Ad

திங்கள், 16 நவம்பர், 2020

அதிதீவிரமடையும் வடகிழக்குப் பருவமழை: தமிழக அரசின் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறுகையில், ``தமிழகத்திற்கு வடகிழக்கு பருவமழை காலத்தில்தான் அதிகப்படியான மழை கிடைக்கும். குறிப்பாகக் கடலோர மாவட்டங்களில் அதிகப்படியான மழை பெய்யும். இந்த காலகட்டத்தில் தமிழகத்திற்கு மொத்த மழையில் 47.32 சதவிகிதம் மழை கிடைக்கிறது. இந்தாண்டு வடகிழக்கு பருவமழை 28.10.2020 அன்று தொடங்கியது. அன்று முதல் 16.11.2020 வரை இயல்பாகப் பதிவாக வேண்டிய மழையின் அளவு 287.9 மி.மீ. ஆனால், 37 சதவிகிதம் குறைவாக 180.7 மி.மீ அளவுதான் பதிவாகியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் இயல்பான மழை பெய்துள்ளது. மற்ற மாவட்டங்களில் இயல்பை விடக் குறைவான மழைப் பதிவாகியுள்ளது.

கடந்த பதினைந்து ஆண்டுகளின் தரவுகள் மற்றும் நிகழ்வுகளின் அடிப்படையில், தமிழகத்தில் மொத்தம் 4,133 பகுதிகள் பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகள் என்று கண்டறியப்பட்டுள்ளது. அதில், மிக அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகள் - 321 அதிக பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகள் - 797 மிதமான பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகள் - 1,096 குறைவான பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகள் - 1,919

பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளால் உள்ள மக்களைத் தங்கவைக்க ஏதுவாக 121 பல்நோக்கு பாதுகாப்பு மையங்கள் உட்பட 4,713 தங்கும் மையங்கள் தயார் நிலையில் இருக்கிறது. கொரோனா தொற்று காரணமாக சமூக இடைவெளிகளை கடைப்பிடிக்கும் பொருட்டு, பள்ளிகள், திருமண மண்டபங்கள் மற்றும் சமுதாயக் கூடங்கள் என்று 4,680 தங்கும் இடங்கள் தயார் நிலையில் உள்ளது. பாதிப்பிற்கு உள்ளாகும் பகுதிகளைக் கண்டறிந்து மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் தயார் நிலையில் உள்ளது. பேரிடர் பணிகளை மேற்கொள்ள 662 பல்துறை மண்டல குழுக்கள் தயார் நிலையில் உள்ளது. அதோடு, பேரிடர் காலத்தில் உடனடியாக செயலாற்றிட 43,409 முதல் நிலை மீட்பாளர்கள் (First Responders) தயார்நிலையில் உள்ளனர். இவர்களில் 14,232 நபர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுடன் கால்நடைகளைப் பாதுகாக்க 8,871 முதல் நிலை மீட்பாளர்களும் தயாராக உள்ளனர்.

Also Read: `செம்பரம்பாக்கம் ஏரியைத் தற்போது திறந்துவிட வாய்ப்பில்லை!’ - பொதுப்பணித் துறை #LiveUpdates

பேரிடர் காலத்திலும் முறிந்து விழும் மரங்களை வெட்டி அகற்றவும், பேரிடர் அல்லாத காலங்களில் மரங்களை நட்டு வளர்ப்பதற்கும் 9,909 முதல் நிலை மீட்பாளர்களும் தயாராக உள்ளனர். இது இல்லாது, பாம்பு பிடிக்கும் திறன் உள்ளவர்கள் மற்றும் நீரில் மூழ்குபவர்களைக் காப்பாற்ற ஏதுவாக நீச்சல் வீரர்களைக் கண்டறிந்து தயார்நிலையில் உள்ளனர். மீட்புப்பணிக்குத் தேவையான அனைத்து உபகரணங்கள், வாகனங்கள் அந்தந்த மாவட்டங்களில் தயார் நிலையில் உள்ளது. பேரிடர் காலத்தில் மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடனும் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. அவசரக் காலங்களில் பொதுமக்களுக்குத் தேவையான தகவல்களை TNSMART மூலம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது’’ என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

ஆர்.பி.உதயகுமார்
அவசரக்காலங்களில் மக்கள் தகவல் தொடர்புக்காக : மாநில அவசரக்கால கட்டுப்பட்டு மையத்தின் தொடர்பு எண் -1070 மற்றும் மாவட்ட அவசரக்கால கட்டுப்பாட்டு மையத்தின் தொடர்பு எண் - 1077

மேலும், வடகிழக்கு பருவமழை, மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புயலின் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்குறித்து. இடி, மின்னல் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்தும் மேலாண்மைக்கான செயல் திட்டம் - 2020 ஆகியவற்றின் தொகுப்பு மற்றும் அவசரக்கால தொலைபேசி கையேடு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டது.



source https://www.vikatan.com/news/tamilnadu/minister-rb-udhayakumar-speaks-about-ne-monsoon-preparedness

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக