Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

`2021-22 பட்ஜெட்டுக்கு நீங்களும் அரசுக்கு அறிவுரைகள் வழங்கலாம்!'... எப்படி வழங்குவது?

ஒவ்வோர் ஆண்டும் மத்திய பட்ஜெட் அறிவிப்புகள் வந்ததும் `அந்த வரியைக் குறைத்திருக்கலாம்’, இந்த வரியை நீக்கி இருக்கலாம் என்று பலரும் பலவிதமாகக் கருத்து சொல்வது வழக்கம்.

பட்ஜெட் பற்றிய நமது அபிப்ராயத்தை `பட்ஜெட்’ வாசிக்கப்பட்ட பிறகு, சொல்லிப் பயனில்லை. அதை இப்போதே தெரிவித்தால் சரியான ஆலோசனைகள் முறையாகப் பரிசீலிக்கப்படக் கூடும். அதன் விளைவாகக் கிடைக்கும் பலனானது நம் எல்லோருக்கும் கிடைக்கக்கூடும். எப்படி?

Nirmala Sitharaman

நேரில் நடக்காத கலந்துரையாடல்...

மத்திய நிதி அமைச்சகத்தின் ஐந்து துறைகளில் ஒன்றான பொருளாதார அலுவல்களுக்கான (Department of Economic Affairs) துறைதான் பட்ஜெட் தயாரிக்கிறது. அதற்காக மத்திய அரசின் 51 அமைச்சகங்களிலிருந்தும் கருத்துகளைப் பெறுகிறது. அத்துடன், நிதி நிபுணர்கள், வணிகப் பெருமக்கள், தொழில்முனைவோர், பொதுமக்கள் ஆகியோரிடமிருந்தும் நேருக்கு நேர் நிகழ்ச்சி மூலம் கருத்துக்களைப் பெற்று, பட்ஜெட்டுக்கு இறுதிவடிவம் தரப்படுகிறது.

இந்த ஆண்டு, கொரோனா பேரிடர் காரணமாக நேருக்கு நேர் கலந்துரையாடல் கிடையாது. அதற்குப் பதிலாக பொதுமக்கள் உட்பட பல்வேறு அமைப்பினரும் வரப்போகும் புதிய பட்ஜெட் பற்றிய தனது யோசனையை மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். உங்கள் கருத்துகள், யோசனைகள், பரிந்துரைகள் அனைத்தையும் MY GOV(www.mygov.in) என்கிற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

Budget

ஆலோசனைப் பிரிவுகள்

பொருளாதாரம் மற்றும் நிதி, விவசாயம், சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய வாழ்வு, கல்வி, வேலைவாய்ப்பு, உள்கட்டமைப்பு வசதிகள், தொழில், வர்த்தகம், திறன்மேம்பாடு, சேமிப்பு, முதலீடு, வங்கிக்கடன், வருமான வரி ஆகிய பல்வேறு பொருள்கள் குறித்ததாக இருக்கலாம்.

`எதையாவது சொல்லி வைப்போம்’ என்கிற ரீதியில் ஆலோசனை சொல்லக் கூடாது. பொறுப்புணர்வுடனும் சமூக அக்கறையுடனும் நமது கருத்தைத் திரட்டி, சரியான வடிவத்தில் அதைத் தெரிவிக்க வேண்டும். அப்படித் தெரிவிக்கும்போது இது அவசியமான யோசனை, இது நிச்சயம் பரிசீலிக்கப்படும் என்ற எண்ணம் நமக்கே வர வேண்டும்.

இந்த மாத முடிவுக்குள்...

உதாரணமாக, தற்போது பழைய வருமான வரித் திட்டத்தில் உள்ள சில சலுகைகளை அடுத்தடுத்த ஆண்டுகளில் படிப்படியாகக் குறைக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு குறைக்கக் கூடாது என்பது ஒருவரது கருத்து என்றால், அதற்கான காரணத்தை அழுத்தமாகத் தெரிவிக்க வேண்டும்.

பட்ஜெட்

‘நமது கருத்து ஏற்கப்படுமா’ என்ற தயக்கமே கூடாது. நல்ல யோசனைகள் நிச்சயமாக ஏற்கப்படும். தேவைப்பட்டால், நமது யோசனை தொடர்பாக நிதி அமைச்சகத்திலிருந்து கூடுதல் தகவல் தேவைப்பட்டால், நம்மைத் தொடர்பு கொண்டு, நமது யோசனையைப் பரிசீலிப்பார்கள்.

`வரப்போகும் பட்ஜெட்டில் தமது பங்களிப்பும் இருக்க வேண்டும்’ என்ற எண்ணம் கொண்ட யாரும் 30.11.2020-க்குள் தமது கருத்தை மின்னஞ்சல் வழியாகப் பதிவு செய்யலாம். நாம் சொல்லக்கூடிய யோசனை வேறு எவருக்கும் தோன்றாத, வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒன்றாகக்கூட இருக்கலாம். விரைந்து செயல்பட்டு ஆலோசனைகளை அள்ளி வழங்குங்கள்.



source https://www.vikatan.com/business/finance/finance-ministry-seeks-ideas-for-union-budget-2021-22

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக