Ad

திங்கள், 9 நவம்பர், 2020

`பட்டாசு வெடிப்பதில் பாடம் எடுக்க வேண்டாம்!’ - அடுத்த சர்ச்சையில் தனிஷ்க் ஜுவல்லரி

`சமீபத்தில் வெளியான தனிஷ்க் ஜுவல்லரி விளம்பரம் `லவ் ஜிகாத்தை ஆதரிக்கிறது’ என்று வலதுசாரி அமைப்புகள் சர்ச்சையைக் கிளப்பினர். இதையடுத்து, அந்த விளம்பரம் நீக்கப்பட்டது. அந்த சர்ச்சைக்குப் பிறகு, நீனா குப்தா, அலயா, நிம்ரத் கௌர், சயானி குப்தா ஆகியோர் நடித்த தனிஷ்க் ஜுவல்லரியின் புதிய தீபாவளி விளம்பரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

தனிஷ்க் ஜுவல்லரி

கடந்த அக்டோபர் 9-ம் தேதி, தனிஷ்க் ஜுவல்லரியின் விளம்பரம் ஒன்று வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த விளம்பரத்தில் இந்து மதத்தைச் சேர்ந்த மருமகளுக்கு இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவதைப்போல காட்சியமைப்பட்டிருந்தது.

இந்த விளம்பரம் வெளியான சில மணி நேரத்திலேயே, ``தனிஷ்க் விளம்பரம் 'லவ் ஜிகாத்'தை ஆதரிக்கும் வகையில் எடுக்கப்பட்டிருக்கிறது'' என்று சிலர் தனிஷ்க் நிறுவனத்துக்கு எதிராக இணையத்தில் பதிவிடத் தொடங்கினர். இதைத் தொடர்ந்து #BoycottTanishq என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, அக்டோபர் 12-ம் தேதியன்று, தனிஷ்க் நிறுவனம் அந்த விளம்பரத்தைத் திரும்பப் பெற்றதோடு, அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.

இந்தச் சம்பவம் நடந்த சில வாரங்ககளிலேயே, அதே தனிஷ்க் ஜுவல்லரி தீபாவளியை முன்னிட்டு வெளியிட்டிருக்கும் புதிய விளம்பரம் மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. புதிய விளம்பரத்தில், நடிகைகள் இந்த ஆண்டு தீபாவளியை எவ்வாறு கொண்டாடுவார்கள் என்பது பற்றிப் பேசுகிறார்கள். குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது, நகைகள் மற்றும் துணிகளை அணிவது போன்ற தீபாவளித் திட்டங்களை அவர்கள் பகிர்ந்துகொள்வதுபோலக் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

நீனா குப்தா, அலயா, நிம்ரத் கௌர், சயானி குப்தா ஆகியோர் நடித்த தனிஷ்க் ஜுவல்லரியின் தீபாவளி விளம்பரத்தில், நடிகைகள் தங்களது தீபாவளித் திட்டங்களைப் பகிர்ந்துகொள்ளும்போது, சயானி குப்தா, ``நான் நீண்டகாலத்துக்குப் பிறகு என் அம்மாவைச் சந்திக்க முடியும் என்று நம்புகிறேன். இந்த தீபாவளிக் கொண்டாட்டத்தில் நிச்சயமாகப் பட்டாசுகள் இல்லை. யாரும், எந்த பட்டாசையும் வெடிக்கக் கூடாது என்று நான் நினைக்கவில்லை. ஆனால், நிறைய ஒளி, நிறைய சந்தோஷங்கள், நம்பிக்கையூட்டும் நேர்மறையான எண்ணங்கள் என தீபாவளி பிராகாசிக்கும்’’ என வசனம் பேசுகிறார்.

புதிய விளம்பரம் வெளியான சில மணி நேரத்தில், கர்நாடகாவைச் சேர்ந்த பா.ஜ.க தேசிய பொதுச்செயலாளர் சி.டி.ரவி, தனிஷ்க் ஜுவல்லரியைத் தாக்கிக் கருத்து பதிவிட்டார்.

அதில், ``எங்கள் பண்டிகைகளை எவ்வாறு கொண்டாடுவது என்று இந்துக்களுக்கு ஏன் யாரோ ஒருவர் அறிவுறுத்த வேண்டும்? நிறுவனங்கள், தங்கள் தயாரிப்புகளை விற்பனை செய்வதில் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, பட்டாசு வெடிப்பதைத் தவிர்ப்பதற்கு எங்களுக்குப் பாடம் எடுக்கக் கூடாது. நாங்கள் விளக்குகள் ஏற்றிவைப்போம், இனிப்புகள் விநியோகிப்போம், பட்டாசுகளை வெடிப்போம்’’ என்று குறிப்பிட்டுப் பதிவிட்டிருந்தார்.

சி.டி.ரவியின் கருத்து சமூக ஊடகங்களில் #boycotttanishq என்ற ஹேஷ்டேக்குக்கு வித்திட்டு, தற்போது பலரும் தனிஷ்க் ஜுவல்லரிக்கு எதிராகக் கருத்துகளைப் பகிரத் தொடங்கியிருக்கிறார்கள்.



source https://www.vikatan.com/social-affairs/controversy/again-boycott-tanishq-trends-on-twitter

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக