நகர மக்கள் மட்டுமன்றி கிராமப்புற அடித்தட்டு மக்களின் வாழ்க்கை முறைகள்கூட பல நவீன தொழில்நுட்பங்களை நோக்கி பயணித்து வருகிறது. ஆனால், பல மருத்துவ அறிவியல் ஆராய்ச்சிகள்கூட கொரோனா நோய் தொற்றைக் கட்டுப்படுத்த போராடிவரும் நிலையில், மக்களின் உயிரைப் பாதுகாக்க இயற்கை முறையில் உற்பத்தியான உணவு மற்றும் மூலிகைகளை உட்கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை (Immune power) அதிகரித்துக் கொள்ளுமாறு மருத்துவர்களால் அறிவுறுத்தப்படுகிறார்கள். கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கும் கபசுர குடிநீர், நிலவேம்பு கஷாயம், பப்பாளி இலைச்சாறு மற்றும் பழங்கள் போன்ற உணவுகளே பரிந்துரைக்கப்படுகின்றன.
இவ்வாறு இயற்கை உணவுகளின் முக்கியத்துவத்தை நாம் உணரும் தருணத்தில், சமீபத்தில் (செப்டம்பர் 8 அன்று) டெல்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழலுக்கான ஆராய்ச்சி நிறுவனம் வெளியிட்ட `ஸ்டேட் ஆஃப் ஆர்கானிக் அண்ட் நேச்சுரல் பார்மிங்’ (State of Organic and Natural Farming) என்ற புத்தகம் இயற்கை விவசாயத்தில் இந்தியாவின் நிலையும், தற்போது முன்னெடுக்க வேண்டிய திட்டங்களின் அவசியத்தையும் எடுத்துரைக்கிறது.
பசுமைப் புரட்சி
ஆண்டாண்டுகாலமாக நம் நாட்டில் விளைந்த அனைத்து விவசாய பொருள்களும் இயற்கையான இடுபொருள்களைக் கொண்டு உற்பத்தி செய்யப்பட்டுவந்தது. ஆனால், 1960-களில் மக்கள்தொகைப் பெருக்கம் மற்றும் குறைவான விவசாய உற்பத்தித்திறன் காரணங்களால் நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. விவசாயத்தையே தன் முதுகெலும்பு என்று கருதும் ஒரு நாடு மக்களின் பசியைப் போக்க உணவு தானியங்களை இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது. இதை மாற்ற 1964-ம் ஆண்டு, முதல் பசுமைப் புரட்சி மற்றும் தொழில்நுட்பங்கள் வாயிலாக அதிக மகசூல் தரும் வீரிய மற்றும் ஒட்டு விதைகளை (High Yield Varieties) இறக்குமதி செய்து, ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகளைக் கொண்டு உற்பத்தியைப் பெருக்க முயன்றது.
குறுகிய காலத்தில் அதிக மகசூலுடன் சேர்ந்து விவசாயிகளின் வருமானமும் பெருகியதால் இந்தியாவின் அனைத்து உணவுப் பயிர்களும் வேதிப்பொருள்களை இடுபொருளாகக் கொண்ட நவீன விவசாயத்துக்கு மாறியது. குறிப்பாக, ஒரு ஏக்கருக்கு 915 கிலோ வரை விளைந்த நெல் உற்பத்தி 1,612 கிலோ வரையிலும் (76 சதவிகிதம் அதிகம்), 757 கிலோ விளைந்த கோதுமை அதிகபட்சமாக 2,100 கிலோ வரையிலும் (177 சதவிகிதம் அதிகம்) உற்பத்தித்திறன் பெருகியது, இதர பயிர்களின் உற்பத்தி திறனும் கணிசமான அளவு அதிகரித்தது. இதன்மூலம் உணவு உற்பத்தியில் இந்தியா தன்னிறைவு பெற்றதுடன் உபரியை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருமானம் ஈட்டும் அளவுக்கு வளர்ந்தது.
பாதக விளைவுகள்
காலப்போக்கில் முறையான ஆராய்ச்சியின்றி பின்விளைவை ஏற்படுத்தும் வேதி உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை அளவுக்கு அதிகமாக முறையற்ற வகையில் பயன்படுத்தியதால் உணவுப் பொருள்களில் நச்சுத்தன்மை அதிகரித்து உடல் நலத்துக்கு தீங்கு விளைவிக்கிறது. மேலும், இப்பூவுலகில் பல்லுயிர்பெருக்கிகளும் மெல்ல மெல்ல விஷமாக அழிந்துவருகின்றன.
ரசாயன உரப்பயன்பாட்டால் நிலத்தில் உள்ள பயன்தரும் மண் புழுக்கள் மறைந்து இயற்கைத் தன்மைக்கு மாறான மாற்றங்கள் ஏற்பட்டு உற்பத்தித் திறன் வெகுவாகக் குறையத் தொடங்கிவிட்டது. பல்வேறு ஆராய்ச்சிகளும் நவீன விவசாய முறையால் மண்ணின் தன்மை குறைந்து மலடாகி வருவதாக எச்சரிக்கின்றன. மகரந்தச் சேர்க்கைக்குப் பெரிதும் பயன்படும் தேனீ போன்ற உயிரினங்களும் வேகமாக அழிந்துவருகின்றன. இதுதொடர்பாக உணவுப்பொருள்கள் உற்பத்தியில் வேதி பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தினால் எதிர்காலத்தில் எவ்வாறான எதிர்மறைச் சுற்றுசூழல்பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பது பற்றி விஞ்ஞானி ரச்சேல் கார்சன் 1962-ல் வெளியிட்ட மௌன வசந்தம் (Silent spring) என்ற புத்தகத்தின் எச்சரிக்கை ஓசைகளாகவே தற்போதைய சூழ்நிலை இருக்கிறது. நவீன விவசாய முறை உணவுத் தட்டுப்பாட்டை போக்கினாலும், சுற்றுச்சூழல் மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பது உறுதியாகியுள்ளது.
ஏற்றம் பெரும் இயற்கை விவசாயம்
இச்சூழலில் சுற்றுச்சூழல் பாதிப்பு, உடல் நலம் மற்றும் வேதிப்பொருள்களின் தாக்கத்தை உணர்ந்து வேதிவினைகளற்ற கனிம உரங்களைக் கொண்டு இயற்கை முறையிலான வேளாண் உணவு உற்பத்திக்கு உலகளவில் வரவேற்பு அதிகரித்து வருகிறது. சாமை, குதிரைவாலி, தினை, வரகு, ராகி போன்ற சிறுதானியப் பயிர்கள் மற்றும் இதன் மதிப்புக்கூட்டப்பட்ட உணவு பொருள்களுக்கு உள்நாடு மட்டுமன்றி சர்வதேச அளவில் வரவேற்பு அதிகரித்துள்ளது. மேலும் எதிர்காலத்தில் இயற்கை உணவுப் பொருள்களுக்குத் தேவை பன்மடங்கு அதிகரிக்கும் என ஐ.எஃப்.ஓ.ஏ.எம் (IFOAM) கணித்துள்ளது.
இந்தியா போன்ற வேகமாக முன்னேறிவரும் நாடுகளில் இளம் விவசாயிகள் அதிக அளவில் ஆர்வம் காட்டுவதால். மீண்டும் கனிம முறையிலான இயற்கை விவசாயத்துக்கு மாற வேண்டும் எனத் தமிழகம் மட்டுமன்றி மைய அரசு மற்றும் விவசாயம் சார்ந்த வேளாண் நிறுவனங்கள் ஒன்றிணைந்து விவசாயிகளை இயற்கை வேளாண்மையில் உணவுப் பொருள்களை உற்பத்தி செய்ய பல முயற்சிகளையும் திட்டங்களையும் கொண்டு ஊக்குவித்து வருகின்றன. இந்தியாவில் முதன்முதலாக சிக்கிம் மாநிலம் முழுவதுமாக இயற்கை விவசாயத்துக்கு மாறியுள்ளது. கர்நாடகா, சத்தீஸ்கர், ஒடிசா போன்ற மாநிலங்கள் பல்வேறு திட்டங்களால் விவசாயிகளை ஊக்குவிக்கின்றன.
மேலும் விவசாயத்துக்கும் கால்நடை வளர்ப்புக்கும் இருந்த நேரடி தொடர்பு நவீன விவசாய முறையால் முற்றிலும் அறுந்துபோனது. தற்போது மீண்டும் இயற்கை விவசாயம் தலைதூக்குமானால் கால்நடைகளின் தொழுவுரத்துக்கு அதிகப்படியான தேவை ஏற்படும். இதனால் கால்நடை வளர்ப்பிலும் லாபம் பெறலாம் எனக் கணிக்கப்படுகிறது.
சவால்கள்
கடந்த மார்ச் மாதம் வெளியான இந்திய தேசிய விவசாய அறிக்கையின்படி இந்தியாவில் 346.7 மில்லியன் ஏக்கரில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் 68 லட்சம் ஏக்கரில் (2 சதவிகிதத்துக்கும் குறைவான) மட்டுமே இயற்கை விவசாயம் செய்யப்படுகிறது. ரசாயன உரங்களைப் பயன்படுத்தப்பட்ட நிலத்தில் மண்ணின் தன்மை மாறிவிட்டதால், அங்கக விவசாயத்துக்கு மாற குறைந்தது 3 முதல் 7 ஆண்டுகள் நிலத்தைச் சீர்செய்து பதப்படுத்துதல் அவசியமாகும். ஆகவே, இதன் தொடக்கமாக முதலில் விவசாயிகளுக்கு முறையான நிர்ணயிக்கப்பட்ட அளவில் ரசாயன உரங்களைப் பயன்படுத்த ஒரு வரைமுறை கட்டமைப்பது அவசியமாகும்.
நடைமுறையில் உள்ள இயற்கை விவசாயிகள் தங்களின் உற்பத்திப் பொருள்கள் கனிம உரங்களைக் கொண்டு இயற்கையான முறையில்தான் உற்பத்தி செய்யப்பட்டது என்பதற்கு தரநிர்ணய சான்றிதழ் பெறுதல் அவசியமாகும். இவ்வாறான சான்றிதழ் பெற்ற விவசாயிகளின் உணவு பொருள்களுக்கு மக்களிடம் வரவேற்பு அதிகரித்து வருகிறது. இருப்பினும் பாமர விவசாயிகள் மத்தியில் பயிர்கள், காய்கறிகள், மூலிகைகள், பழங்கள் மற்றும் வாசனைத் திரவிய பயிர்களை இயற்கை முறையில் உற்பத்தி செய்வது, சந்தைப்படுத்துவது, மற்றும் அரசு மானிய உதவிகள் தொடர்பாகத் தெளிவு குறைவாக உள்ளது. கிராம அளவிலான தொடர் பயிற்சிகள் ஏற்படுத்தலாம். ஒருங்கிணைந்த விவசாய குழுக்களான உழவர்-உற்பத்தியாளர் நிறுவனங்கள் மற்றும் கூட்டுப்பண்ணைகள் மூலம் குறைவான செலவில் இடுபொருள்களைத் தயாரித்து உற்பத்தியை எளிதில் சந்தைப்படுத்த முடியும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
நவீன காலத்தில் மனிதர்களுக்கு ஏற்படும் பல்வேறு நோய்களுக்கு மருந்தாக ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை உண்பது மிகவும் அவசியமானதாகும். ஜப்பான் நாட்டைச் சேர்ந்த மசனோபு புகோகோ என்பவர் `ஒற்றை வைக்கோல் புரட்சி’ எனும் புத்தகத்தில் நஞ்சில்லா இயற்கை வேளாண்மையின் பயன்பாட்டைத் தெளிவாக விளக்கியுள்ளார். அதேசமயம் இயற்கை முறைக்கு மாறுவதனால் கிடைக்கும் விளைச்சலைக் கொண்டு எதிர்காலத்தில் மக்களின் உணவுத் தட்டுப்பாட்டை முழுவதுமாக ஈடுகட்ட முடியுமா என்பதைக் கணிப்பதும் அவசியமாகிறது.
- மா.சபரிசக்தி & ச.இராசேந்திரன்
ஆராய்ச்சியாளர் மற்றும் பேராசிரியர், பொருளியல் துறை,
காந்திகிராம கிராமிய பல்கலைக்கழகம், காந்திகிராம், திண்டுக்கல் மாவட்டம்.
source https://www.vikatan.com/news/agriculture/why-indian-govt-have-to-promote-organic-farming-now
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக