Ad

புதன், 21 அக்டோபர், 2020

`ஊதியம் போதவில்லை!' - பதவி விலகுகிறாரா பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்?

தற்போது பெற்றுவரும் ஊதியத்தைக்கொண்டு குடும்பத்தை நிர்வாகிப்பது மிகவும் கடினமான விஷயமாக இருப்பதால், தனது பதவியை ராஜினாமா செய்ய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்ஸன் திட்டமிட்டிருப்பதாக அந்தநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுவருகின்றன.

அந்நாட்டு ஊடகம் ஒன்றில், பெயர் குறிப்பிட விரும்பாத இரண்டு எம்.பி-க்கள் அளித்த தகவலின் அடிப்படையில் இது தொடர்பாக செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. பிரிட்டன் பிரதமரான போரிஸ் ஜான்ஸனின் ஊதியம் சுமார் 1,50,402 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் சுமார் 1,43,29,000 ரூபாய்). இது போரிஸ் ஜான்சன் பிரதமாவதற்கு முன்னர் பத்திரிகையாளராக இருந்தபோது வாங்கிய ஊதியத்தைவிடக் குறைவு என்று கூறப்படுகிறது.

போரிஸ் ஜான்சன்

பிரதமராவதற்கு முன்னர், அந்நாட்டு நாளிதழ் ஒன்றில் தலையங்கம் எழுதும் பணியிலிருந்த போரிஸ் ஜான்சன், மாத வருமானமாக 23,000 பவுண்டுகள் பெற்றுவந்திருக்கிறார். இது, இந்திய மதிப்பில் சுமார் 21.91 லட்ச ரூபாய்.

டோரி கட்சியின் தலைவராவதற்கு முன்பு எம்.பி-யாக இருந்த போரிஸ் ஜான்சன், சுமார் 2,75,000 பவுண்டுகள் ஆண்டு வருமானமாகப் பெற்றுவந்திருக்கிறார். இதன் இந்திய மதிப்பு சுமார் 2,61,93,000 ரூபாய். இதுதவிர, மாதத்துக்கு இரண்டு மேடைப்பேச்சுகள் என 1,60,000 பவுண்டுகள் பெற்றுவந்தார். இதன் இந்திய மதிப்பு சுமார், 1,52,44,000 ரூபாய்.

Also Read: சீரான உடல்நிலை; செயற்கை சுவாசம் - ஐ.சி.யூவில் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன்!

இதைக்கொண்டு மதிப்பிடுகையில், தற்போது போரிஸ் ஜான்சன் பிரதமராகப் பெற்றுவரும் ஊதியம் மிகவும் குறைவு என பிரிட்டன் ஊடகம் செய்தி வெளியிட்டிருக்கிறது.

அவர் பதவி விலகுவதற்கான முக்கியக் காரணமாக அவரது குடும்பச் சூழலே கூறப்படுகிறது. போரிஸ் ஜான்சனுக்கு மொத்தம் ஆறு குழந்தைகள். அவர்களில் சிலர், பதின் பருவத்தை எட்டியிருப்பதால், அவர்களுக்கான வருங்காலச் செலவுகளை மேற்கொள்ளவும், விவாகரத்தான தனது முன்னாள் மனைவி மரீனா வீலருக்கு விவாகரத்து விதிமுறைகளின்படி மாதந்தோறும் குறப்பிட்ட தொகையை அனுப்ப வேண்டும் என்பதாலும் அதற்கு இந்த ஊதியம் போதாது என்று கூறப்படுகிறது. இதனால், அடுத்த ஆண்டு மே மாதவாக்கில் பிரதமர் பதவியிலிருந்து விலக போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

போரிஸ் ஜான்சன்

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை போரிஸ் ஜான்சன் பதவி விலகினால், பிரதமர் பதவிக்குத் தேர்வாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தற்போதைய எம்.பி ரிஷி சுனக்கின் பெயர் பரிசீலனையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

சமீபத்தில், கட்சிக்குள் நிகழ்த்தப்பட்ட கருத்துக்கணிப்பிலும் ரிஷி சுனக்குக்கு பெரும்பான்மையான ஆதரவு கிடைத்ததாகவும், போரிஸ் ஜான்சன், அதில் பின்னடைவைச் சந்தித்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.



source https://www.vikatan.com/government-and-politics/international/pm-boris-johnson-may-leave-office-says-british-media

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக