Ad

சனி, 7 நவம்பர், 2020

`அது பிர்சா முண்டே சிலையே அல்ல...!’ - அமித் ஷாவின் மேற்குவங்கப் பயணத்தில் `திடீர்’ சர்ச்சை

மத்திய அமைச்சர் அமித்ஷா, இரண்டு நாள் பயணமாக மேற்குவங்க மாநிலம் சென்றிருக்கிறார். பாங்குரா மாவட்டத்தில் நேற்று அவர் பயணம் மேற்கொண்டார். அப்போது, பழங்குடியினப் போராளி பிர்சா முண்டா சிலைக்கு மரியாதை செலுத்திய விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியிருக்கின்றன.

மேற்கு வங்க மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தலில் காங்கிரஸும் இடதுசாரி கட்சிகளும் கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. கடந்த ஓராண்டுக்கு மேலாக இரண்டு கட்சிகளும் இணைந்து மாநிலத்தை ஆளும் மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் அரசை எதிர்த்தும், மத்திய பா.ஜ.க அரசை எதிர்த்தும் போராட்டங்கள் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், அமித்ஷாவின் மேற்கு வங்க இரண்டு நாள் பயணம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதற்கு முன்னதாக, தனது மேற்கு வங்க பயணம் குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த அமித்ஷா, ``2 நாள் பயணமாக மேற்கு வங்கத்துக்கு வர இருக்கிறேன். பா.ஜ.க. மேற்குவங்க பிரிவைச் சேர்ந்த தொண்டர்கள், மேற்குவங்க மக்கள், ஊடக நண்பர்கள் மற்றும் பல்வேறு சமூகங்களின் பிரதிநிதிகளுடன் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ள நான் காத்திருக்கிறேன்’’ என தெரிவித்திருந்தார்.

அமித் ஷா

2 நாள் சுற்றுப்பயணமாக, நேற்று முன்தினம் விமானம் மூலம் டெல்லியில் இருந்து புறப்பட்ட அமித்ஷா, கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். அங்கு அவருக்கு மாநில அரசு மற்றும் காவல்துறை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

சுற்றுப்பயணத்தின் முதல் நாளன்று, பழங்குடியினரின் வாக்குகளைத் திரட்டுவதற்காக பாங்குரா மாவட்டத்திற்கு சென்றார் அமித்ஷா. பாங்குரா மாவட்டம் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் ஜங்கல்மஹாலின் ஒரு பகுதியாகும்.

அங்கு சென்ற அமித் ஷா, 25 வயதில் உயிர்த் தியாகம் செய்த சுதந்திரப் போராட்ட வீரரும் புகழ்பெற்ற பழங்குடியினத் தலைவருமான பிர்சா முண்டா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தத் திட்டமிடப்பட்டிருந்தது.

Also Read: `இந்திய கலாசாரத்தில் இருந்து அகற்றவே முடியாதது இந்தி மொழி!’ - உள்துறை அமைச்சர் அமித் ஷா

அதற்கான ஏற்பாடுகள் தயாரான நிலையில், பா.ஜ.க சார்பில் தேர்வு செய்யப்பட்ட அந்த சிலை பிர்சா முண்டாவின் சிலை இல்லை என்பது கடைசி நேரத்தில் தெரியவந்தது. அது பழங்குடியின வேட்டைக்காரரைக் குறிக்கும் பொதுவான சிலை என்பதும் தெரியவந்திருக்கிறது.

பிர்சா முண்டாவின் சிலை அல்ல என்பதை உணர்ந்த பா.ஜ.க-வினர் அவசர அவசரமாக பிர்சா முண்டா உருவப் படத்தை அந்த சிலைக்குக் கீழ் வைத்தனர். அதையடுத்து, அமித்ஷா சிலைக்கு மலர் தூவி, உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமித் ஷா, ``மேற்கு வங்கத்தில் மம்தா அரசுக்கு எதிராக மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அதிருப்தியை என்னால் உணர முடிகிறது. அவரது ஆட்சியின் முடிவு காலம் தொடங்கிவிட்டது. மேற்கு வங்கத்தில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இம்மாநிலத்தில் நாங்கள் மாற்றத்தைக் கொண்டு வருவது உறுதி” என்றார்.

அமித் ஷா

அதைத்தொடர்ந்து, அமித்ஷா தன் ட்விட்டர் பக்கத்தில்,``மேற்கு வங்கத்தின் பாங்குராவில் புகழ்பெற்ற பழங்குடியினத் தலைவர் பகவான் பிர்சா முண்டாவுக்கு இன்று மலரஞ்சலி செலுத்தப்பட்டது. பிர்சா முண்டாவின் வாழ்க்கை, நமது பழங்குடி சகோதர, சகோதரிகளின் உரிமைகள் மற்றும் மேம்பாட்டுக்காகவே அர்ப்பணிக்கப்பட்டது. அவரது தைரியம், போராட்டங்கள் மற்றும் தியாகம் ஆகியவை தொடர்ந்து ஊக்கமளிக்கின்றன" என்று பதிவிட்டார்.

இதற்கிடையில், ​​பழங்குடியின அமைப்பான, "பாரத் ஜகத் மஜ்ஹி பர்கானா மஹால் (Bharat Jakat Majhi Pargana Mahal), பா.ஜ.க-வினர் பிர்சா முண்டாவை அவமதித்துவிட்டதாகக் குற்றம்சாட்டியிருக்கிறார்கள்.

இந்த விவகாரத்தில் அமித் ஷா, பா.ஜ.க-வை மேற்குவங்கத்தை ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியும் விமர்சித்திருக்கிறது. ``மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மேற்குவங்க மாநிலத்தின் கலாசாரத்தை அறியாதவர். பிர்சா முண்டா என நினைத்து தவறான சிலைக்கு மாலை அணிவித்ததன் மூலம் அவரை அமித் ஷா அவமானப்படுத்தியுள்ளார். பிர்சா முண்டாவின் புகைப்படத்தை வேறு ஒருவரின் காலடியில் வைத்துள்ளார். அவர் எப்போதாவது மேற்குவங்க மக்களின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்திருக்கிறாரா? ” என்று திரிணாமுல் காங்கிரஸ் விமர்சித்துள்ளது.

இதுகுறித்து கருத்துத் தெரிவித்த திரிணாமுல் எம்.பி. நுஸ்ரத் ஜஹான், ``வித்யாசாகர் முதல் பிர்சா முண்டா வரை, வங்காளத்தின் புகழ்பெற்ற சின்னங்களை அமித் ஷா அப்பட்டமாக அவமதிப்பது ஏன்? உங்கள் அரசியல் பிரசாரத்துக்காக வங்காளத்தின் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் இன்னும் எத்தனை முறை தவறாகப் பயன்படுத்துவீர்கள்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



source https://www.vikatan.com/news/politics/amit-shah-and-birsa-munda-statue-controversy

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக