அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தர் சூரப்பா மீதான முறைகேடு புகார்களை விரைவில் விசாரிக்க உள்ளது ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான குழு. `துணைவேந்தர் சூரப்பா மீதான ஊழல் புகார்களை லஞ்ச ஒழிப்புத்துறைக்கு அனுப்புவதில் அரசுக்கு என்ன தயக்கம் எனத் தெரியவில்லை?' என்கின்றனர் கல்வியாளர்கள்.
Also Read: `எமினன்ஸ் அந்தஸ்து; சூரப்பாவின் கடித சர்ச்சை!'- அண்ணா பல்கலையை ஏன் குறிவைக்கிறது மத்திய அரசு?
சென்னை, அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராகக் கடந்த 2018 ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார் சூரப்பா. இதற்கான போட்டியில் பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் துணைத் தலைவர் தேவராஜ் உள்பட பலர் இருந்தும், கர்நாடகாவில் இருந்து சூரப்பாவைக் கொண்டு வந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித். இதனை அரசியல் கட்சிகள் பலவும் கடுமையாக எதிர்த்தன.
இதையெல்லாம் பொருட்படுத்தாமல், பதவிக்கு வந்த நாள் முதலாக தமிழக அரசைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாகச் செயல்பட்டு வந்தார் சூரப்பா. ஆளுநர் மாளிகையின் ஆசிர்வாதம் இருந்ததால், சூரப்பாவை எதிர்த்து உயர் கல்வித்துறையால் எதையும் செய்ய முடியவில்லை. இதர பல்கலைக்கழகங்களின் மீது அதிகாரத்தைக் காட்டிய அமைச்சரும், அண்ணா பல்கலைக்கழகம் என்று வரும்போது அமைதி காத்தார்.
இந்தநிலையில், கொரோனா பரவலைக் காரணம் காட்டி, `அரியர் மாணவர்கள் தேர்வுக்காக பணம் கட்டியிருந்தாலே தேர்ச்சி' என்ற திட்டத்தை அறிவித்தார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. இதனை எதிர்க்கட்சிகளும் கல்வியாளர்களும் வரவேற்ற நிலையில், இதனை எதிர்த்து ஏஐசிடிஇ-க்கு மெயில் ஒன்றை அனுப்பினார் சூரப்பா. `இவ்வாறு தேர்ச்சி என அறிவிப்பதற்கு விதிகளில் இடமில்லை' என ஏஐசிடிஇ-க்கு அனுப்பிய மெயில் குறித்தும் பேட்டியளித்தார். இதனை தமிழக அரசு ரசிக்கவில்லை. இதற்குப் பதிலடியாக பேட்டியளித்த அமைச்சர் கே.பி.அன்பழகன், ` மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழக துணைவேந்தர்களில் இவர் ஒருவர் மட்டுமே அரசின் அறிவிப்பை எதிர்க்கிறார்' என்றார். இந்த விவகாரம் ஓய்வதற்குள் `எமினன்ஸ் அந்தஸ்து' என்ற உயர் சிறப்புத் தகுதி பெறுவதற்காக மத்திய மனிதவள அமைச்சகத்துக்குக் கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார் சூரப்பா. `ஐ.ஐ.டி போல உயர் சிறப்பு கல்வி நிறுவனமாக அண்ணா பல்கலைக்கழகம் மாறும்' எனவும் கூறப்பட்டது. `இதனால் இடஒதுக்கீடு பாதிக்கும், இப்படியொரு சிறப்பு அந்தஸ்து தேவையில்லை' என எதிர்க்கட்சிகள் குரல் எழுப்பின.
இந்த விவகாரத்தில் தொடக்கத்தில் எந்தக் கருத்தையும் கூறாமல் மௌனம் காத்த உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், ஒருகட்டத்தில், ` உயர் சிறப்பு அந்தஸ்து தேவையில்லை' என அறிவித்தார். இவ்வாறு தொடர்ச்சியாக மாநில அரசை சீண்டிக் கொண்டே இருந்ததால், சூரப்பா மீதான புகார்களைத் தூசி தட்டத் தொடங்கியது தமிழக அரசு. அதன் விளைவாக, ஓய்வுபெற்ற முன்னாள் நீதிபதி கலையரசன் தலைமையில் விசாரணைக் குழு அமைத்து அரசாணை வெளியிட்டுள்ளது. இந்தக் குழுவின் விசாரணை விரைவில் தொடங்க உள்ள நிலையில், `சூரப்பாவை சஸ்பெண்ட் செய்யாமல் வைத்திருப்பது ஏன்... லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்குப் பரிந்துரைக்காமல் அரசு ஏன் மௌனம் காக்கிறது?' என்றெல்லாம் அரசியல் கட்சிகள் கேள்வியெழுப்பத் தொடங்கியுள்ளன.
இதுதொடர்பாகப் பேட்டியளித்த உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், `` துணைவேந்தர் மீது புகார்கள் வந்ததன் எதிரொலியாக, உண்மை நிலையை அறிவதற்காக விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சூரப்பா நேர்மையானவராக இருந்தால் விசாரணைக் கமிஷனை எதிர்கொண்டு, தாம் குற்றமற்றவர் என்று நிரூபிக்க வேண்டும். விசாரணை கமிஷன் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையிலேயே சூரப்பா மீது நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரத்தில் சூரப்பா பயப்படத் தேவையில்லை. ஒருவர் மீது புகார் எழுந்த உடன், அவரை சஸ்பெண்ட் செய்யச் சொல்வதே ஸ்டாலினுக்கு வேலையாகப் போய்விட்டது. தானும் ஊரில் இருக்கிறேன் என்பதைக் காட்டுவதற்காக ஸ்டாலின் அறிக்கை விடுகிறார்" என்றார்.
அமைச்சரின் பேட்டி தொடர்பாக, சென்னைப் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சிக்குழு உறுப்பினர் பேராசிரியர் சிவக்குமாரிடம் பேசினோம். `` துணைவேந்தர் உள்பட அரசியலமைப்பு சார்ந்த பதவிகளில், ஒருவரைப் பணியிடை நீக்கம் செய்வதற்கு ஏராளமான விதிகள் உள்ளன. ஒருவர் மீது புகார் வந்தவுடனேயே பணியிடை நீக்கம் செய்துவிட முடியாது. சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தராக டாக்டர் ஞானம் இருந்தபோது, சிண்டிகேட் உறுப்பினர் பேராசிரியர் கருணானந்தம் அவர் மீது முறைகேடு புகார் ஒன்றை எழுப்பினார். இந்த முறைகேடு தொடர்பான ஆவணங்களையும் ஆளுநர் அலுவலகம் கேட்டது. ஒருகட்டத்தில் டாக்டர் ஞானம் பதவி விலகிச் சென்றுவிட்டார். இதேபோல், அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தராக இருந்த மன்னர் ஜவஹர் மீது முறைகேடு புகார்கள் சுமத்தப்பட்டன. அவர் பதவியில் இருந்த காலம் வரையில் நடவடிக்கை எடுக்கவில்லை. மாறாக, அவர் மீண்டும் பேராசிரியர் பணிக்குத் திரும்பியபோது பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
அந்த வரிசையில், கோவை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக இருந்த ராதாகிருஷ்ணன் மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. அப்போதிருந்த அரசு அவரை பணியிடைநீக்கம் செய்தது.பின்னர் அவர் கைது செய்யப்பட்டார். இதேபோன்று சில துணைவேந்தர்கள் மீது நடவடிக்கைகள் பாய்ந்தன. ஒருகட்டத்தில் மாநில அரசின் அழுத்தம் காரணமாக பதவியை விட்டு விலகிப் போனவர்களும் உண்டு. எனவே, ஒரு துணைவேந்தர் மீது முறைகேடு புகார்கள் வந்தால், அவரை விடுப்பில் போகுமாறு நிர்பந்தம் கொடுக்கலாம்.
Also Read: பதவியில் தொடரும் சூரப்பா: `திரைமறைவு பேரமா... முதல்வர் நடத்தும் நாடகமா?’ - தி.மு.க தலைவர் ஸ்டாலின்
மேலும், ஆட்சிக்குழுவில் உயர்கல்வித்துறை செயலர் உள்பட அரசுப் பிரதிநிதிகளும் உள்ளனர். அவர்கள் மூலமாக துணைவேந்தருக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரலாம். இந்த விவகாரத்தில், தானே பதவியில் இருந்து விலகுவதுதான் சூரப்பாவுக்கு நல்லது. பல்கலைக்கழகத்தில் இருந்து கொண்டே விசாரணையை எதிர்கொள்வேன் என்று அவர் கூறுவது நல்லதல்ல. காரணம், முறைகேடு தொடர்பான கோப்புகளை நீர்த்துப் போகச் செய்வதற்கான முயற்சிகள் நடக்கலாம்" என்றார் ஆதங்கத்துடன்.
சூரப்பாவுக்கு எதிராக என்னென்ன ஆதாரங்களை கலையரசன் கமிட்டி சேகரிக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள் அண்ணா பல்கலைக்கழக ஊழியர்கள்.
source https://www.vikatan.com/government-and-politics/controversy/educationalist-slams-government-actions-against-surappa
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக