லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுகத்தில் நேற்று அதிபயங்கர வெடி விபத்து நடந்துள்ளது. இது மொத்த பெய்ரூட்டையும் நிலைகுலையச் செய்துள்ளது. இந்தச் சம்பவம் லெபனான் மட்டுமல்லாது உலகம் முழுவதையும் உலுக்கியுள்ளது. பெய்ரூட்டில் இருந்த ஒரு துறைமுகத்தில் நேற்று பிற்பகல் எப்போதும்போல பணிகள் நடந்துகொண்டிருந்துள்ளது. அந்த நகரமும் விறுவிறுப்பாக இயங்கிக்கொண்டிருந்துள்ளது. அப்போது துறைமுகத்தின் ஒரு பகுதியில் பெரிய அளவிலான தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் உருவான கரும்புகை வானில் பல கி.மீ தூரத்துக்கு எழுந்துள்ளது. துறைமுகத்திலிருந்த பலரும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்துவிட்டு தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அடுத்த சில நிமிடங்களுக்குள் காற்றின் வேகத்தால் தீ, துறைமுகத்தின் மற்ற இடங்களுக்கும் பரவியுள்ளது. அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் கண் இமைக்கும் நேரத்தில் துறைமுகத்திலிருந்த வேதிப்பொருள் வெடித்துச் சிதறி, ஒரு மைல் தூரத்துக்கு நகரின் அனைத்து இடத்தையும் தரைமட்டமாக்கியுள்ளது.
இந்தக் கோர விபத்தில் சிக்கி இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 4,000-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. வெடிப்பு நடந்த இடத்தில் உயிரிழந்தோரின் சடலங்கள் கிடப்பதாகவும் அப்பகுதியில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. துறைமுகத்தில் தீ விபத்து நடந்தபோது அங்கு தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பலர், அடுத்து நடந்த வெடிப்பின்போது மாயமாகியுள்ளனர். மேலும், தரைமட்டமான கட்டடங்களுக்குள் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெய்ரூட் துறைமுக கிடங்கில் கடந்த ஆறு ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்டிருந்த ஆபத்து தரக்கூடிய வேதிப்பொருள் வெடித்ததால் இந்தக் கோர விபத்து நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக ட்வீட் செய்துள்ள லெபனான அதிபர் மைக்கேல் ஆன், “துறைமுகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் எந்தவித பாதுகாப்பு நடைமுறைகளையும் பின்பற்றாமல் மக்களுக்கு ஆபத்து தரக்கூடிய வகையில் 6 ஆண்டுகளாகச் சேமித்து வைக்கப்பட்ட 2,750 அமோனியம் நைட்ரேட் வெடித்ததால் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இதைச் சற்றும் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இந்தக் கொடூர விபத்துக்குக் காரணமானவர்களைக் கண்டுபிடித்து அவர்களுக்கு உட்சபட்ச தண்டனை கொடுக்கும் வரை நான் ஓயப்போவதில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read: `லெபனானில் பயங்கரம்; தலைநகரில் வெடித்து சிதறிய கிடங்கு?!’ - நாட்டையே உலுக்கிய கோர சம்பவம்
அடுத்த ஒரு வாரத்துக்கு பெய்ரூட் நகரில் அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் பல கி.மீட்டர் தூரங்களுக்குப் பரவிய சேதங்களில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்நாடு முழுவதும் 3 நாள்களுக்குத் துக்கம் அனுசரிக்கப்படுவதாகவும், அவசரக்கால நிதியிலிருந்து 100 பில்லியன் லிரா உடனடியாக விடுவிக்கப்படும் என்றும் அதிபர் அறிவித்துள்ளார். மேலும், இது விபத்தா அல்லது திட்டமிட்டு நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவமா என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெபனானில் இருக்கும் மருத்துவமனைகள் அனைத்திலும் ஏற்கனவே கொரோனாவுக்கான சிகிச்சைகள் வழங்கப்பட்டு வந்துள்ளன. அதற்கு மத்தியில் இந்த கோர விபத்தினால் பெய்ரூட்டில் இருக்கும் அனைத்து மருத்துவமனைகளும் விபத்தில் காயமடைந்தவர்களால் நிரம்பியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் மோசமான வேதிப்பொருள் வெடித்துள்ளதால் மக்கள் வெளிக்காற்றை சுவாசிப்பதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அனைத்து நாட்டுத் தலைவர்களும் லெபனான் விபத்துக்கு தங்கள் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர். லெபனான் விபத்து தொடர்பாக சமூகவலைதளங்களில் உலவும் புகைப்படங்களும் வீடியோக்களும் பார்ப்பவர்கள் நெஞ்சை கனமாக்கியுள்ளன.
source https://www.vikatan.com/news/international/2750-tonnes-of-ammonium-nitrate-exploded-in-lebanon
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக