Ad

ஞாயிறு, 3 செப்டம்பர், 2023

Doctor Vikatan: நீரிழிவு, BP, கொலஸ்ட்ரால் பிரச்னை; ஆங்கில மருந்துடன் சித்த மருந்துகளும் எடுக்கலாமா?

Doctor Vikatan: என் மாமனாருக்கு 75 வயதாகிறது. அவருக்கு ரத்த அழுத்தம், ஆஸ்துமா, சர்க்கரைநோய் என பல பிரச்னைகள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் அலோபதி மருந்துகள் எடுத்துவருகிறார். ஆனாலும் அவ்வப்போது அலோபதி மருந்துகளை நிறுத்திவிட்டு, சித்த மருந்துகள், ஆயுர்வேத மருந்துகளையும் எடுப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். இப்படி ஒரு பிரச்னைக்கு அலோபதி, சித்தா, ஆயுர்வேத மருந்துகளை மாற்றி மாற்றி எடுப்பது எந்த அளவுக்குச் சரியானது?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த பொது மருத்துவர் அருணாசலம்.

பொது மருத்துவர் அருணாசலம்

அலோபதி மருந்துகளுக்கு பக்க விளைவுகள் உண்டு என்பதுதான் உண்மை. அதை 'டிரக் இன்டர்ஆக்‌ஷன்' (Drug interaction) என்று சொல்வோம். அதனால்தான் அலோபதி மருந்துகளைப் பரிந்துரைக்கும்போது சில மருந்துகளை சாப்பாட்டுக்கு முன், சிலவற்றை சாப்பாட்டுக்குப் பின் என குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுக்குமாறு மருத்துவர்கள் அறிவுறுத்துவோம்.

எந்தப் பிரச்னைக்கும் ஆரம்பகால சிகிச்சையாக வேண்டுமானால் சித்தா, ஆயுர்வேத மருந்துகளை எடுக்கலாமே தவிர, நோயின் தீவிர நிலையில் அவை உதவாது. படித்த, அனுபவம் வாய்ந்த மாற்று மருத்துவர்களும் தங்கள் நோயாளிகளுக்கு அதைத்தான் அறிவுறுத்துவார்கள்.

உதாரணத்துக்கு, சர்க்கரை நோயும், ரத்த அழுத்தமும் தீவிரமாகும்போது, மாற்று மருத்துவர்களே, அலோபதி மருத்துவர்களைப் பார்க்கவே அறிவுறுத்துவார்கள். மாற்று மருத்துவத்தில் தீவிர நோய்களை குணப்படுத்த முடியும் என்றால் எஃப்.டி.ஏவே அந்த மருத்துவ முறைகளை அங்கீகரித்திருக்குமே.... உலக சுகாதார நிறுவனமும் உலகம் முழுவதும் அந்த மருந்துகளை விற்பதற்கு ஒப்புதல் கொடுத்திருக்கும்.

பொதுவாக சித்தா, ஆயுர்வேத மருந்துகளில் உலோக கலப்பு அதிகமிருக்கும் என்பதும், அவை ஏற்புடையவையல்ல என்பதும் அலோபதி மருத்துவர்களின் கருத்து. எனவே, உங்கள் மாமனாருக்கு இருக்கும் நோய்களுக்கு அவற்றின் தீவிரத்துக்கேற்ப அலோபதி மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறுவது தான் சரியானது.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.



source https://www.vikatan.com/health/doctor-vikatan-diabetes-bp-can-i-take-siddha-medicines-along-with-english-medicine

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக