Ad

சனி, 7 நவம்பர், 2020

`தொகுதி மாறும் தினகரன் முதல் ஜெர்க் ஆன டி.ஆர்.பாலு வரை...!’ - கழுகார் அப்டேட்ஸ்

தொகுதி மாறத் திட்டமிட்டிருக்கிறாராம் டி.டி.வி.தினகரன். ஆம், 2021 சட்டமன்ற தேர்தலில், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பேராவூரணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவதற்கு இப்போதே காய்நகர்த்துகிறார் தினகரன். முத்தரையர், முக்குலத்தோர் வாக்குகளை கணிசமாகக்கொண்ட தொகுதி பேராவூரணி. 2011 சட்டமன்றத் தேர்தலின்போது, அ.தி.மு.க கூட்டணியில் இங்கு போட்டியிட்ட தே.மு.தி.க வேட்பாளர் நடிகர் அருண்பாண்டியன் வெற்றி பெற்றார்.

டி.டி.வி தினகரன்

சசிகலா உறவுகள் தொகுதிக்குள் அதிகம் இருப்பதாலும், சமூகரீதியாக தனக்குப் பிடிப்பு இருப்பதாலும், பேராவூரணி தனக்குச் சாதகமாக இருக்குமென்று தினகரன் கருதுகிறாராம். தீபாவளி முடிந்ததும் பேராவூரணியில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடத்தவும் அ.ம.மு.க-வில் ஏற்பாடுகள் நடக்கின்றன.

அதெல்லாம் இருக்கட்டும் சார்... பழைய பேலன்ஸ் 20 ருப்பீஸ் டோக்கனுக்கு காசு எப்ப கொடுப்பீங்க!?

`தி.மு.க-வுக்குத் தேர்தல் வியூகத்தை வகுத்துக்கொடுக்கும் `ஐபேக் நிறுவனத்தின் அலம்பல் தாங்க முடியவில்லை’ என்று புலம்புகிறார்கள் உடன்பிறப்புகள். ஏற்கெனவே மாவட்டப் பிரிப்பு, மாவட்டச் செயலாளர் நியமனம், வேட்பாளர் தேர்வு என எல்லா விஷயங்களிலும் ஆதிக்கம் செலுத்திவந்த ஐபேக் தரப்பு, தற்போது செய்தி சேனல் விவாதங்களில் கட்சி நிர்வாகிகள் பங்கேற்கவும் தங்களிடம் அனுமதி வாங்க வேண்டும் என்று செக் வைத்திருக்கிறதாம்.

அண்ணா அறிவாலயம்

இதனால், `நிலையக் கலைஞர்கள்’ பலரும் கடுப்பேறிக் கிடக்கிறார்கள். அதேபோல, சேனல்களின் தரப்பிலிருந்தும் நேரடியாகக் கட்சியினரை விவாத நிகழ்ச்சிகளுக்கு அழைக்க முடியாதாம். ஐபேக் சார்பில் நியமிக்கப்பட்டிருக்கும் நிர்வாகியின் வழியாகவே சேனல்கள் பேசி, நிகழ்ச்சிக்கான நபர்களை புக் செய்ய வேண்டுமாம்.

அப்படியே பேச வேண்டிய ஸ்கிரிப்டையும் நீங்களே எழுதிக் கொடுத்திடுவீங்களா ஜி!

டி.ஆர்.பாலு ஒருங்கிணைப்பிலான தி.மு.க தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு, நவம்பர் 5-ம் தேதி நாமக்கல்லில் கூட்டம் நடத்தியது. பல்வேறு சங்கங்களின் தலைவர்கள் இந்தக் குழுவைச் சந்தித்து தங்கள் கோரிக்கைகளை அளித்தனர். அப்போது ஒருவர், ``தென் மாவட்டங்களில் பனை மரங்கள் அதிகமாக இருப்பதுபோல, மேற்கு மாவட்டங்களில் தென்னை மரங்கள் அதிகமாக இருக்கின்றன. தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் மதுக்கடைகளை மூடிவிட்டு கள்ளுக்கடைகளைத் திறக்க வேண்டும்’’ என்றாராம். இதைக் கேட்டதும் ஷாக் அடித்ததுபோல டி.ஆர்.பாலுவுக்குத் தூக்கிவாரிப் போட்டுவிட்டதாம்.

டி.ஆர்.பாலு

தனது தரப்பிலும், பல்வேறு தி.மு.க பிரமுகர்கள் தரப்பிலும் நடந்துவரும் மதுபான ஆலைகளுக்கு வேட்டுவைக்கும் வகையில் வந்த கோரிக்கைக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் திகைத்துப்போனவர்... ஒருவழியாக, `ஆகட்டும் பார்க்கலாம்’ என்று சொல்லிச் சமாளித்தாராம்.

அடிமடியிலேயே கையைவெச்சா அண்ணன் என்னதான் பண்ணுவாரு!

Also Read: முருகனுக்கு ஹெச்.ராஜா ஸ்கெட்ச்... சீட் மறுக்கப்படும் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள்! - கழுகார் அப்டேட்ஸ்

வட மாவட்டம் ஒன்றில் கனிமவளத்துறையில் கடவுளின் பெயர் கொண்ட ஒருவர் உயரதிகாரியாக இருக்கிறார். மேலிடத்துடன் இருக்கும் நெருக்கத்தால், பக்கத்திலிருக்கும் இரண்டு மாவட்டப் பொறுப்புகளையும் அந்த அதிகாரி கூடுதலாக கவனித்துவருகிறாராம். கடந்த சில நாள்களாக தீபாவளி வசூல் வேட்டை தூள் பறக்கிறது. குறிப்பாக, `ரெண்டாயிரம் ரூபா நோட்டு வேணாம்... ஐந்நூறு ரூபா நோட்டு இல்லை, தங்கக் காசா கொடுத்துடுங்க’ என்று இவர் போடும் கண்டிஷனைப் பார்த்து விழிபிதுங்குகிறார்களாம் துறை சம்பந்தப்பட்ட பிரமுகர்கள்.

தங்கக் காசு

இரண்டாயிரம் ரூபாய் நோட்டைத் தடை செய்துவிட்டால், கணக்கில் காட்ட முடியாத கறுப்புப் பணத்தை மாற்ற முடியாது என்பதால் இந்த ஐடியாவாம். அதிலும், `தீபாவளிக்கு முன்னாலேயே கலெக்‌ஷனைக் கொடுத்துடுங்க’ என்று மூன்று மாவட்டங்களிலும் கறார் காட்டி வசூலைக் கறந்துவிட்டாராம். இதுவரைக்கும் ஆறு கோடி ரூபாய் வரை வசூலித்துவிட்டார் என்கிறது கனிமவளத்துறை வட்டாரம்.

விஜிலென்ஸ் ஆபீஸர்ஸ்... கொஞ்சம் விழிச்சிக்கலாமே!

சென்னை மாநகராட்சியின் இருகோணக் காதல் கதை இது. `வளர்ந்துவரும்’ மண்டலத்தின் பெண் பொறியாளர் அவர். அதே பகுதியில் உயர் பொறுப்பிலிருக்கும் பொறியாளர்கள் இருவர், அந்த பெண் பொறியாளர்மீது தீராத மையல்கொண்டிருக்கிறார்கள். இருவருமே தனித்தனியாக தங்கள் காதலை அப்ரோச் செய்ய... அசராத அந்தப் பெண் பொறியாளர், இருவருக்குமே தனித்தனியாக கிரீன் சிக்னல் கொடுத்துவிட்டாராம். அவருக்குத் தெரியாமல் இவரிடமும்... இவருக்குத் தெரியாமல் அவரிடமும் அந்தப் பெண் பொறியாளர் காதல் வளர்த்திருக்கிறார்.

காதல்

இந்த மோகத்தில் ஒருவர் சென்னையில் வீடு ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். இன்னொருவர் கார் ஒன்றை வாங்கிக் கொடுத்திருக்கிறார். ஒருகட்டத்தில் இருவரையுமே மெயின்டெய்ன் செய்யும் விவகாரம் அம்பலமாகிவிடவே... குழாயடிச் சண்டை கணக்காக அலுவலகமே நாறியிருக்கிறது. இந்தப் பஞ்சாயத்து வொயிட் ஹவுஸுக்குச் செல்ல... இரு பொறியாளர்களும் வெவ்வேறு மண்டலங்களுக்குத் தூக்கியடிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனாலும், விடாமல் காதலில் உருகிய ஒரு பொறியாளர் மட்டும் மேலிடத்தில் பேசி அம்மணிக்கு அதே பணியிடத்தில் புரொமோஷனும் வாங்கிக்கொடுத்திருக்கிறாராம்!

எங்கே செல்லும் இந்தப் பாதை...

பா.ஜ.க தலைவர் எல்.முருகனின் செல்போன் அவ்வப்போது நாட் ரீச்சபிளுக்குச் சென்றுவிடுவதால், அவரைத் தொடர்புகொள்வதில் ஏகப்பட்ட சிக்கல் எழுகிறதாம். சில நாள்களுக்கு முன்பாக முருகனின் வேல் யாத்திரை தொடர்பாகச் சில தகவல்களை பகிர்ந்துகொள்வதற்காக சென்னையிலுள்ள மத்திய உளவுத்துறை அதிகாரிகள் முருகனை அழைக்க முயன்றபோதும் `நாட் ரீச்சபிள்’ என்றே வந்ததாம்.

முருகன்

அதேபோல கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் வேல் யாத்திரை தொடர்பாக ஆலோசிக்க முருகனைத் தொடர்புகொள்ள முடியவில்லையாம். முருகனுடன் இருக்கும் மூம்மூர்த்திகளைத் தாண்டி அவரைத் தொடர்புகொள்வது அவ்வளவு சுலபமில்லை என்பதுதான் கட்சியினரின் ஆதங்கமாக இருக்கிறது. அவசரத்துக்கு அவர்களை அழைத்தாலும்,`அப்பாயின்ட்மென்ட் இருக்கா... இப்படியா திடீர்னு போன் பண்றது!’ என்று கடுகடுக்கிறார்களாம்.

செல் இருக்கிற கையிலதான் இப்போ வேல் இருக்குதுப்பா!

கூட்டுறவுத்துறை கட்டுப்பாட்டிலுள்ள ஊட்டி சூப்பர் மார்க்கெட்டின்கீழ் 40-க்கும் அதிகமான ரேஷன் கடைகள் இருக்கின்றன. `ஒரு கடையில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஓர் ஊழியர் தொடர்ந்து பணியாற்றக் கூடாது’ என்பது உத்தரவு. அ.தி.மு.க முக்கிய நிர்வாகியின் உறவினர் ஒருவர், கூட்டுறவுத்துறையில் பொறுப்புவகிக்கிறார்.

ஊட்டி சூப்பர் மார்க்கெட்

ஒரே கடையில் மூன்று ஆண்டுகளைக் கடந்த ஊழியர்கள் ஒவ்வொருவரும் மாதம் 1-ம் தேதி பிறந்தால், குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் டான் என்று மாமூலைக் கட்டிவிட வேண்டுமாம். அப்படியும் 3-ம் தேதி வரை மாமூல் வரவில்லையென்றால், ஊழியரின் வங்கிக் கணக்கில் சம்பளத் தொகை ஏறுவதில்லையாம். தொடர்ந்து அவர்களுக்கு போனைப் போடுபவர், ``என்னப்பா... மெசேஜ் இன்னும் வரலை” என்கிறாராம். பணியிட மாறுதலிலும் பணமழை பொழிகிறதாம்.

கிம்பளம் கொடுத்தாத்தான் சம்பளம் ஏறுதுனு சொல்லுங்க!

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி மீது கடும் அதிருப்தியில் இருக்கின்றனர் அம்மாநிலத்தின் தி.மு.க நிர்வாகிகள். `தி.மு.க-வுக்கு வாரியப் பதவிகள் வழங்கப்படும்’ என்ற நாராயணசாமி, ஒரே ஒரு வாரியம் மட்டும் ஒதுக்கிவிட்டு அமைதியாகிவிட்டார். தி.மு.க கடுப்பானவுடன், அவர்களைக் கூல் செய்வதற்காக, `புதுச்சேரி - கடலூர் 100 அடி சாலைக்கு கலைஞர் கருணாநிதி பெயர் வைக்கப்படும்’ என்று பேரவையில் அறிவித்தார். இந்தநிலையில், புதுச்சேரியின் மூன்று தி.மு.க மாவட்ட நிர்வாகிகளும் சமீபத்தில் ஸ்டாலினைச் சந்தித்து, `நாராயணசாமி நம்மை மதிப்பதில்லை. காங்கிரஸ் கட்சிக்கு மக்களிடையே அதிருப்தி இருக்கிறது.

நாராயணசாமி

தேர்தல் நேரத்தில் அது நம்மையும் பாதிக்கும்’ என்று தூபம் போட்டிருக்கிறார்கள். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட தலைமை, பதிலே சொல்லாமல்... தலையை மட்டும் ஆட்டி ஆட்டி நிர்வாகிகளை திருப்பி அனுப்பியதாம். `தலைவரு என்னதான் சொல்ல வர்றாரு...’ என்று குழப்பத்தில் ஆழ்ந்திருக்கிறார்கள் புதுச்சேரி உடன்பிறப்புகள்.

`இங்க மட்டும் என்ன வாழுதாம்'னு மைண்ட் வாய்ஸுல சொல்லியிருப்பாரோ!

தி.மு.க வர்த்தகர் அணி மாநிலத் துணைத் தலைவர் அய்யாதுரை பாண்டியன், கடையநல்லூர் தொகுதியை எதிர்பார்க்கிறார். ஆனால், தென்காசி வடக்கு மாவட்ட அரசியலில், தன்னை அய்யாதுரை பாண்டியன் `ஓவர்லுக்’ செய்துவிடக் கூடாது என்று மாவட்டப் பொறுப்பாளரான துரை நினைக்கிறாராம். அதனால், கடையநல்லூரை தற்போது கையில்வைத்திருக்கும் கூட்டணிக் கட்சியான முஸ்லிக் லீக்குக்கு மீண்டும் தள்ளிவிட இப்போதே அன்பில் மகேஷ் மூலமாக அச்சாரம் போட்டுவிட்டாராம் துரை. இதனால் அதிருப்தியடைந்த அய்யாதுரை பாண்டியன், `எனக்கு மட்டும் சீட் கிடைக்கலைன்னா, நீங்கல்லாம் எப்படி ஜெயிக்குறீங்கனு பார்க்குறேன்’ என்று சவால்விட்டிருப்பதாகக் கூறுகிறார்கள்.

அய்யாதுரை பாண்டியன்

இந்தக் களேபரத்துக்கு இடையில், தென்காசி மாவட்டத்துக்குள் தி.மு.க-வுக்கு எதிரான மனவோட்டம் ஒரு சமூகத்தினரிடம் தோன்ற ஆரம்பித்திருக்கிறது. அய்யாதுரை பாண்டியன் மூலமாக அந்த மனவோட்டத்தை அறுவடை செய்ய பா.ஜ.க தூதுவிட்டிருக்கிறது. தாமரை வலையில் பாண்டியன் சிக்குவாரா என்பதுதான் தெரியவில்லை.

இனிமேதான் இருக்கு பாண்டியாட்டம்னு சொல்லுங்க!

சென்னை கிழக்கு தி.மு.க மாவட்டச் செயலாளர் சேகர்பாபு, தொடர்ந்து கோயில்களில் விளக்கு பூஜைகளை நடத்திவருகிறார். தனது துறைமுகம் தொகுதிக்குள் இருக்கும் அரங்கநாதர் கோயில், ஏகாம்பரேஸ்வரர் கோயில் ஆகியவற்றில் தலா ஆயிரம் பெண்களைவைத்து விளக்கு பூஜையை நடத்தி சேலை மற்றும் விளக்குகளை இலவசமாக வழங்கியிருக்கிறார்.

சேகர்பாபு

``தி.மு.க மீது இருக்கும் `இந்து விரோதி’ இமேஜை உடைக்கத்தான் இந்தத் திட்டத்தை சேகர்பாபு கையிலெடுத்திருக்கிறார். ஏரியா பெண்களிடம் இந்தத் திட்டம் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. எங்கள்மீது இந்து எதிர்ப்பு சாயத்தை பா.ஜ.க எப்படிப் பூச முயன்றாலும் சரி... இந்தத் தேர்தலில் அது எடுபடாது’’ என்கிறார்கள் கிழக்கு மாவட்ட தி.மு.க நிர்வாகிகள்.

சூரியனுக்கே விளக்கு வெளிச்சமா!

விவசாய நிலங்களில் உயர் மின்கோபுரம் அமைப்பதை எதிர்த்து, கடந்த இரண்டு ஆண்டுகளாக கொங்கு மண்டலத்தில் தொடர்ச்சியான போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தப் போராட்டங்களுக்கு தி.மு.க உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், கொங்கு மண்டல எம்.பி-க்கள் எனப் பலரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள். அ.தி.மு.க., பா.ஜ.க தரப்பிலிருந்து இதுவரை ஒருவர்கூட வாய்ஸ் கொடுக்கவில்லை. இந்தநிலையில், சமீபத்தில் திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளியில் நடந்த விவசாயிகள் காத்திருப்புப் போராட்டத்துக்கு பெருந்துறை எம்.எல்.ஏ-வான தோப்பு வெங்கடாசலம் சென்றிருக்கிறார்.

தோப்பு வெங்கடாசலம்

``பாதிக்கப்பட்ட விவசாயிகளான நீங்க கவலைப்படாம தொடர்ந்து போராடுங்க. உங்க பின்னாடி நான் எப்பவும் இருப்பேன். திருப்பூர் கலெக்டர்கிட்ட பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யறேன்’’ என்றிருக்கிறார். அதேநாளில் கலெக்டரும் விவசாயிகளை அழைத்து சுமுகமாகப் பேச்சுவார்த்தை நடத்தி, போராட்டத்தை முடித்துவைத்திருக்கிறார். ``ஆளுங்கட்சிக்கு எதிராகப் போராடுங்கன்னு சொல்றாரா.... இல்ல, போராட்டத்தைக் கலைக்க இப்படி ஸ்டன்ட் செஞ்சிருக்காரா? தோப்பு கேரக்டரையே புரிஞ்சுக்க முடியலேயே!’’ என்று ஆளும்கட்சியினரே தலையைச் சொறிகின்றனர்.

கட்சித் தலைமைக்கு `நான் தனி மரமில்லை... தோப்பு’னு சொல்ல வர்றாரோ தோப்பு?!



source https://www.vikatan.com/news/politics/ttv-dinakarans-constituency-change-to-tr-balus-jerk-kazhugar-updates

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக