Ad

புதன், 21 அக்டோபர், 2020

சென்னையில் திருட்டு; அயர்லாந்திலிருந்து கண்டுபிடித்த மகன் - போலீஸாரிடம் புலம்பிய சைக்கோ முரளி

சென்னை போரூரை அடுத்த செட்டியார் அகரம் மூர்த்தி நகர், 1-வது மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சண்முகசுந்தர வள்ளி (67). இவரின் மகன், மகளுக்குத் திருமணமாகிவிட்டதால் சென்னை வீட்டில் தனியாக வசித்துவந்தார். இவரின் மகன் அருள்முருகன், குடும்பத்துடன் அயர்லாந்தில் வசிக்கிறார். சென்னை அண்ணாநகரில் மகள் குடியிருக்கிறார். வெளிநாட்டில் அருள்முருகன் வசித்தாலும், தன்னுடைய அம்மா சண்முகசுந்தரவள்ளியிடம் போனில் பேசிவந்தார். இந்தநிலையில் வீட்டைப் பூட்டிவிட்டு சென்னை அண்ணாநகரிலுள்ள மகள் வீட்டுக்கு சண்முகசுந்தரவள்ளி சென்றார்.

உடைக்கப்பட்ட பூட்டு

சண்முகசுந்தரவள்ளி தனியாக வசித்ததால், பாதுகாப்பு கருதி வீடு முழுவதும் சிசிடிவி கேமராக்களை அருள்முருகன் பொருத்திவைத்திருக்கிறார். அந்த சிசிடிவி கேமரா பதிவுகளை அயர்லாந்தில் இருந்தபடியே தன்னுடைய செல்போனிலேயே அருள்முருகன் பார்ப்பார். வீட்டில் யாருமில்லை என்பதால் நேற்றிரவு சென்னையிலுள்ள வீட்டின் சிசிடிவியை அருள்முருகன் செல்போன் மூலம் கண்காணித்தார். அப்போது வீட்டுக்குள் யாரோ நடமாடும் காட்சி தெரிந்தது. இது குறித்து சென்னைக் காவல் கட்டுப்பாட்டு அறைக்கும், மதுரவாயல் காவல் நிலையத்துக்கும் அருள்முருகன் போனில் தகவல் தெரிவித்தார்.

உடனே உஷாரான ரோந்து பணியிலிருந்த மதுரவாயல் காவல் நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் மோகன், வீரமணி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்றனர். அப்போது வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி குதித்து இளைஞர் ஒருவர் வெளியில் வந்தார். அவரை மடக்கிப்பிடித்து போலீஸார் விசாரித்தபோது இளைஞரின் கையில் கத்தி, கடப்பாரைக் கம்பி, கஞ்சா, லேப்டாப் ஆகியவை இருந்தது தெரியவந்தது. இதையடுத்து இளைஞரை காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்துச் சென்று விசாரித்தனர். விசாரணையில் அவரின் பெயர் முரளி என்கிற சைக்கோ முரளி (25) எனத் தெரியவந்தது. தொடர்ந்து முரளியிடம் விசாரித்தனர்.

சைக்கோ முரளி

இது குறித்து மதுரவாயல் போலீஸார் கூறுகையில், ``போலீஸாரிடம் சிக்கிய முரளி, ஒரு பெண்ணைக் காதலித்திருக்கிறார். ஆனால், அந்தக் காதல், தோல்வியில் முடிந்தது. காதல் நினைவுகள் மனதில் வரும்போதெல்லாம் முரளி பிளேடால் தன்னுடைய உடலில் கிழித்துக்கொள்வார். அதனால்தான் அவருக்கு `சைக்கோ முரளி’ என்று அவரைப் பற்றி நன்கு அறிந்தவர்கள் பெயர் வைத்திருக்கிறார்கள். முரளியின் உடலில் பிளேடால் கிழித்ததற்கான காயங்கள் இருக்கின்றன. திருட்டு, கொள்ளை, வழிப்பறிச் சம்பவங்களில் ஈடுபடும் முரளி, பூட்டிய வீடுகளை நோட்டமிட்டுக் கொள்ளையடித்து வந்திருக்கிறார்.

வீட்டில் ஆள் இல்லை என்பதை முரளி கண்டுபிடிக்க, சில டெக்னிக்குகளை கடைப்பிடித்து வந்திருக்கிறார். திருடச் செல்லும் வீட்டுக்குள் நுழைவதற்கு முன் அந்த வீட்டின் முன் கோலம் போடப்பட்டிருக்கிறதா என்று பார்ப்பார். கோலம் இல்லாமல் வீட்டின் முன்பகுதி குப்பையாகக் கிடந்தால், அந்த வீட்டில் ஆள் இல்லை என்பதை முரளி உறுதிப்படுத்திக்கொள்வார். பிறகு, கையில் கொண்டு செல்லும் கடப்பாரையால் பூட்டை உடைத்து உள்ளே செல்வார். வீட்டுக்குள் நகை, பணம், பொருள்கள் ஆகியவற்றைத் திருடிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுவார். இதுதான் முரளியின் திருட்டு ஸ்டைல்

Also Read: சென்னை: ரூ.2 கோடி தங்கம், வைரம், வெள்ளி திருட்டு - தி.நகரைக் குறிவைக்கும் கொள்ளையர்கள்

பறிமுதல் செய்யப்பட்ட பொருள்கள்

முரளியிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பைக், திருடப்பட்டது. அந்த பைக்கை சில தினங்களுக்கு முன்னர் கூடுவாஞ்சேரியில் முரளி திருடியிருக்கிறர். இவர் இதுவரை நான்கு இடங்களில் கொள்ளையடித்திருக்கிறார்" என்றனர்.

போலீஸ் விசாரணையின்போது முரளி, ``நான் குற்றச் செயலில் ஈடுபட்ட சில நாள்களிலேயே காவல் நிலையத்தில் சிக்கிக்கொள்கிறேன். இதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை’’ என்று புலம்பியிருக்கிறார். அவர் கூறியதைப்போல போரூரில் கொள்ளையடித்துவிட்டு வெளியில் வரும்போது முரளி, ரோந்து போலீஸாரிடம் மாட்டியிருக்கிறார்.



source https://www.vikatan.com/news/crime/chennai-police-arrests-youth-over-robbery-in-porur-house

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக