Ad

திங்கள், 9 நவம்பர், 2020

பாம்பன் பாலத்தில் மோதிய ராட்சத கிரேன் மிதவை - ரயில் போக்குவரத்து ரத்து!

பாம்பன் கடலில் கட்டப்பட்டுவரும் புதிய ரயில் பாலப் பணிகளில் பயன்படுத்தப்படும் கிரேன் மிதவை கடல் கொந்தளிப்பால் ரயில் பாலத்தில் சிக்கியது. இதனால், பாம்பன் பாலத்தில் நேற்று இரவு முதல் ரயில் போக்குவரத்து ரத்துசெய்யப்பட்டது.

பாம்பன் பாலம் அருகே கட்டப்படும் புதிய பாலம்

நாட்டின் நிலப்பரப்புடன் ராமேஸ்வரம் தீவை இணைக்கும் வகையில், 1914-ம் ஆண்டு பாம்பன் ரயில் பாலம் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்டது. பாம்பன் கடலின் மீது கட்டப்பட்ட இந்திரா காந்தி சாலை பாலம், வாகனப் போக்குவரத்து பயன்பாட்டுக்கு வரும் வரையில் ரயில் பாலம் மட்டுமே தீவுக்குள் செல்வதற்கான ஒரே வாய்ப்பாக இருந்துவந்தது. சுமார் 106 ஆண்டுகளைக் கடந்தும் ரயில் போக்குவரத்துக்கு உதவிவரும் பாம்பன் பாலத்தில், இதுவரை எந்த விபத்தும் ஏற்பட்டதில்லை. இந்தநிலையில், கப்பல்கள் செல்லும் வகையில் பாம்பன் பாலத்தின் இடையே அமைக்கப்பட்டிருக்கும் ஹெர்சர் தூக்குப் பாலம் கடந்த சில ஆண்டுகளாக வலுவிழந்திருக்கிறது. இதனால் அவ்வப்போது ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

நேற்று இரவு பாம்பன் பாலத்தில் சிக்கிய மிதவை

இதைத் தொடர்ந்து பாம்பன் கடலின் மீது இரு வழிப் பாதை கொண்ட ரயில் பாலம் அமைக்க மத்திய அரசு முடிவு செய்தது. 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவிருக்கும் புதிய ரயில் பாலத்துக்கான பணிகள் கடந்த ஆண்டு நவம்பரில் தொடங்கின. வடகிழக்குப் பருவமழை தொடங்கியதால் தொடர்ந்து பணிகள் நடக்கவில்லை. இந்த ஆண்டு ஜனவரி முதல் மீண்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய ரயில் பாலத்தின் வழியாக கப்பல்கள் செல்லும் வகையில் `வெர்டிக்கல் டைப்’ தூக்குப் பாலமும் அமையவிருக்கிறது.

மீட்க முடியாத நிலையில் சிக்கியுள்ள மிதவை

இதற்கென தற்போதைய தூக்குப் பாலத்தின் அருகில் புதிய பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி நடந்துவருகிறது. இதில் கிரேன், கலவை எந்திரங்கள், பாறை துளைப்பான் கருவிகள்கொண்ட மிதவைகள் பயன்படுத்தப்பட்டுவருகின்றன.

பாம்பன் வடகடல் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் புதிய பாலத்துக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுவரும் மிதவைகள் காற்றின் வேகத்தால் கட்டுப்பாட்டை இழந்து, தற்போதுள்ள பாம்பன் ரயில் பாலத்தின் மீது மோதும் சம்பவங்கள் அவ்வப்போது நடந்துவருகின்றன. நேற்று முன்தினம் அதிகாலை பாலப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட மிதவை ஒன்று, பாம்பன் பாலத்தின் மீது மோதியது. இதனால் பாலத்தின் உறுதித்தன்மை பாதிக்கப்பட்டதுடன், பயணிகளின் பாதுகாப்பும் கேள்விக்குறியாகியிருக்கிறது.

கடல் கொந்தளிப்பால் மூழ்கியுள்ள மிதவைகள்.

இந்தநிலையில், வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருப்பதால், பாம்பன் வடகடல் பகுதியில் தற்போது கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இந்தக் கொந்தளிப்பில் புதிய பாலத்துக்கான மிதவைப் படகு ஒன்று நேற்று காலை சிக்கியது. கிரேனுடனிருந்த அந்த மிதவை கட்டுப்பாட்டை இழந்த நிலையில், அதிலிருந்த வேலையாட்கள் படகு மூலம் மீட்கப்பட்டனர். இதையடுத்து பழைய ரயில் பாலத்தில் மோதாமலிருக்க அந்த கிரேன் மிதவையில் துளையிடப்பட்டு கடலில் மூழ்கடிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து நேற்று விகடன் டாட்காமில் செய்தி வெளியிட்டிருந்தோம். இதைத் தொடர்ந்து புதிய பாலத்துக்கான தூண்கள் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

Also Read: கடல் கொந்தளிப்பு... கட்டுப்பாடு இழக்கும் மிதவைகள் - சேதமடையும் பாம்பன் ரயில் பாலம்!

இதையடுத்து கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்ட கிரேன்கள், கலவை எந்திரங்களுடன்கூடிய மிதவைகள் வடகடல் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்தன. நேற்று இரவு கடல் கொந்தளிப்பில் சிக்கிய கிரேன் மிதவை ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாம்பன் ரயில் பாலத்தின் அடியில் சிக்கியது. இதனால் பாம்பன் பாலத்தில் இயங்கும் தானியங்கி பாதுகாப்பு சிக்னல் கிடைக்கவில்லை. இதையடுத்து நேற்று இரவு ராமேஸ்வரத்திலிருந்து சென்னை செல்லும் சேது விரைவு ரயில் பாம்பன் பாலம் அருகே நிறுத்தப்பட்டது.

பாம்பன் பாலம் அருகே நிறுத்தப்பட்ட ரயில்.

பாலம் கட்டும் பணியில் ஈடுபட்டவர்கள் தற்போதைய பாலத்தின் அடியில் சிக்கிய கிரேன் மிதவையை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், காற்றின் வேகத்தால் அதை மீட்க முடியவில்லை. இதையடுத்து நேற்று இரவு சென்னை செல்லும் ரயில் ரத்து செய்யப்பட்டது. இன்று காலை வரை மீட்புப் பணிகள் தொடர்ந்தும் பாலத்தில் சிக்கிய மிதவையை மீட்க முடியவில்லை. இதனால் இன்று காலை சென்னையிலிருந்து ராமேஸ்வரம் வந்த சேது விரைவு ரயில் மண்டபத்தில் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பாலத்தில் சிக்கிய மிதவையை மீட்கும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருகிறது. தற்போதைய பாலத்துக்கு பெரிய அளவிலான சேதம் ஏற்படுவதற்கு முன்பாக அந்த மிதவையை மீட்க வேண்டும் என மீனவர்களும் பொதுமக்களும் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/news/accident/giant-crane-crashes-on-pamban-railway-bridge

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக