Ad

வெள்ளி, 13 நவம்பர், 2020

`அமித்ஷா புகைப்படத்தை முடக்கிய ட்விட்டர்!’ - பதிப்புரிமைக் குழப்பத்தால் சர்ச்சை

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் புரோஃபைல் படத்தை ட்விட்டர் நிர்வாகம் சில மணி நேரம் முடக்கிவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

அரசியல் தலைவர்கள் தொடங்கி உலக திரைப் பிரபலங்கள் என அனைவரும் தங்கள் தனிப்பட்ட கருத்துகளில் தொடங்கி அதிகாரபூர்வ தகவல்கள் வரை பதிவேற்றம் செய்ய சமுகவலைதளமான ட்விட்டரைப் பயன்படுத்தி வருகின்றனர். இதுபோன்ற முக்கியப் பிரபலங்களின் ட்விட்டர் பக்கத்தை ஆராய்ந்து, அந்தக் கணக்கு சம்பந்தப்பட்ட நபரின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கம் என்ற அந்தஸ்தையும் ட்விட்டர் நிறுவனம் புளூ டிக் வழங்குவது வழக்கம்.

இதன் அடிப்படையில், இந்தியாவைப் பொறுத்தவரை அதிக பாலோயர்ஸ் கொண்ட அதிகாரபூர்வ ட்வீட்டர் கணக்கை வைத்திருக்கும் அரசியல் தலைவர்கள் பட்டியலில் பிரதமர் மோடிக்கு அடுத்தபடியாக விளங்குபவர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா. இவரது ட்விட்டர் கணக்கை 23.6 மில்லியன் பேர் பின் தொடருகிறார்கள். இந்நிலையில் அவரது ட்விட்டர் பக்கத்தில் உள்ள புரோஃபைல் படத்தை ட்விட்டர் நிறுவனம் நேற்று திடீரென முடக்கியது.

அமித் ஷா ட்விட்டர் பக்கம்

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் அதிகாரபூர்வ ட்வீட்டர் பக்கத்தில் உள்ள முகப்பு புகைப்படத்தை (Display Picture - DP) ட்வீட்டர் நிறுவனம் நேற்று திடீரென முடக்கி வைத்தது. அந்த புகைப்படத்திற்கு பதிலாக "Media not Displayed" எனத் தோன்றியது. யாரோ ஒருவர் அந்த புகைப்படத்திற்க்கு உரிமை கோரியதாகவும், இதனால் ட்விட்டர் நிறுவனம் அவரது படத்தைக் காண்பிக்காமல் சில நிமிடங்கள் முடக்கி வைத்ததாகவும் தகவல் வெளியானது.

Also Read: `இந்திய கலாசாரத்தில் இருந்து அகற்றவே முடியாதது இந்தி மொழி!’ - உள்துறை அமைச்சர் அமித் ஷா

ட்விட்டர் புகைப்பட பதிப்புரிமை விவகாரம் தொடர்பான அறிக்கைக்கு பதில் கிடைக்காத நிலையில், அந்தப் படம் நீக்கப்பட்டதாக ட்விட்டர் தெரிவித்திருந்தது. இதையடுத்து, உரிய பதில் கிடைத்த உடன், மீண்டும் அமித்ஷாவின் டிஸ்ப்ளே படத்தை மீள்பதிவேற்றம் செய்தது ட்விட்டர் நிறுவனம்.

அமித்ஷா

இச்சம்பவம் குறித்து ட்விட்டர் செய்தித் தொடர்பாளர் அளித்துள்ள விளக்கத்தில், கவனக்குறைவான பிழை காரணமாக, உலகளாவிய பதிப்புரிமைக் கொள்கைகளின் கீழ் இந்த கணக்கை தற்காலிகமாக முடக்கியதாகவும், பின்னர் இந்த முடிவு உடனடியாக மாற்றப்பட்டு, ட்விட்டர் கணக்கு முழுமையாக செயல்பாட்டில் இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த விவகாரம் திடீர் சலசலப்பை ஏற்படுத்தியது.



source https://www.vikatan.com/news/politics/twitter-removed-amit-shah-dp

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக