Ad

புதன், 18 நவம்பர், 2020

`எங்களுக்கு ஏமாற்றம்தான் மிச்சம்!' - பயிர்க்காப்பீட்டால் மன உளைச்சலில் விவசாயிகள்

விவசாயிகள் கடுமையான உழைப்பைச் செலுத்தி பயிர்களை உற்பத்தி செய்கிறார்கள். இதில் விவசாயிகளின் முதலீடும் அடங்கியிருக்கிறது. மழை, வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை இடர்ப்பாடுகளாலோ, பூச்சி, நோய்த்தாக்குதல்களாலோ, ஏதேனும் பாதிப்புகள் ஏற்படும்போது மகசூல் இழப்பை சந்திக்க வேண்டியுள்ளது. இதனால் ஏற்படும் பொருளாதார இழப்பை ஈடு செய்யத்தான் பயிர் காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆனால், இதில் வெளிப்படைத்தன்மை இல்லாததால், விவசாயிகளுக்கு பலவிதமான பின்னடைவுகள் ஏற்படுவதாக ஆதங்க குரல்கள் ஒலிக்கின்றன.

விவசாயி

தஞ்சை மாவட்டத்தில் சம்பா, தாளடி பட்டத்தில் நெல் சாகுபடி செய்துள்ள விவசாயிகள், வருகிற டிசம்பர் 15-ம் தேதிக்குள் , ஏக்கருக்கு 489 ரூபாய் வீதம் பிரீமியம் செலுத்தி, தங்களது நெற்பயிரை இன்ஷூரன்ஸ் செய்து, பயன் அடையுமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுபோல் தமிழ்நாட்டின் மாவட்டங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பயிர்க் கடன் பெற்ற விவசாயிகளுக்கு அந்தந்த வங்கிகளே, பயிர் காப்பீடுக்கான பிரீமியத்தைச் செலுத்திவிடும் எனவும் பயிர்க் கடன் பெறாத விவசாயிகள், தங்களது பகுதிகளில் உள்ள தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிகளிலோ, தேசிய வங்கிகளிலோ, பொது சேவை மையங்களிலோ உரிய ஆவணங்களுடன் பிரீமியம் செலுத்தலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத பிரதம மந்திரியின் பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தைப் பயன்படுத்தி விவசாயிகள் பலன் அடையுமாறு வேளாண்மைத்துறை மற்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் அழைப்பு விடுக்கப்படுவதோடு மட்டுமல்லாமல், பயிர் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களும் தீவிரமாக விளம்பரப்படுத்துகின்றன. ஆனால், விவசாயிகள் மத்தியிலோ, இதன் செயல்பாடுகள் மீது அதிருப்தி நிலவுகிறது. காரணம், கடந்த காலங்களில் கசப்பான அனுபவங்களே அதிகம் என்கிறார்கள்.

விமல்நாதன்

இதுகுறித்து நம்மிடம் பேசிய தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகப்பு சங்கத்தின் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமல்நாதன், ``தங்களது நெற்பயிரில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால், கண்டிப்பாக இழப்பீடு கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையில்தான் விவசாயிகள் தங்களது பயிரை காப்பீடு செய்கிறார்கள். இந்த ஆண்டு ஒரு ஏக்கர் நெற்பயிரை 32,550 ரூபாய்க்கு காப்பீடு செய்ய, 489 ரூபாய் பிரீமியம் செலுத்த வேண்டும். இந்தத் தொகையோடு சேர்த்து, மத்திய மாநில அரசுகளும் தங்களது பங்களிப்புத் தொகையை வழங்குகிறது. இதன் மூலம் பயிர் இன்ஷூரன்ஸ் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் வருவாய் கிடைக்கிறது. ஆனால், விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைப்பதென்பதோ குதிரைக் கொம்பாக உள்ளது. விவசாயிகள் ஏமாற்றப்படுகிறார்கள். இவற்றுக்கெல்லாம் காரணம், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் வெளிப்படைத்தன்மை இல்லை.

காப்பீட்டு சட்ட விதிகளையும் இந்நிறுவனங்கள் கடைப்பிடிப்பதில்லை. பயிர் அறுவடை சோதனை முடிந்து அடுத்த 4 வாரங்களுக்குள், சோதனை முடிவுகளை அறிவித்து, அடுத்த இரண்டு வாரங்களுக்குள், விவசாயிகளுக்கு இழப்பீட்டுத்தொகையை வழங்கிவிட வேண்டுமென்பது விதிமுறை. ஆனால், எதார்த்த நிலையோ மிகவும் மோசம். அறுவடை சோதனை முடிந்து பல மாதங்கள் கடந்தாலும் கூட, சோதனை முடிவுகளை அறிவிப்பதே இல்லை. உரிய காலத்தில் இழப்பீட்டுத் தொகையும் கிடைப்பதில்லை. காலதாமதானால், இழப்பீட்டுத் தொகையுடன் 12 சதவிகித வட்டியையும் சேர்த்து வழங்க வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், ஒரு வருடம் தாமதமானாலும், அதற்குரிய வட்டியை வழங்கியதே இல்லை. விவசாயிகள் தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடத்தி அழுத்தம் கொடுக்கவில்லையென்றால், இழப்பீட்டுத்தொகைகூட விவசாயிகளுக்கு முழுமையாக வந்து சேராது.

அக்ரிகல்ச்சர் இன்ஷூரன்ஸ் நிறுவனத்தின் விளம்பரம்

டெல்டா விவசாயிகள் இந்த ஆண்டு குறுவை அறுவடை முடிந்து, சம்பா, தாளடி சாகுபடி செய்து களையும் எடுத்துவிட்டார்கள். ஆனாலும் இன்னும்கூட, குறுவை நெல் அறுவடை சோதனை முடிவுகளை இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் அறிவிக்கவே இல்லை. அனைத்து வருவாய் கிராமங்களிலும் அறுவடை சோதனை செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. எந்தெந்த வருவாய் கிராமத்தில் எவ்வளவு மகசூல் இழப்பு, எத்தனை சதவிகிதம் இழப்பீடு கிடைக்கும் என்ற தகவல்களை விரிவாக வெளியிட்டிருக்க வேண்டும். இதைச் செய்தால், விவசாயிகள் ஒரு முடிவுக்கு வருவார்கள். இழப்பீடு இல்லையென அதிகாரபூர்வமாகத் தெரிந்துவிட்டால், இதை எதிர்பார்த்து மன உளைச்சலோடு காத்திருக்க மாட்டார்கள். உண்மையாக இழப்பீடு ஏற்பட்டு, விடுபட்டுப் போயிருந்தால், முறையீடு செய்ய உதவியாக இருக்கும். ஆனால், அறுவடை சோதனை முடிவை வெளியிட இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் மறுக்கின்றன.

வேளாண்மைத்துறையும் அந்தந்த மாவட்ட நிர்வாகமும், இதை வெளிப்படையாக அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இது இவர்களது கடமை. ஆனால், இதைப் பற்றிக் கண்டுகொள்ளவதே இல்லை” எனத் தெரிவித்தார். இது ஒருபுறமிருக்க, தற்போது அக்ரிகல்ச்சர் இன்ஷூரன்ஸ் கம்பெனி சார்பில் வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்று டெல்டா விவசாயிகள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 2020-21-ம் ஆண்டு ராபி பருவ நெல் சாகுபடிக்கு, பயிர் காப்பீடு செய்ய கடலூர், தர்மபுரி, ஈரோடு, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 19 மாவட்டங்களின் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அதில் பிரீமியம் தொகை, பிரீமியம் செலுத்த வேண்டிய கடைசி தேதி உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

விவசாயம்

ஆனால், இதில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்கள் இல்லாததால் விவசாயிகள் சிலர் குழப்பமடைந்தார்கள். தமிழகத்திலேயே அதிகமாக நெல் விளையும் டெல்டா மாவட்டங்கள் ஏன் விடுபட்டுள்ளன எனக் கேள்வி எழுந்தது. இதுகுறித்து விசாரித்தபோது, தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் பயிர் இன்ஷூரன்ஸ் திட்டத்துக்கு இப்கோ டோக்கியா பொதுப்பயிர் காப்பீட்டு நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது எனத் தெரிய வந்தது. இனிவரும் காலங்களில் பயிர் இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் தனித்தனியாக அறிவிப்பு வெளியிடுவதைத் தவிர்க்கவேண்டும் எனவும் தமிழக வேளாண்மைத்துறையின் சார்பில் இங்குள்ள அனைத்து மாவட்டங்களையும் உள்ளடக்கி அறிவிப்பு வெளிட்டால்தான் குழப்பம் ஏற்படாமல் இருக்கும்” என்கிறார்கள் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள்.



source https://www.vikatan.com/news/agriculture/how-lack-of-transparency-in-crop-insurance-affects-delta-farmers

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக