Ad

ஞாயிறு, 11 அக்டோபர், 2020

ஆல்ரவுண்ட் மும்பை... போராட்டமே இல்லாமல் சரணடைந்த டெல்லி! #MIvDC

2020 ஐபிஎல் சீசனின் மிகச்சிறந்த அணி டெல்லியா, மும்பையா என்கிற கேள்விகளுக்கு ஆர்பாட்டம் இல்லாத எளிய வெற்றியோடு பதில் சொல்லியிருக்கிறது மும்பை இந்தியன்ஸ். 7 போட்டிகளில் விளையாடிய 5 போட்டிகளில் வெற்றிபெற்றிருக்கும் மும்பையின் நான்காவது தொடர் வெற்றி இது. தொடர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றிபெற்றுவந்த டெல்லிக்கு இதுதான் இந்த சீசனின் இரண்டாவது தோல்வி.

அபுதாபியில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்ந்தெடுத்தார். விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் காயம் காரணமாக வெளியேபோக அவருக்குப் பதில் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி ப்ளேயிங் லெவனுக்குள் வந்தார். கேரி வந்ததால் வெளிநாட்டு ப்ளேயர்களில் ஒருவரை வெளியே எடுக்கவேண்டிய சூழல். ஷிம்ரான் ஹெட்மெயர் பென்ச்சில் உட்காரவைக்கப்பட அவருக்கு பதில் அஜிங்கியா ரஹானேவுக்கு இந்த சீசனில் முதல் வாய்ப்பு கிடைத்தது. மும்பை இந்தியன்ஸ் அணியில் எந்த மாற்றமும் இல்லை.

#MIvDC

ட்ரென்ட் போல்ட்டின் முதல் ஓவரிலேயே பவுண்டரி அடித்த பிரித்வி ஷா அடுத்த பந்திலேயே அவுட். போல்ட், பேட்டின்சன் மீண்டும் போல்ட் அடுத்து பும்ரா என முதல் நான்கு ஓவர்களை வேகப்பந்து வீச்சாளர்களிடம் கொடுத்த ரோஹித், ஐந்தாவது ஓவரை க்ருணால் பாண்டியாவிடம் கொடுத்தார். 3 பவுண்டரிகளுடன், 15 பந்துகளில் 15 ரன்கள் அடித்து நல்ல டச்சில் இருந்த ரஹானே எல்பிடள்யு முறையில் அவுட். பவர்ப்ளேவின் முடிவில் 46 ரன்கள் அடித்து இரண்டு விக்கெட்களை இழந்திருந்தது டெல்லி.

ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் ஐயர் என டெல்லியின் சீனியர் வீரர்கள் கூட்டணி போட்டார்கள். 10 ஓவர்கள் வரை நிலைத்து நின்று ஆடிய இந்தக் கூட்டணியையும் பிரித்தார் க்ருணால் பாண்டியா. 33 பந்துகளில் 42 ரன்கள் அடித்திருந்த ஷ்ரேயாஸ் அவுட். 16வது ஓவரில் ஸ்டாய்னிஸ் ரன் அவுட் ஆனபோது, 130 ரன்களுக்கு 4 விக்கெட்களை இழந்திருந்தது டெல்லி. ஆனால், இதன்பிறகு மும்பையின் மிகச்சிறந்த டெத் பெளலிங்கால், குறிப்பாக பும்ராவின் தாக்குதலால் டெல்லியால் பவுண்டரிகளே அடிக்கமுடியவில்லை. பும்ராவின் 18வது ஓவரில் வெறும் 7 ரன்கள், போல்ட்டின் 19-வது ஓவரில் 8 ரன்கள், மீண்டும் பும்ராவின் 20வது ஓவரில் 12 ரன்கள் எனக் கடைசி மூன்று ஓவர்களில் வெறும் 27 ரன்களே அடித்தது டெல்லி. பும்ராவின் நான்கு ஓவர்களில் டெல்லியால் ஒரேயொரு பவுண்டரிதான் அடிக்கமுடிந்தது. தவான் களத்தில் நின்றும் அதிரடி ஆட்டம் ஆடமுடியவில்லை. ஷிகர் தவான் 52 பந்துகளில் 69 ரன்கள் அடித்து நாட் அவுட் பேட்ஸ்மேனாக இருக்க, டெல்லி 20 ஓவர்களில் 162 ரன்கள் அடித்திருந்தது.

#MIvDC

மும்பைக்கு மிகவும் ஈசியான டார்கெட். வழக்கம்போல ரோஹித் ஷர்மாவை ஸ்பின்னர்களைக் கொண்டே தூக்கும் வியூகத்தைத்தான் ஷ்ரேயாஸும் செய்தார். முதல் ஓவர் ரபாடா, இரண்டாவது ஓவர் நார்ட்டே என வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அடுத்து மூன்றாவது ஓவர் அக்ஸர், நான்காவது ஓவர் அஷ்வின், மீண்டும் ஐந்தாவது ஓவர் அக்ஸர் என அடுத்தடுத்து ஸ்பின்னர்களையே இறக்கினார். பயந்து பயந்து ஆடிக்கொண்டிருந்த ரோஹித் ஐந்தாவது ஓவரில் அக்ஸர் பட்டேலின் பந்தில் கேட்ச் கொடுத்து அவுட். 12 பந்துகளில் 5 ரன்கள் அடித்திருந்தார் ரோஹித்.

Also Read: ஸ்டோக்ஸ் வந்தால் என்ன போனால் என்ன... திவேதியாவின் அதிரடியால் வென்ற ராஜஸ்தான்! #SRHvRR

ரோஹித் விழுந்தாலும் குவின்ட்டன் டி காக்கின் அதிரடியால் பவர்ப்ளேவின் முடிவில் 1 விக்கெட் மட்டுமே இழந்து 44 ரன்கள் அடித்திருந்தது மும்பை. டிகாக் 36 பந்துகளில் 53 ரன்கள் அடித்து தான் வந்த வேலையை சிறப்பாக முடிக்க, அடுத்து சூர்யகுமார் ஆட்டத்தை கையில் எடுத்தார். ரபாடாவின் 15-வது ஓவரில் பவுண்டரி, சிக்ஸர் என அடித்தவர் டிகாக்கைப் போலவே 32 பந்துகளில் 53 ரன்கள் அடித்து ரபடாவிடமே வீழ்ந்தார். ஹர்திக் பாண்டியா டக் அவுட். ஆனால், 28 பந்துகளில் 33 ரன்கள்தான் டார்கெட் என்பதால் மிகவும் கூலாக ஆடியது மும்பை. இஷான் கிஷன் 15 பந்துகளில் 28 ரன்கள் அடித்து அவுட் ஆக, க்ருணால் பாண்டியாவும், பொலார்டும் நின்று டெல்லியின் கதையை முடித்தார்கள்.

#MIvDC

ஷிகர் தவான் பெரிய இன்னிங்ஸ் ஆடினாலும், டெத் ஓவர்களில் அவரது தடுமாற்றம் டெல்லியின் ஒட்டுமொத்த ரன்களில் 10-20 ரன்களைக் குறைத்துவிட்டது. இந்த டெத் ஓவர் வீழ்ச்சிதான் மும்பைக்கு சாதகமாக அமைந்தது. ரபாடா, நார்ட்டே, அஷ்வின், அக்ஸர், ஸ்டாய்னிஸ் என சிறந்த பெளலர்கள் இருந்தும் டிகாக், சூர்யகுமார் என அடுத்தடுத்த பேட்ஸ்மேன்களை டெல்லி அரைசதம் அடிக்கவிட்டதால் போராட்டமே இல்லாமல் எளிதாக வென்றது மும்பை.

#MIvDC
மும்பை, டெல்லி என இரு அணிகளுமே முதல் சுற்று லீக் போட்டிகளை ஆடிமுடித்து இரு அணிகளுமே 10 புள்ளிகளுடன் இருக்கின்றன. ரன்ரேட் அடிப்படையில் மும்பை முதலிடத்திலும், டெல்லி இரண்டாவது இடத்திலும் இருக்கின்றன.

இன்று கொல்கத்தாவுக்கும், பெங்களூருவுக்கும் இடையே நடைபெறும் போட்டிதான் முதல் சுற்று லீகின் கடைசிப்போட்டி. இதில் வெற்றிபெறும் அணியும் மும்பை, டெல்லியைப்போலவே 10 புள்ளிகளைப் பெறும். இதனால் சென்னை தொடர்ந்து வெற்றியே பெற்றாலும் இந்த முறை ப்ளே ஆஃப் வாய்ப்பு என்பது கனவுதான்.



source https://sports.vikatan.com/ipl/ipl-2020-mumbai-indians-on-top-as-it-defeats-delhi-capitals

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக