Ad

புதன், 11 நவம்பர், 2020

அமெரிக்கா: `விரைவில் ட்ரம்ப் ஆட்சியின் இரண்டாம் அத்தியாயம்..!’ - மைக் பாம்பியோ சொல்வதென்ன?

``உலகில் சக்திவாய்ந்த பதவியான அமெரிக்க அதிபர் நாற்காலியில் இரண்டாவது முறையாக டொனால்டு ட்ரம்ப் ஆட்சியே மீண்டும் தொடரும். அதற்கான வழிமுறைகள் சுமுகமான முறையில் எடுக்கப்படும்" என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோ கருத்து தெரிவித்திருக்கிறார்.

கடந்த நவம்பர் 3-ம் தேதி நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலின் முடிவுகளை அறிவிப்பதில் இழுபறி நீடித்துவந்த நிலையில், பின்னர் ஜனநாயகக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன் பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றதாக அந்நாட்டுச் செய்தி ஊடகங்கள் தெரிவித்தன.

அமெரிக்காவில் ஒரு சில மாகாணங்களில் தேர்தல் பணி இன்னும் முழுமையாக முடிவடையாத நிலையில் வெற்றி, தோல்வி குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

மைக் பாம்பியோ

இதனால் ஜோ பைடன் வெற்றி பெற்றதாகக் கூறப்படுவதை எதிர்த்து ட்ரம்ப் தரப்பினர் பல்வேறு கருத்துகளைத் தெரிவித்துவருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மைக் பாம்பியோவிடம் பத்திரிகையாளர் ஒருவர் அமெரிக்காவில் நிகழும் ஆட்சிமாற்றம் குறித்தும், வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட இழுபறி, அத்துமீறல்கள் குறித்தும் கேள்வி எழுப்பினாா். அதற்கு பதிலலளித்த மைக் பாம்பியோ, ``அமெரிக்காவில் இரண்டாவது முறையாக ட்ரம்ப் ஆட்சியே தொடரும். அதற்கான வழிமுறைகள் சுமுகமான முறையில் எடுக்கப்படும்" என்று கூறினார்.

Also Read: சூழ்ந்திருக்கும் சவால்கள்... இந்தியாவுக்கு புதிய வாசல்களைத் திறப்பாரா ஜோ பைடன்?

ஒரு சில நொடிகள் நிசப்தத்துக்குப் பிறகு தொடர்ந்து பதிலளித்த மைக் பாம்பியோ. ``தேர்தல் பணி முழுமையாக முடிவடையும் நேரத்தில், மொத்த வாக்குகளும் சேகரிக்கப்பட்ட பின்னர் அமெரிக்காவின் சட்டதிட்ட நெறிமுறைகளின்படி யார் அதிபர் என்பது மக்களுக்குத் தெரியவரும். தற்போது செயல்பட்டுவரும் வெற்றிகரமான அரசாங்கத்தை மேலும் நல்வழிக்குக் கொண்டு செல்ல அவரால் மட்டுமே முடியும்.

மேலும், இந்த அமெரிக்க அதிபர் தேர்தலின் ஒவ்வோர் அசைவையும் உலக நாடுகள் அனைத்தும் உன்னிப்பாக கண்காணித்துவருகின்றன. அதனால், முறையாக வாக்களிக்கப்பட்ட ஒவ்வொரு வாக்கும்ம் சரியான முறையில் கையாளப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். தேர்தலில் நிகழ்த்தப்படும் எந்தவோர் அத்துமீறலையும் ஏற்றக்கொள்ள முடியாது" என்று தெரிவித்தார்.

டொனால்டு ட்ரம்ப்

ட்ரம்ப் தரப்பினரால் தொடர்ந்து கூறப்பட்டுவரும் இது போன்ற எதிர் கருத்துகளுக்கு பதிலளிக்கும்விதமாக நேற்று வெலிங்டன் மாகாணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன், ``ட்ரம்ப் தனது தோல்வியை ஏற்றுக்கொள்ள மறுத்து தொடர்ந்து பிடிவாதம் பிடித்துவருவது தர்மசங்கடமான நிலையை ஏற்படுத்துவதோடு, இது அதிபர் பதவியின் பாரம்பர்யத்தைக் கெடுப்பதாகவும் இருக்கிறது.

ட்ரம்ப், மைக் பாம்பியோவால் கூறப்பட்டுவரும் கருதுகளுக்கு இதுவரை எந்தவோர் ஆதாரமும் கிடைக்கப்பெறவில்லை. விரைவில் அவர்கள் தங்கள் தோல்வியை ஒப்புக்கொள்வாா்கள்" என்று கூறினார்.



source https://www.vikatan.com/government-and-politics/international/mike-pompeo-press-meet-regarding-us-presidential-election

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக