Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

நாகை: 3 மணிநேர விசாரணை; ரூ.45,500 பணம்!- விஜிலென்ஸ் ரெய்டால் பதறிய சமூக நலத்துறை அலுவலகம்

நாகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.  அப்போது கணக்கில் வராத 45,500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து, அந்த அலுவலக ஊழியர்களை  விசாரணை வளையத்தில் வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி

நாகை மாவட்டத்தில் பல்வேறு அரசு அலுவலங்களில் லஞ்சம் தலைவிரித்தாடுகிறது. கொஞ்சமும் பயமில்லாமல் இதற்கு இவ்வளவு பணம் தந்தால்தான்  ஓ.கே. செய்யமுடியும் என்று அதிகாரிகளே  பொதுமக்களிடம் நேரிடையாக பேரம் பேசுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், கடந்த சில நாள்களாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பல்வேறு அரசு அலுவலகங்களில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக நாகப்பட்டினம் மாவட்ட சமூகநலத்துறை அலுவலகத்தில் திருமண உதவி தொகை, முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் போன்ற திட்டங்களுக்கு அதிகாரிகள் பொதுமக்களிடம் லஞ்சம் கேட்பதாக நாகை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

அதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை  டி.எஸ்.பி. மனோகர், ஆய்வாளர் ரமேஷ் குமார் ஆகியோர் தலைமையிலான போலீஸார் நாகை சமூகநலத்துறை அலுவலகத்தில் அதிரடியாக நுழைந்து சோதனை மேற்கொண்டனர்.

லஞ்ச ஒழிப்பு போலீஸார் அதிரடி

மாவட்ட சமூகநலத்துறை அலுவலர் உமையாள் மற்றும் ஊழியர்களிடம் 3 மணி நேரம்  விசாரணை மேற்கொண்டதில்,  கணக்கில் வராத 45,500 ரூபாய் ரொக்கப் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அலுவலர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இச்சம்பவம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



source https://www.vikatan.com/news/corruption/dvac-raids-nagai-government-office-seized-45500-rupees

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக