Ad

வெள்ளி, 13 நவம்பர், 2020

48 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காத வேட்டங்குடி கிராமம்... இனிப்பு வழங்கி வாழ்த்திய கலெக்டர்!

பறவையின் நலனுக்காக வெடிபோடாமல் தீபாவளி கொண்டாடும் கிராம மக்களுக்கு ஆட்சியர் இனிப்பு வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பறவைகளுக்காக 48 ஆண்டுகளாக கிராம மக்கள் வெடி வெடிக்காமல் தீபாவளி கொண்டாடி வருகின்றனர். திருப்பத்தூர் தொகுதிக்கு உட்பட்டு வருகிறது வேட்டங்குடி. இந்த வேட்டங்குடி பறவைகள் சரணாலயத்தில் 217 வகையான 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்நாட்டு, வெளிநாட்டு பறவைகள் ஆண்டுதோறும் வந்து செல்லும்.

வேட்டங்குடியில் பறவைகள்

செப்டம்பர் முதல் பிப்ரவரி வரை தொடர்ந்து பறவைகள் கூடுகட்டி குஞ்சு பொறித்துச் செல்லும். உண்ணி கொக்கு, முக்குளிப்பான், நீலச்சிறவி, சாம்பால் நிற நாரை, இரவு நாரை, பாம்புதாரளி, கருநீல அரிவாள் மூக்கன், கரண்டி வாயன், நத்தை கொக்கு உள்ளிட்ட பறவைகள் அதிகளவு வேட்டங்குடியில் காண முடியும்.

இந்நிலையில் சரணாலயம் அருகே உள்ள வேட்டங்குடி, கொள்ளுக்குடி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் தங்களின் சொந்த விசேஷங்களுக்கோ, ஊர் திருவிழாவிற்கோ பட்டாசு வெடிக்க மாட்டார்கள். அதேபோல் பறவைகளுக்கு தொந்தரவு செய்யும் விதமாக மேள தாளங்களோ, ஒலி பெருக்கியோ வைப்பதில்லை.

இதனால் வேட்டங்குடி சரணாலயத்தில் பறவைகள் இயல்பாக வந்து செல்கின்றன. இப்பகுதி மக்கள் தீபாவளிக்கும் பட்டாசுகள் வெடிக்காமல் அமைதியான முறையில் புத்தாடைகள் உடுத்தியும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடுவது வழக்கம்.

பறவைகள்

இதைப் பாராட்டும் விதமாக சிவகங்கை மாவட்ட நிர்வாகம் சார்பாகவும் வனத்துறை சார்பாகவும் இப்பகுதி மக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன், மாவட்ட வன அலுவலர் ரமேஷ்வரன், வனச்சரக அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்துகொண்டனர். அப்பகுதியில் உள்ள 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு இனிப்புகள் வழங்கி மாவட்ட ஆட்சியர் வாழ்த்துகள் தெரிவித்தார்.

தொடர்ந்து வனத்துறை சார்பில் நடந்த மாநில அளவிலான ஓவியப் போட்டியில் 3-ம் இடம் பிடித்த கீழச்சிவல்பட்டியைச் சேர்ந்த சத்தியபிரியாவிற்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.



source https://www.vikatan.com/news/tamilnadu/sivaganga-collector-appreciated-the-vettangudi-people-for-their-support-for-birds

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக