Ad

சனி, 7 நவம்பர், 2020

`வடமாநில பண்ணைகளுக்கு மட்டும் ஏன் இவ்ளோ சலுகை?' கொந்தளிக்கும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள்

தமிழகம் முழுவதிலும் உள்ள சுமார் 25,000 கறிக்கோழி (பிராய்லர்) வளர்ப்பு பண்ணையாளர்கள், தங்களுக்குப் போதிய வருமானம் கிடைப்பதில்லை என்றும் நஷ்டமடைவதாகவும் கூறி, தனியார் கறிக்கோழி விற்பனை நிறுவனங்களுக்கு எதிராகப் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இதனால், தமிழகத்தில் கறிக்கோழிகள் கிடைப்பதில் தட்டுப்பாடும் விலை உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.

``கோழிக்குஞ்சுகள், தீவனம் ஆகியவற்றைக் கறிக்கோழி விற்பனை செய்ற கம்பெனிங்க கொடுக்கும். வேலையாட்கள், தண்ணீர், மின்சாரம், மருந்துச் செலவு எங்களுடையது. கோழிக்குஞ்சுகளை 42 நாள்கள் பாதுகாப்பாகப் பராமரித்து, வளர்த்துக் கம்பெனிக்குக் கொடுத்தா, ஒரு கிலோவுக்கு 4 முதல் 5 ரூபாய் வரை கொடுக்குறாங்க.

கறிக்கோழிகள்

ஆனா, நாங்க 42 நாள்கள் செலவு செஞ்ச தொகையைக் கணக்குப் போட்டா, கிலோவுக்கு 12 முதல் 15 ரூபாய் வரை செலவாகுது. சில வருஷமாகவே, 'கிலோவுக்கு கொடுக்கும் தொகையை உயர்த்தணும்'னு கம்பெனிக்காரங்ககிட்ட கேட்டுகிட்டே இருந்தோம். ஆனா, இன்னிய வரைக்கும் எங்க கோரிக்கையை அவங்க கண்டுக்கவேயில்ல. அதனால, தமிழ்நாடு முழுக்க இருக்க கறிக்கோழி பண்ணையாளர்களை ஒருங்கிணைச்சு, 'இனி தனியார் கம்பெனியில இருந்து கோழிக்குஞ்சுகளை வாங்கி வளர்க்கக் கூடாது'னு ஒருமனதாக முடிவெடுத்திருக்கோம்.

வடமாநிலங்கள்ல, இதே கம்பெனிக்காரங்க, சந்தையில கறிக்கோழி விலை அதிகரிக்குற நேரத்துல, அதிகரிச்ச தொகையில 30 சதவிகிதம் தொகையை விற்பனை ஊக்கத்தொகையா பண்ணையாளர்களுக்கு கொடுக்குறாங்க. அங்க 1,000 முதல் 5,000 கோழிகளை வளர்க்குற பண்ணைகள் மட்டும்தான் இருக்குது. ஆனா, தமிழ்நாட்டுல சாதாரணமாவே 10,000 முதல் 30,000 கோழிகளை வளர்க்குற பண்ணைகள்தான் பெரும்பாலான இடங்கள்ல இருக்குது. ஆனா, எங்களுக்கு எந்தச் சலுகையும் இல்லை.

கோழிப் பண்ணை

வடமாநில பண்ணையாளர்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு சலுகைகள் கொடுக்குறாங்கனு தெரியல. எங்க பண்ணைகள்ல இருந்து எடுக்குற கறிக்கோழிகள்ல கிலோவுக்கு 50 ரூபாய் சம்பந்தப்பட்ட கம்பெனிக்குப் போயிடும். கடைகளுக்குப் போறதுக்கு முன்ன, இடைத்தரகர்கள் ரூ.15 எடுத்துக்குவாங்க. கடைக்காரருக்கு ரூ.50 கிடைக்கும். 42 நாள்கள் பாதுகாத்து வளர்த்த எங்களுக்குக் கிலோவுக்கு ரூ.5 தான் கிடைக்குது. இது என்ன நியாயம்? எங்க போராட்டத்துனால, இன்னும் சில நாள்ல சந்தையில கறிக்கோழி விலை உயரும். ஒரு மாசத்துல கறிக்கோழிகளே கிடைக்காத சூழல் உருவாகும்” என்கிறார் திண்டுக்கல் மாவட்ட கறிக்கோழி பண்ணையாளர்கள் நலச்சங்க மாவட்டச் செயலாளர் ரபீக்.

நிலக்கோட்டை அருகே உள்ள குரும்பபட்டியில் கறிக்கோழி பண்ணை வைத்துள்ள முருகனிடம் பேசினோம். ''தனியார் கம்பெனிககிட்ட நாங்க பலதடவை முறையிட்டும் எந்தப் பலனும் இல்லை. பண்ணை அமைக்க லோன் வாங்கியிருக்கோம். அதுக்கு வட்டி கட்டக்கூட இதுல லாபம் கிடைக்கிறதில்லை. முன்னாடியெல்லாம், நல்ல தரமான கோழிக்குஞ்சுகளைக் கொடுப்பாங்க.

கோழிக்குஞ்சுகள்

இப்ப, சீக்கிரம் நோய்வாய்ப்படக்கூடிய, வளர்ச்சியில்லாத குஞ்சுகளைக் கொடுக்குறாங்க. மக்காசோளமும், சோயா பீன்ஸும் சம அளவு கலந்த தீவனத்துல தான் கோழிக்குஞ்சுகள் நல்லா வளரும். ஆனா, கம்பெனிக எங்களுக்குக் கொடுக்குற தீவனத்தில, மக்காச்சோளம்தான் பெரும்பாலும் கலந்திருக்கும். இதைக் கேட்டா, கடைகள்ல தீவனம் வாங்கிப் போடச் சொல்றாங்க. சில பேரு, கோழிக்குஞ்சுகள் நல்ல எடையோட இருக்க, கடைகள்ல ரொம்ப விலைக் கொடுத்துத் தீவனம் வாங்கிப்போடுறாங்க.

சளித்தொல்லை, வெள்ளைக்கழிச்சல் மாதிரியான நோய்களுக்குக் கம்பெனிகள் கொடுக்குற மருந்துகளைக் கொடுத்தா அது பலன் கொடுக்குறதில்லை. நாங்களே நாட்டு மருந்து தயார் செஞ்சு கொடுக்கிறோம். அதுக்கான செலவு தனி. இப்படி கம்பெனிகளைத் தவிர்த்து. கோழிக்குஞ்சுகள் அதிக எடை வரணும். லாபம் கிடைக்கணும்.

கோழிப்பண்ணை

அதை வெச்சு கடனை அடைக்கணும்'னு ஒவ்வொருத்தரும் முயற்சி எடுத்து நஷ்டமாகி, வங்கிக் கடனைக் கட்ட முடியாம, சொத்துகளை இழக்குற நிலைமைக்குப் போயிடுறாங்க. சிலர் பேரு தற்கொலையே பண்ணிக்கிட்டாங்க. மொத்தத்துல இது ஈமு கோழி மாதிரியான ஏமாத்து வேலைதான். விவசாயிககிட்ட ஆசை வார்த்தை சொல்லி, பண்ணை அமைக்க வெச்சு, கம்பெனிக்காரங்க பணம் சம்பாதிக்கிறாங்க. இந்த விவகாரத்தைத் தமிழக அரசு கையில எடுத்து ஆய்வு செஞ்சு, கறிக்கோழி விற்பனை கம்பெனிகளுக்குக் கடிவாளம் போடணும். எங்களை மாதிரி இனிமே யாரும் ஏமாறாத வகையில நடவடிக்கை எடுக்கணும்'' என்றார் காட்டமாக.

கவனிக்குமா தமிழக அரசு?!



source https://www.vikatan.com/government-and-politics/agriculture/tn-poultry-farmers-on-strike-demand-companies-to-increase-procurement-price

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக