள்கள் கொண்டாடப்பட்டதுதான்’’ என்கிறார்.

இது குறித்து, சென்னை நகை வணிகர்கள் சங்கத்தின் பிரசிடென்ட் (President, Madras jewellers and Bullion Merchants Association) ஜெயந்திலாலிடம் கேட்டோம்.

``தங்கத்தில் முதலீடு செய்வது நிச்சயமாக லாபம் தரும். கொரோனாவுக்கு முன்பாக ஒரு கிராம் தங்கம் 3,500 ரூபாய்க்கு விற்றுக்கொண்டிருந்தது. அது படிப்படியாக உயர்ந்து ஒரு கிராம் 4,800 ரூபாய் வரை தொட்டது. இது, தங்கத்தில் முதலீடு செய்ய வேண்டுமென்கிற எண்ணத்தைப் பலருக்கும் ஏற்படுத்தியது. கொரோனாவுக்குப் பின்பு ஏறத்தாழ 35 சதவிகிதம் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. விளைவு, முதலீட்டாளர்களுக்கும் 35 சதவிகிதம் லாபத்தைத் தந்திருக்கிறது. இது தங்கத்தில் முதலீடு செய்பவர்களுக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறது. ஏற்கெனவே பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களும் தங்கத்தில் முதலீடு செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஜெயந்திலால்

மிடில் கிளாஸ் மக்களைப் பொறுத்தவரை, வருமானத்தில் கிட்டத்தட்ட 85 சதவிகிதத்தை செலவழித்துவிடுவார்கள். இவர்களுடைய சேமிப்பு என்பது மிகவும் குறைவுதான். ஆனால், இந்த கொரோனா காலத்தில் ஹோட்டல் செலவு, ஷாப்பிங் செலவு, சினிமா செலவு, பயணச்செலவு போன்றவை இவர்களுக்கு மிச்சமானது. கூடவே, மூன்று மாதம் இ.எம்.ஐ கட்ட வேண்டாம் என்று அரசு அறிவித்த வகையில், சில ஆயிரங்கள் மிச்சம். அந்த சேமிப்புகளை தற்போது தங்கமாக மாற்றியிருக்கிறார்கள்’’ என்றவர், இனி தங்க விலை நிலவரம் எப்படியிருக்கும் என்பது பற்றியும் பேசினார்.

Also Read: `சூரரைப் போற்று' பொம்மியின் அந்த கேள்விகளுக்கும் பதில்களுக்கும்... நன்றி சுதா கொங்கரா!

``சமீபத்தில் தங்கத்தின் விலைக் குறைந்ததற்கு கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது ஒரு காரணம் என்றால், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு இன்னொரு காரணம். புதிய அரசின் கொள்கை முடிவுகள் மாறும். அதனால், தொழில்துறைகளில் நல்ல மாற்றங்கள் வரும் என்று நம்பிக்கை ஏற்பட்டது. கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதால் மருந்தக தொழில்துறை முன்னேறும் என்று தொழில்துறை பக்கம் பங்குவர்த்தகம் திரும்ப, தங்கத்தின் விலை குறைந்தது. இது நாங்கள் எதிர்பார்த்ததுதான்.

gold rate

ஆனால், மறுபடியும் மெல்ல மெல்ல தங்கத்தின் விலை ஏற ஆரம்பிக்கும். அதே நேரம் வேகமாக ஏறாது. அதனால், இந்த நேரத்தில் தங்கம் வாங்குவது புத்திசாலித்தனம்தான். தங்கத்தைப் பொறுத்தவரை வாங்கிய மூன்று, நான்கு வருடங்கள் கழித்துதான் லாபம் தரும். பங்குச் சந்தையைவிட உறுதியான வருவாயை தங்கம் நிச்சயம் கொடுக்கும்.

நிலம், பங்குச் சந்தை இரண்டும் நிச்சயமாக லாபம் தரும் என்று சொல்ல முடியாது. ஆனால், நீண்ட கால சேமிப்பில் தங்கம் நிச்சயம் கூடுதல் லாபம் தரும். இது முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும். சிறுக சிறுக வாங்கிச் சேர்க்கிற மிடில் கிளாஸ் மக்களுக்கும் பொருந்தும்’’ என்றார் அவர்.

தங்கம் வாங்க நினைக்கிறவர்கள் இப்போதைய விலையில் கொஞ்சம் தங்கத்தை வாங்க யோசிக்கலாம்!



source https://www.vikatan.com/lifestyle/is-it-the-right-time-to-buy-gold-for-savings-and-investment

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக