Ad

வியாழன், 19 நவம்பர், 2020

346 பேரை பலிவாங்கிய போயிங் விமானம் மீண்டும் பறக்க அனுமதி... எதனால், ஏன், எப்படி கிடைத்தது?!

வெறும் ஐந்து மாத இடைவெளியில் இரண்டு விபத்துகளில் 346 பேரைக பலிகொண்டன போயிங்கின் 737 MAX ரக விமானங்கள். தொடர் விபத்தின் காரணமாக ஒரு வருடத்திற்கும் மேலாகத் தடைசெய்யப்பட்டிருந்த இந்த ரக விமானங்கள் மீண்டும் பறக்கலாம் எனப் பச்சைக்கொடி காட்டியிருக்கிறது அமெரிக்காவின் Federal Aviation Administration (FAA).

Airbus v Boeing

எந்த ஒரு துறையை எடுத்துக்கொண்டாலும் உச்சபட்ச போட்டி என்பது இரு முக்கிய நிறுவனங்களுக்கு இடையேதான் இருக்கும். அப்படி விமான தயாரிப்பில் போட்டி என்பது பல வருடங்களாகவே போயிங்-ஏர்பஸ் ஆகிய இரு நிறுவனங்களுக்கு இடையேதான் இருந்து வருகிறது. சந்தையில் விற்கப்படும் முக்கால்வாசி விமானங்கள் இவை இரண்டில் ஒரு நிறுவனம் தயாரித்ததுதான். இப்படி ஒரு தொழிலில் இருமுனைப் போட்டி இருக்கும்போது ஒரு நிறுவனம் மட்டும் மேம்பட்ட புதிய தயாரிப்பையோ, சேவையோ அறிமுகப்படுத்தினால் அது நேரடியாக இன்னொரு நிறுவனத்தின் வளர்ச்சியைப் பாதிக்கும்.

2010-ம் ஆண்டு ஏர்பஸ் நிறுவனம் அப்படியான ஓர் அறிவிப்பைதான் வெளியிட்டது. ''A320 விமானத்தில் விரைவில் மேம்படுத்தப்பட்ட இன்ஜின் பொருத்தப்படும். இந்தப் புதிய விமானங்கள் A320 neo என அழைக்கப்படும்'' என்றது ஏர்பஸ். இந்த புதிய விமானங்களின் முக்கிய சிறப்பு, முன்பைவிடப் பெரிய இன்ஜின் பொருத்தப்பட்டாலும் பழைய A320 விமானத்திற்கும் இதற்கும் இயக்கத்தில் பெரிய அளவில் எந்த மாறுதல்களும் இருக்காது என்பதுதான். பழைய A320 விமானத்தை ஓட்ட பயிற்சி எடுத்த விமானிகளாலேயே இந்த விமானத்தையும் எளிதில் இயக்கிவிட முடியும். இந்தப் புதிய விமானங்கள் 15 சதவிகிதம் வரை எரிபொருளை மிச்சம் பிடித்தன. நாளுக்கு நாள் எரிபொருள் விலை உச்சம் தொட்டுக்கொண்டே போக ஏர்பஸின் இந்த புதிய ரக விமானம் பல விமானச் சேவை நிறுவனங்களையும் உடனடியாக ஈர்த்தது. ஆர்டர்கள் குவிந்தன.

Airbus A320 neo

போயிங் வாடிக்கையாளர்களும் ஏர்பஸ் பக்கம் போக போயிங் எதாவது செய்தாக வேண்டும் என அறிமுகம் செய்ததுதான் 737 MAX விமானங்கள். இவை ஏர்பஸின் A320 போலப் பல தசாப்தங்களாக வானில் பறந்துகொண்டிருக்கும் பிரபல மாடல். இதில் பெரிய இன்ஜின் ஒன்றைப் பொருத்தி ஏர்பஸ் போல ''எங்கள் புதிய விமானங்களை ஓட்டுவதற்கும் எந்த சிறப்புப் பயிற்சிகளும் தேவையில்லை'' என்றது போயிங். ஆனால், அதிலிருந்த சிக்கலைப் பலரும் கவனிக்கவில்லை.

Airbus A320 v Boeing 737-800

ஏர்பஸின் A320-க்கும், போயிங்கின் 737-க்கும் வடிவமைப்பளவில் ஒரு முக்கிய வித்யாசம் உண்டு. போயிங்கின் 737-ல் தரைக்கும் விமானத்துக்கும் இருக்கும் இடைவெளி என்பது A320-யைவிட குறைவு. இதனால் பெரிய இன்ஜின் பொருத்த 737-ல் போதிய இடம் கிடையாது. என்ன செய்யலாம் என யோசித்த போயிங் பொறியாளர்கள் இன்ஜினை சற்றே மேலே பொருத்தலாம் என்ற முடிவுக்கு வந்தனர். 737 MAX அறிமுகமானது. போயிங்கிற்கும் ஆர்டர்கள் குவியத்தொடங்கின.

ஆனால், இப்படி இன்ஜின்களை மேலே பொருத்தியதால் ஒரு சிக்கல் ஏற்பட்டது. இந்த புதிய கட்டமைப்பால் விமானத்தின் முன்பகுதி (nose) முழு உந்துதலில் (Full Thrust), அதாவது டேக்-ஆஃப் நேரங்களில் சாதாரணமாகச் செல்வதை விடச் சற்றே மேல் நோக்கிச் செல்லும். இப்படியாக மேல்நோக்கி செல்வது ஒரு கோணத்தைத் தாண்டி சென்றால் விமானம் பறக்கும் தன்மையை இழக்கும்(stall) அபாயம் இருந்தது. பொதுவாக 'Angle of attack' எனப்படும் கோணம் 15-20 டிகிரியைத் தாண்டினால் இது நடக்கும். இதைத் தடுக்கத்தான் MCAS என்ற Maneuvering Characteristics Augmentation System இதில் சேர்க்கப்பட்டது. இது Angle of attack அதிகமாவதாகத் தெரிந்தால் தானாகச் செயல்படத்தொடங்கி விமானத்தை கீழ்நோக்கி நகர்த்தும். ஆனால், ஏர்பஸுடன் போட்டிப்போட வேண்டும் என்பதால் இப்படி ஒரு விஷயம் இருப்பதையே விமானிகளிடம் தெளிவாக விளக்கவில்லை போயிங். 'எந்த கூடுதல் பயிற்சியும் தேவையில்லை' என்ற பிம்பத்தை உருவாக்குவதில் தீவிரமாக இருந்தது.

Angle of attack

2017-லிருந்து விமானச் சேவை நிறுவனங்கள் இந்த 737 MAX ரக விமானங்களைப் பயன்படுத்தத் தொடங்கின. அப்படித்தான் இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவனமும் இந்த 737 MAX 8 விமானத்தை வாங்கிப் பயன்படுத்தியது. அதில் ஒரு விமானம் அக்டோபர் 29, 2018 ஜகார்த்தாவில் இருந்து புறப்பட்டது. டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களில் விமானம் தானாக MCAS மென்பொருளால் கீழ் நோக்கித் தள்ளப்பட்டது. விமானிகளுக்கு என்ன நடக்கிறது எனப் புரியவில்லை. 12 நிமிடம் விமானிகள் விமானத்துடன் நடத்திய போராட்டத்துக்குப் பிறகு விமானம் கடலில் இறங்கியது. 189 பேர் உயிரிழந்தனர்.

Boeing Crash

இந்த விபத்தைக் குறித்த முதல்கட்ட விசாரணையில் விமானத்தில் சென்சார் ஒன்று தவறான Angle of attack-ஐ கொடுத்து தேவையில்லாத நேரத்தில் MCAS-ஐ ஆன் செய்தது தெரியவந்தது. இதனால் விமானி விமானத்தை மேலேற முயற்சி செய்ய இந்த MCAS விமானத்தைக் கீழ் இறக்க முயன்றுள்ளது. இந்தப் புதிய சிஸ்டம் குறித்துப் போதிய தகவல்களை விமானிகளிடமும், சேவை நிறுவனங்களுடனும் போயிங் தெரிவிக்கவில்லை. இப்படி ஏதேனும் பிரச்னை நிகழ்ந்தால் விமானிகளால் MCAS-ஐ ஆஃப் செய்ய முடியும். ஆனால், 737 MAX பழைய விமானத்தைப் போன்றதுதான் என்ற பிம்பத்தை உருவாக்கியிருந்த போயிங் இதற்கான முழு பயிற்சியை பைலட்களுக்கு வழங்கவில்லை என்பதால் விபத்து நடந்தது.

அடுத்து 2019 மார்ச் மாதம் எத்தியோப்பியன் ஏர்லைன்ஸின் விமானம் ஒன்று இதேபோன்று டேக் ஆஃப் ஆன சில நிமிடங்களில் தரையில் மோதியது. இதில் 157 பேர் உயிரிழந்தனர். முதலில் கிடைத்த ரேடார் தகவல்களை வைத்து லயன் ஏர் விபத்தைப் போன்றேதான் இதுவும் நிகழ்ந்திருக்கக் கூடும் என்று கருதப்பட்டது. விமானிகள் போயிங் தரப்பிலிருந்து கொடுக்கப்பட்ட அவசரக்கால நடைமுறைகளைப் பின்பற்றியும் விபத்தைத் தடுக்கமுடியவில்லை என்பதும் தெரியவந்தது. உலகமெங்கும் இந்த ரக விமானங்கள் பறக்கத் தடைவிதிக்கப்பட்டன.

FAA

இரண்டு விபத்துகள் குறித்தும் ஆணையம் அமைக்கப்பட்டு தீவிர விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன. இறுதியாக 18 மாத விசாரணைக்குப் பிறகு அமெரிக்க உறுப்பினர் அவையில் செப்டம்பர் மாதம் இது குறித்த முழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதில் போயிங்கின் அலட்சியமும் FAA-ன் ஒழுங்கற்ற செயல்பாடுமே இந்த விபத்துகளுக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்பட்டது. 239 பக்க அறிக்கையில் எப்படி மீண்டும் மீண்டும் போயிங்கும், FAA-வும் தவறு மேல் தவறு செய்தன என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட இரண்டு மாதங்களுக்குள் தற்போது போயிங் 737 MAX ரக விமானங்களுக்கு மீண்டும் பறக்க அனுமதி வழங்கியிருக்கிறது FAA. இதன் தலைவர் ஸ்டீவ் டிக்சன் அனுமதி வழங்கும் ஆணையைப் பிறப்பித்துள்ளார். "மிக உன்னிப்பாக விபத்துகளின் காரணங்களைக் கண்காணித்து அவற்றுக்குத் தீர்வு கண்டுள்ளது FAA. போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாலேயே இந்த அனுமதி தரப்படுகிறது. இந்த முடிவை எடுப்பதற்கு நாங்கள் பல காலம் எடுத்துக்கொண்டோம். முதலிலிருந்தே இந்த விஷயத்தில் எதையும் அவசர அவசரமாகச் செய்யமாட்டோம் என உறுதியளித்திருந்தோம்" எனத் தெரிவித்திருக்கிறார் டிக்சன். செப்டம்பர் மாதம், தானே இந்த விமானத்தில் பறந்து பார்த்ததாகவும், இப்போது இந்த விமானத்தில் தனது குடும்பத்தினரையும் அனுப்பிவைக்கத் தயாராக இருப்பதாகவும் பேட்டியளித்திருக்கிறார் டிக்சன்.

இப்போது இந்த விமானத்தில் மொத்தமாக MCAS மற்றும் பிற மென்பொருள்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. விமானிகளுக்குக் கூடுதல் பயிற்சி வழங்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனாவால் மொத்த விமான போக்குவரத்துத் துறையும் முடங்கிப்போயிருக்கும் சூழலில் இந்த அறிவிப்பானது வெளியாகியிருக்கிறது. உலகமெங்கும் இருக்கும் அனைத்து விமானச் சேவை நிறுவனங்களும் இழப்புகளைச் சந்தித்துவருகின்றன. அமெரிக்காவில் சராசரியாகப் பயணிப்பதில் மூன்றில் ஒரு பங்குதான் இப்போது விமானத்தில் பயணிக்கின்றனர் என்கின்றன புள்ளிவிவரங்கள்.

போயிங் நிறுவனமுமே கடும் இழப்பைச் சந்தித்துவருகிறது. கடந்த மாதம் 7,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்தது போயிங். ஏற்கெனவே இந்த ஆண்டின் தொடக்கத்தில் அந்நிறுவனத்தில் 19,000 பணிநீக்கம் செய்யப்பட்டிருந்தனர். இந்தியாவைப் பொறுத்தவரையில் வெறும் FAA அனுமதியை மட்டும் வைத்து போயிங் 737 MAX தடை நீங்காது. DGCA, FAA-ன் அறிக்கையைப் பார்த்து அதன் பிறகே இதன் முடிவைச் சொல்லும். ஆனால், FAA-ன் அனுமதி காரணமாக 737 MAX விமானங்களை அதிக அளவில் ஆர்டர் கொடுத்திருந்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனத்தின் பங்குகள் இன்று உயர்ந்திருக்கின்றன.

Grounded Boeing 737 Max

இந்த விபத்திற்குப் பிறகு பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்புகளைச் சந்தித்திருந்தது போயிங். இதற்கு முன்பு CEO பொறுப்பிலிருந்த டெனிஸ் ம்யூலன்பெர்க் பதவி விலகினார்.

இப்படிப்பட்ட அனுபவ பாடங்கள் கற்பதற்கு முன்பே லாபத்தை விட நேர்மையும், மக்கள் பாதுகாப்பும் முக்கியம் என நிறுவனங்கள் உணரவேண்டும் என்பதே மக்களின் வேண்டுகோள்!



source https://www.vikatan.com/technology/tech-news/boeing-737-max-which-killed-346-in-two-deadly-crashes-cleared-to-fly

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக