Ad

திங்கள், 16 நவம்பர், 2020

குமரி: விவேகானந்தர் பாறை டு திருவள்ளுவர் சிலை! - இணைப்புப் பாலமா... தொங்கு பாலமா?

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நாகர்கோவிலில் நடந்த ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு வெளியிட்ட அறிவிப்பில், ``கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையிலிருந்து திருவள்ளுவர் சிலையை இணைக்கும் வகையில் சுமார் 35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொங்கு பாலம் ஒன்று விரைவில் அமைக்கப்படும்" என கூறியிருந்தார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் ஒரு பதிவு பரப்பப்பட்டுவருகிறது.

அந்தப் பதிவில், ``திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையில் தொங்கு பாலம் அமைப்பதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்தத் திருவள்ளுவர் சிலையை உருவாக்கிய கணபதி ஸ்தபதி ஏற்கெனவே, இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று மிகவும் வலியுறுத்தி அன்றைய அரசிடம் சொல்லி வந்தார்கள். ஏனெனில், திருவள்ளுவர் சிலையைத் தாங்கிக்கொண்டிருக்கும் பாறை மிகவும் சிறியது. அதில் பல டன் எடை கொண்ட கற்கள் அடுக்கப்பட்டு சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் பாறையில் சிறிய கீறல்கூட ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும்.

கன்னியாகுமரி விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை

அப்படிப் பாலம் அமைக்கும்போது சிறிய துவாரம் அல்லது பாறை உடைப்பது போன்ற செயலில் ஈடுபடும்போது பாறையில் விரிசல் ஏற்படும். இதனால் அந்தச் சிலையும் வலுவிழந்துவிடும். இந்தக் காரணத்தால் தொங்கு பாலம் திட்டத்தைச் செயல்படுத்தக் கூடாது என்று கூறியிருக்கிறார். அப்போதிருந்த அரசு அதைக் கைவிட்டது. ஆகவே, நம் ஸ்தபதியால் உருவாக்கப்பட்ட இந்தச் சிலை காலம் உள்ளவரை இருக்க வேண்டும் என்னும் நல்லெண்ணத்தோடும் மற்றும் சிலையைப் பாதுகாத்தல் போன்ற விஷயங்களை தமிழக அரசுக்கு அறிவுறுத்தியும் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும். சிலையைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்’’ என அந்தப் பதிவில் கூறப்பட்டிருந்தது.

கணபதி ஸ்தபதி கூறிய தகவல் உண்மைதானா என்பது பற்றி கணபதி ஸ்தபதியின் டிரஸ்ட்டைச் சேர்ந்த தக்‌ஷிணா மூர்த்தியிடம் பேசினோம். அனைத்துத் தகவல்களையும் பொறுமையாகக் கேட்டவர், ``தமிழக முதல்வர் பாலம் அமைப்பது குறித்து அறிவித்ததைத் தெரிந்துகொண்டோம். ஆனால் வாட்ஸ்அப்பில் பரவும் விஷயம் பற்றி நோ கமென்ட்ஸ்" எனக் கூறிவிட்டார். இதையடுத்து நாகர்கோவில் தி.மு.க எம்.எல்.ஏ-வும், முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சருமான சுரேஷ்ராஜனிடம் பேசினோம்.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி

சுரேஷ்ராஜன் கூறுகையில், ``விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே அமையவிருப்பது தொங்கு பாலம் இல்லை, இணைப்புப் பாலம். எனவே, சிலையைத் தொடவே மாட்டாங்க. அதுல கட்டுமானம் எதுவும் வராது. ரெண்டு பாறைக்கும் இடையில கொஞ்சம்போல தண்ணி போகுது. அதுல பாறைகளைப் போட்டு, கான்கிரீட் மூலமா ஜாயின்பண்ணிவிடுவாங்க. திருவள்ளுவர் பாறையையோ, சிலையையோ எந்த டிஸ்டர்பும் பண்ணாம இருக்கிறது வரை பிரச்னை இல்லை. அவங்க அந்த மாதிரி பண்ணுறது மாதிரியும் தெரியலை.

ஒருவேளை அப்பிடி எதாவது பண்ணுனாங்கன்னா நாங்க விட மாட்டோம். போராட்டம் அறிவிச்சுருவோம். வரலாற்றுச் சிறப்புமிக்க, ஓர் அடையாளம் திருவள்ளுவர் சிலை. அதிலும் தலைவர் கருணாநிதியின் கனவு. உலகம் முழுவதும் அய்யன் திருவள்ளுவர் புகழைப் பரப்பும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்திருக்கிறார். திருவள்ளுவருக்கு ஒரு தீமை வருதுன்னா, அதை எதிர்க்காம நாங்கல்லாம் தி.மு.க-காரங்களா இருக்குறதுல அர்த்தமே இல்லை. சமீபத்தில்கூட திருவள்ளுவர் சிலையில லைட் போடலைன்னு கலெக்டரைப் பார்த்துப் பேசினேன். உடனே லைட் போட்டுட்டாங்க" என்றவரிடம், `திருவள்ளூவர் பாறையில் வேறு சிறு பணிகூட செய்யக் கூடாது என முன்னாள் முதல்வர் கருணாநிதியிடம் கணபதி ஸ்தபதி கூறியது உண்மைதானா' எனக் கேட்டோம். அதற்கு``கணபதி ஸ்தபதி சிலை அமைக்கும்போது வேற எதுவும் சொன்னதாகத் தெரியலை" என்றார் சுரேஷ்ராஜன்.

தி.மு.க. எம்.எல்.ஏ. சுரேஷ்ராஜன்

`விவேகானந்தர் பாறைக்கும் திருவள்ளுவர் சிலைக்கும் இடையே இணைப்புப் பாலம் அமைந்தால் பிரச்னை இல்லை. தமிழக முதல்வர் அறிவித்தது போன்று தொங்கு பாலம் அமைத்தால் குமரி போராட்ட களம் ஆகும்’ என தி.மு.க தரப்பில் கூறுகிறார்கள். அமையப்போவது என்ன பாலம் என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.



source https://www.vikatan.com/news/tamilnadu/artcle-about-bridge-controversy-in-kanyakumari-tourism-spot

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக