Ad

புதன், 18 நவம்பர், 2020

`மத்தியப் பிரதேச மதச் சுதந்திர மசோதா 2020’ - கேள்வி கேட்பவர்களை மிரட்ட இன்னொரு ஆயுதமா?

உத்தரப் பிரதேசம், ஹரியானா, கர்நாடகம் ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து, ’லவ் ஜிகாத்’துக்கு எதிராகச் சட்டம் கொண்டுவரப்போவதாக சிவராஜ் சௌகான் தலைமையிலான மத்தியப் பிரதேச அரசு தற்போது அறிவித்துள்ளது. இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்தியப் பிரதேச சட்டத்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, ‘மத்திய பிரதேசத்தில் லவ் ஜிகாத்துக்கு எதிராக சட்டம் கொண்டுவரப்போகிறோம். கட்டாயப்படுத்தி திருமணம் செய்தல், திருமணத்தின் மூலம் மோசடி செய்தல் அல்லது மோசடி மூலம் ஒருவரைத் திருமணத்துக்குத் தூண்டுதல், மதமாற்றத்துக்காகத் திருமணம் செய்தல் ஆகியவை இந்தச் சட்டத்தின்படி குற்றமாகக் கருதப்படும்.

சிவராஜ் சௌகான்

இந்தச் சட்டத்தின்படி, ஐந்து ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்படும்’ என்று தெரிவித்தார். ‘மத்தியப் பிரதேச மதச் சுதந்திர மசோதா, 2020’ என்ற இந்த மசோதாவை அடுத்த சட்டமன்றக் கூட்டத்திலேயே கொண்டுவரப்போவதாகவும் சட்ட அமைச்சர் கூறினார். இதையடுத்து, ‘லவ் ஜிகாத்’ பற்றிய சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.

இந்து மதத்தைச் சேர்ந்த பெண்களுக்கு காதல் வலைவீசி, அவர்களைத் திருமணம் செய்துகொள்ளும் இஸ்லாமிய இளைஞர்கள், திருமணத்துக்குப் பிறகு அந்தப் பெண்களைத் தீவிரவாத அமைப்புகளில் சேர்த்துவிடுகிறார்கள் என்று இந்துத்வா அமைப்புகள் குற்றம்சாட்டிவருகின்றன. இந்திய சட்ட ஆவணங்களில் 'லவ் ஜிகா'த் என்ற ஒரு வார்த்தையே கிடையாது. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பாகத்தான், ‘லவ் ஜிகாத்’ என்ற சொல்லாடல் கண்டுபிடிக்கப்பட்டது. கர்நாடகாவைச் சேர்ந்த ‘ராம் சேனா’ என்ற அமைப்பின் தலைவரான பிரமோத் முத்தாலிக் என்பவரால் இந்தச் சொல்லாடல் உருவாக்கப்பட்டது என்று சொல்லப்படுகிறது.

குமரகுரு

இந்த விவகாரம் குறித்து பா.ஜ.க-வின் மாநில செய்தித் தொடர்பாளரான வழக்கறிஞர் குமரகுருவிடம் பேசினோம். “மாற்று மதத்தைச் சேர்ந்த பெண்களைக் கட்டாயத் திருமணம் செய்வது, மோசடியாகத் திருமணம் செய்வது, பிறகு அவர்களை மூளைச்சலவை செய்து ஐ.எஸ் போன்ற தீவிர அமைப்புகளில் சேர்த்துவிடுவது என்ற போக்கு பல மாநிலங்களில் இருக்கிறது. குறிப்பாக, கேரளாவில் இது அதிகமாக நடைபெறுகிறது. இத்தகைய நடவடிக்கையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஈடுபடுகிறார்கள் என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. எனவேதான், இதை லவ் ஜிகாத் என்று குறிப்பிடுகிறோம்.

இதைத் தடுப்பதற்கான சட்டம் நம் நாட்டில் இல்லை. எனவேதான், லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டம் தேவை என்று நீண்டகாலமாக சொல்லிவருகிறோம். தற்போது, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநில அரசுகள் இதற்கான சட்டத்தைக் கொண்டுவரவிருப்பது வரவேற்கத்தக்கது” என்றார் குமரகுரு.

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு உறுப்பினரான கனகராஜிடம் பேசினோம். “இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படி, வயதுவந்த ஆணும் பெண்ணும் தங்கள் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ளலாம். அப்படியிருக்கும்போது, லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டம் என்று புதிதாகச் சட்டம் கொண்டுவருவதை ஒருபோதும் ஏற்க முடியாது. காதலைத் தடைசெய்ய வேண்டும், சாதிமறுப்பு, மதமறுப்புத் திருமணங்களை ஒழிக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க-வினர் நோக்கம்.

கனகராஜ்

இன்றைக்கு ‘லவ் ஜிகாத்’ என்று சொல்லி மத ரீதியாக காதலுக்குத் தடை விதிப்பவர்கள், நாளைக்கு ‘தலித் ஜிகாத்’ என்று சொல்லி சாதி ரீதியாகத் தடை கொண்டுவருவார்கள். இது நம் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கு எதிரானது. எனவே, இதை எந்த விதத்திலும் இதை ஏற்றுக்கொள்ள முடியாது.

Also Read: அமித் ஷா வியூகம்; கோடிகளில் புதிய திட்டங்கள்... பா.ஜ.க-வின் பீகார் `டெக்னிக்' தமிழகத்தில் எடுபடுமா?

பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் தீவிரவாதத்தையும் பயங்கரவாதத்தையும் ஒழிந்துவிட்டதாகக் கூறிவரும் பா.ஜ.க-வினர், இப்போது இரு மதங்களையும் இரு சாதிகளையும் சேர்ந்த ஆணும் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்துகொள்வதைத் தடுப்பதன் மூலமாக தீவிரவாதத்தை ஒழிக்கப்போவதாகக் கூறுவது வேடிக்கையாக இருக்கிறது. தங்களை யாரும் எதிர்க்கக் கூடாது, கேள்வி கேட்கக் கூடாது என்று பா.ஜ.க-வினர் நினைக்கிறார்கள். தீவிரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்று சொல்லிவிட்டால், அதை யாரும் கேள்வி கேட்கக்கூடாது என்ற நிலையை உருவாக்குகிறார்கள்.

காதலர்கள்

‘உபா’ சட்டமாக இருந்தாலும், என்.ஐ.ஏ திருத்தமாக இருந்தாலும், பல பேர் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தை ஏவுவதாக இருந்தாலும், நகர்ப்புற நக்சல்கள் என்று முத்திரை குத்துவதாக இருந்தாலும், இவற்றின் நோக்கம் என்பது யாரும் தங்களை கேள்வி கேட்கக் கூடாது என்ற அச்சத்தை உருவாக்குவதுதான். தங்களை நோக்கி கேள்வி எழுப்புபவர்களுக்கு கடுமையான நெருக்கடியைக் கொடுக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்காக அவர்கள் எடுத்துவரும் பல நடவடிக்கைகளில் ஒன்றுதான் லவ் ஜிகாத்துக்கு எதிரான சட்டம்” என்றார் கனகராஜ்.

Also Read: லவ் ஜிஹாத் உண்மையில் இருக்கிறதா..? தேசிய புலனாய்வு முகமையின் ரிப்போர்ட்

‘லவ் ஜிகாத்’ சொல்லாடல் பல சர்ச்சைகளில் அடிபடுகிறது. கேரளாவைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் கமலாதாஸின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ‘ஆமி’ என்ற திரைப்படம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சையாக்கப்பட்டது. கமலாதாஸ் மறைந்துவிட்டார். அவர் இஸ்லாம் மதத்துக்கு மாறியவர். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்தப் படம் லவ் ஜிகாத்துக்கு ஆதரவாக இருப்பதாகவும், எனவே அதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று சிலர் நீதிமன்றம் சென்றனர். எதிர்ப்புகளை மீறி அந்தப் படம் வெளியானது.

தனிஷ்க் விளம்பரம்

சமீபத்தில் ஒரு நகைக்கடை விளம்பரத்தை வைத்து உருவாக்கப்பட்ட ‘லவ் ஜிகாத்’ சர்ச்சை, சமூக ஊடகங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. தனிஷ்க் ஜூவல்லரி விளம்பரத்தில், இந்து மதத்தைச் சேர்ந்த மருமகளுக்கு இஸ்லாமியக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் வளைகாப்பு நிகழ்ச்சி நடத்துவதைப்போல காட்சி உருவாக்கப்பட்டிருந்தது. லவ் ஜிகாத்தை ஆதரித்து இந்த விளம்பரம் எடுக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் சிலர் பிரச்னையைக் கிளப்பினார்கள். #BoycottTanishq என்ற ஹேஷ்டாக் உருவாக்கப்பட்டு, ட்விட்டரில் ட்ரெண்டானது. கடைசியில், அந்த விளம்பரத்தை தனிஷ்க் நிறுவனம் வாபஸ் பெற்றது.



source https://www.vikatan.com/government-and-politics/politics/story-about-controversy-on-love-jihad-bill

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக