Ad

செவ்வாய், 17 நவம்பர், 2020

லட்சுமி விலாஸ் வங்கிக்கு ரிசர்வ் வங்கி கட்டுப்பாடு... இந்த அதிரடி நடவடிக்கை ஏன்?

அதிக அளவில் மக்கள் பயன்படுத்தி வரும் லட்சுமி விலாஸ் வங்கியின் மீது ரிசர்வ் வங்கி விதித்திருக்கும் வர்த்தகத் தடையால் (moratorium) டிசம்பர் 16-ம் தேதி வரை இந்த வங்கியிலிருந்து ஒரு மாதத்திற்கு சேமிப்பு, நடப்பு மற்றும் அனைத்து கணக்குகளில் இருந்தும் 25,000 ரூபாய்க்கு மேல் பணம் எடுக்க முடியாது. எனினும் கல்விச் செலவு, அவசர மருத்துவ தேவை, திருமண செலவுகள் உள்ளிட்ட முக்கிய செலவுகளுக்கு, ரிசர்வ் வங்கியின் அனுமதியுடன் 25,000 ரூபாய்க்கு மேல் எடுத்துக் கொள்ளலாம் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

3-வது வங்கி!

கடந்த 2019-ம் ஆண்டு நிதிமோசடி புகாரில் சிக்கி பி.எம்.சி வங்கி திவால் ஆன நிலையில் இதேபோன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அப்போது பி.எம்.சி வங்கி புதிய கடன்களை கொடுக்கக்கூடாது என்றும் 10,000 ரூபாய்க்கு மேல் வாடிக்கையாளர்கள் பணம் எடுக்க முடியாது என்றும் சொல்லப்பட்டது. இதனால் அந்த வங்கியின் வாடிக்கையாளர்கள் கடுமையாக அவதிப்பட்டனர். சிலர் சிகிச்சைக்கு பணம் எடுக்க முடியாமல் பலியான சோகமும்கூட நடந்தது.

பி.எம்.சி மோசடி நடந்து சில மாதங்களுக்குள்ளாகவே தனியார் வங்கியான யெஸ் பேங்கிலும் ஆர்.பி.ஐ சில அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஏனெனில் அந்த வங்கியில் வாராக்கடன் அதிகரித்ததால் நிதிச் சுமை ஏற்பட்டு சிக்கலில் மாட்டி தவித்து வந்தது. மேலும் நிர்வாக ரீதியாகவும் இயக்குனர்களுக்கு இடையிலும் சில பிரச்சனைகள் யெஸ் பேங்கில் நிலவி வந்தது.

Also Read: சிக்கலில் லக்ஷ்மி விலாஸ் பேங்க்..! - இனி என்ன ஆகும்?

யெஸ் பேங்க் பணிகளை ரிசர்வ் வங்கி தொடர்ந்து கண்காணித்ததோடு மட்டுமல்லாமல், யெஸ் பேங்கில் வைப்பு தொகை வைத்திருப்போர் அதிகபட்சமாக ரூ.50,000 வரை மட்டுமே பணம் எடுக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. இப்போது லட்சுமி விலாஸ் பேங்க் மீது இதே மாதிரியான நடவடிக்கையை ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ளது. இப்படியாக எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் கூட்டுறவு வங்கிகளும் உள்ளூர் வங்கிகளும் நிர்வாக குளறுபடி காரணமாக அடுத்தடுத்து சிக்கலுக்கு உள்ளாகி வருவது மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

money

தொடர் நஷ்டம்!

லட்சுமி விலாஸ் பேங்க் விவகாரம் குறித்து வங்கித் துறை சார்ந்த வட்டாரத்தில் பேசினோம். "93 வருட பாரம்பரியம் கொண்ட தனி யார் வங்கியான லட்சுமி விலாஸ் வங்கி, கடந்த 3 ஆண்டுகளாக கடும் நஷ்டத்தில் இயங்கி வருவதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. தொடர் நஷ்டம் காரணமாக நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள இந்த வங்கி, தனது வங்கிச் செயல்பாடுகளை மீட்பதற்கான நடவடிக்கைகளில் இறங்கியது. ஆனால், அது ஆக்கப்பூர்வமாக இல்லாததால் வாடிக்கையாளர்களின் நலன் கருதி தற்போது இந்த வங்கியின் செயல்பாடுகளை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது.

நஷ்டத்தில் இயங்கியதோடு நிகர மதிப்பும் குறையத் தொடங்கியது. மேலும் வரவு குறைந்து, வாராக் கடன்களும் அதிகரித்த நிலையில் வங்கி திவால் ஆகக்கூடிய அளவுக்கு நிதி நெருக்கடியைச் சந்தித்தது. வங்கியின் கடன் பத்திரங்களின் தரமும் கடுமையாகக் குறைக்கப்பட்டது. இதனால் ரிசர்வ் வங்கி தற்போது இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது" என்றனர்.

நஷ்டமும் செலவும்!

கடந்த சில வருடங்களாகவே தொடர் நஷ்டத்தினை மட்டுமே கண்டு வந்த இந்த வங்கி, கடந்த 2019-2020-ம் நிதியாண்டில் பெருத்த நஷ்டத்தையே கண்டுள்ளது. குறிப்பாக கடந்த 2015 முதல் லாபத்தில் இருந்து வந்த நிலையில் 2018 மற்றும் 2019-ல் பெரும் நஷ்டத்தை மட்டுமே கண்டது. இதனால் ஜூலை 2017-ல் 189 ரூபாயாக இருந்த பங்கின் விலை, இன்று வெறும் 15.55 ரூபாயாக மட்டும் உள்ளது.

குறிப்பாக வட்டி வருவாயும் தொடர்ந்து இந்த வங்கியில் குறைந்து கொண்டே வந்தது. குறிப்பாக கடந்த ஜூன் 2018-ல் 726.99 கோடி ரூபாயாக இருந்த வருவாய், ஜூன் 2019-ல் 623.94 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. இதே மார்ச் 2015-ல் 230.15 கோடி ரூபாயாக இருந்த செலவினம், மார்ச் 2019-ல் 401 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. மேலும் மற்ற வருவாய்களும் இந்த சமயத்தில் வெகுவாக குறைந்துள்ளன.

ரிசர்வ் வங்கி

அதே போல நிறுவனத்தின் நிகர லாபமும் தொடர்ந்து வீழ்ச்சியில் இருந்து வருகிறது. மார்ச் 2015-ல் 132.20 கோடி ரூபாயாக இருந்த, இதன் நிகரலாபம், 20-ல் 180.21 கோடி ரூபாயாகவும் 2017-ல் 256.07 கோடி ரூபாயாகவும் 2018-ல் 584.87 கோடி ரூபாய் நஷ்டமும் 2019-ல் 894.10 கோடி ரூபாய் நஷ்டமும் கண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. ஆக வருமானம் குறைந்து செலவினங்களே இந்த வங்கியை ஆட்டிப் படைக்கத் தொடங்கியது. இந்த நிலையில் தற்போது இப்படியொரு அதிரடி நடவடிக்கை பாய்ந்துள்ளது.

Also Read: சிக்கலில் தவிக்கும் லக்ஷ்மி விலாஸ் வங்கி... முதலீட்டாளர்களின் பணம் பத்திரமா?

கடுமையான கட்டுப்பாடுகள்!

நவம்பர் 17-ம் தேதி மாலை 6 மணி முதல் டிசம்பர் 16-ம் தேதி வரை லட்சுமி விலாஸ் வங்கியிலிருந்து 25,000 ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். அத்துடன் லட்சுமி விலாஸ் வங்கி அளித்துள்ள டிராப்டுகள் உள்ளிட்ட சிலவற்றுக்கும் பணம் அளிக்கப்பட மாட்டாது என்றும் இந்த வங்கி மூலம் அளிக்கப்பட்டுள்ள பில்களுக்கும் பணம் அளிக்கப்பட மாட்டாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த வங்கி அளித்துள்ள கடன் உறுதிப்பத்திரம் ஆகியவையும் உடனடியாக ரத்து செய்யப்பட உள்ளது. ஏற்கனவே பெரிய கடன் வழங்க விதிக்கப்பட்ட தடை அனைத்துக் கடன்களுக்கும் அமலாகிறது.

RBI

ஏன் இந்த நடவடிக்கை?!

சமீபத்தில் லட்சுமி விலாஸ் வங்கி மீது பல்வேறு புகார்கள் எழுந்ததன் காரணமாக, ரிசர்வ் வங்கி அதிரடியாக இந்த வங்கியின் மீது பி.சி.ஏ நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளாக, அதிகளவிலான வாராக்கடன் மற்றும் பல பிரச்னைகளை எதிர்கொள்வதற்குப் போதுமான நிதி வலிமை இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் லட்சுமி விலாஸ் வங்கி மீது இந்த நடவடிக்கையை எடுத்தது ரிசர்வ் வங்கி.

இதன்மூலம் ரிசர்வ் வங்கி லட்சுமி விலாஸ் வங்கியுடைய நிர்வாகத்தைத் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து, வங்கியின் நிர்வாகம் மற்றும் நிதி நிலை, வர்த்தக முறை, வர்த்தகம் குறித்து ஆய்வுகள் கடந்த சில மாதங்களாக ரிசர்வ் வங்கி நடத்தி வந்தது. வங்கியின் செயல்பாடுகளில் பல குளறுபடிகள் இருந்ததால் தற்போது வங்கிச் செயல்பாடுகளின் மீது வர்த்தகத் தடையை ரிசர்வ் வங்கி அமல்படுத்தியிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/banking/rbi-brought-lakshmi-vilas-bank-under-moratorium

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக