Ad

புதன், 21 அக்டோபர், 2020

கொரோனா பரவலைத் தடுக்க UV லைட்டுகள்... பிக்பாஸில் கமல் சொன்னதும், மருத்துவ உண்மையும்!

வார இறுதியானால் பிக்பாஸ் வீட்டுக்குள் மட்டுமன்றி நமது வீட்டுக்குள்ளும் நுழையும் நடிகர் கமல், பல்வேறு விஷயங்களைப் பகிர்வது வழக்கம். கடந்த வார எபிசோடில் கோவிட்-19 தொற்று பாதுகாப்பு பற்றிப் பேசியவர் தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிப்பதன் அவசியம், மாஸ்க் எப்படி அணிய வேண்டும் என்பது பற்றியெல்லாம் பேசினார்.

kamal in bigboss

பிக்பாஸ் நிகழ்ச்சி பாதுகாப்புடன் நடைபெறுகிறதா என்பது பற்றிப் பல்வேறு விமர்சனங்கள் எழுகின்றன. அதனால் பிக்பாஸ் ஷூட்டிங் எப்படி பாதுகாப்போடு நடைபெறுகிறது என்றும் விளக்கினார்.

ஷூட்டிங் நடைபெறும் இடத்தில் அல்ட்ரா வயலெட் (Ultra Violet - UV) லைட்டுகள் பொருத்தி பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று கூறினார். இதையடுத்து யு.வி லைட்டுகளுக்கும் கொரோனா பரவல் கட்டுப்படுவதற்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் யு.வி லைட்டுகள் (கதிர்கள்) பற்றிய புதிய ஆய்வு முடிவு ஒன்றும் வெளியாகியுள்ளது.

covid-19 spread

`நேஷனல் அகாடமி ஆஃப் சயின்சஸ்' என்ற அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வு முடிவில், ``புள்ளிவிவரங்களின் அடிப்படையில் மட்டும் வைத்துப் பார்க்கும்போது உலக அளவில் காலநிலைக்கும் கொரோனா பரவல் அதிகரிப்பதற்கும் தொடர்பிருக்கிறது.

அதாவது, கோடைக்காலத்தில் வைரஸ் பரவல் குறைவதும் மழை மற்றும் குளிர்காலத்தில் வைரஸ் பரவல் அதிகரிப்பதும் கண்டறியப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நடைபெற்ற ஆய்வில், யு.வி லைட்டுகள் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் என்று கண்டறியப்பட்டுள்ளது" என்று தெரிய வந்துள்ளது.

யு.வி லைட்டுகள் எப்படி கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் என்று ரேடியாலஜி மருத்துவர் ஆனந்த்குமாரிடம் கேட்டோம்.

``யு.வி லைட் என்பது புதிய தொழில்நுட்பம் கிடையாது. காலம் காலமாக நடைமுறையில் உள்ள தொழில்நுட்பம்தான். யு.வி லைட்டுகளுக்கு கொரோனா வைரஸை மட்டுமல்ல; அனைத்து வகையான வைரஸ், பாக்டீரியா கிருமிகளைக் கொல்லும் தன்மை உள்ளது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், இதில் முக்கியமான ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும்.

அதாவது யு.வி கதிர்கள் மனிதர்கள் மேல் நேரடியாகப் படக்கூடாது. காரணம், யு.வி கதிர்கள் மனிதர்கள் மேல் நேரடியாகப்படும்போது சருமப் புற்றுநோய், கண்புரை போன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும்.

அதனால்தான் ஓஸோன் மண்டலத்தில் ஓட்டை விழுவதால் யு.வி.கதிர்கள் மனிதர்களைத் தாக்கி இதுபோன்ற பிரச்னைகளை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கப்படுகிறது. கண்புரை ஏற்படக் கூடாது என்பதற்காகத்தான் கண்களுக்கான குளிர்கண்ணாடிகளிலும் யு.வி பாதுகாப்புக்கான கோட்டிங் கொடுக்கப்படுகிறது.

Radiologist Dr.Anand Kumar

கொரோனாவை கட்டுப்படுத்துமா?

மனிதர்கள் மீது நேரடியாகப்படுவதுதான் ஆபத்து என்பதால் ஓர் அறையை அல்லது நாம் பயன்படுத்தும் செல்போன், லேப்டாப், பர்ஸ் போன்ற பொருள்களில் கிருமி நீக்கம் செய்வதற்கு இந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். உதாரணமாக, ஆட்கள் இல்லாத ஓர் அறையை யு.வி லைட்டுகளைப் பயன்படுத்தி கிருமி நீக்கம் செய்துவிட்டு, அதன் இயக்கத்தை நிறுத்திவிட்ட பின்னர் அந்த அறைக்குள் ஆட்கள் புழங்கலாம்.

அந்த அறைக்குள் யு.வி கதிர்கள் தொழில்நுட்பத்தை இயக்குபவர்கூட இருக்கக் கூடாது. அறைக்கு வெளியிலிருந்துதான் அதன் இயக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டும். அதாவது, எந்தக் காரணம் கொண்டும் யு.வி கதிர்கள் மனிதர்கள் மேல் படக்கூடாது.

நாம் பயன்படுத்தும் பொருள்களைக் கிருமி நீக்கம் செய்ய வேண்டுமென்றால் யு.வி கதிர்கள் வெளியாகும் ஒரு பெட்டியில் அனைத்துப் பொருள்களையும் வைத்துவிட வேண்டும். அதன்பிறகு யு.வி கதிர்களை இயக்க வேண்டும். கிருமி நீக்கம் செய்தபிறகு, யு.வி கதிர்களின் இயக்கத்தை நிறுத்திய பிறகே அந்தப் பொருள்களை எடுக்க வேண்டும்.

Uv light controls corona virus spread

பிக்பாஸ் போன்ற நிகழ்ச்சிகளிலும் இந்த முறையில்தான் யு.வி கதிர்களை வெளிப்படுத்தும் லைட்டுகள் பயன்படுத்தப்படும். அறைகளில் அல்லது பொருள்களின் மீது கொரோனா வைரஸ் வாழும்பட்சத்தில் அங்கு யு.வி லைட்டுகளைப் பயன்படுத்தும்போது அங்கிருந்து வைரஸ் மேற்கொண்டு பரவாமல் அழிக்கப்படும். அதன் அடிப்படையில்தான் யு.வி லைட்டுகள் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் என்று ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றார்.



source https://www.vikatan.com/health/healthy/is-it-true-that-uv-lights-kill-coronavirus-as-kamal-hassan-told-in-biggboss

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக