Ad

வெள்ளி, 9 அக்டோபர், 2020

தோனியின் சர்ப்ரைஸ் பேக்கேஜ் கோலிக்குப் பரிசா, பாடமா?! #CSKvRCB #Preview

முதல் சுற்றின் கடைசி லீக் போட்டியில் இன்று இரவு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸை சந்திக்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ். பெங்களூருவுக்கு எதிரானப் போட்டிகளில் எப்போதும் சென்னைதான் வின்னர் என்கிற கணிப்புகள் இருக்கும். இதுவரை இரு அணிகளும் விளையாடியிருக்கும் 25 போட்டிகளில் 16 போட்டிகளில் சென்னையே வெற்றிபெற்றிருக்கிறது. ஆனால், இன்று பெங்களூருவின் கையே ஓங்கியிருக்கும் என்கிற கணிப்புகளுடன் கோலியின் லெவனோடு மோதுகிறது சென்னை சூப்பர் கிங்ஸ்!

பெங்களூரு இதுவரை விளையாடியிருக்கும் 5 போட்டிகளில் டெல்லி, பஞ்சாப் என இரண்டு அணிகளுக்கு எதிராக தோற்று ஹைதராபாத், மும்பை, ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக வெற்றிபெற்றிருக்கிறது. சென்னை அளவுக்குப் பிரச்னைகள் இல்லையென்றாலும் பெங்களூருவும் இன்னும் ஒரு முழுமைக்கு வரவில்லை.

ஆரோன் ஃபின்ச், தேவ்தத் படிக்கல், விராட் கோலி, ஏபிடி என முதல் நான்கு பேட்ஸ்மேன்கள் தரமாக இருந்தாலும் கோலி இன்னும் தன்னுடைய வழக்கமான ஆட்டத்தை ஆடவில்லை. ஃபின்ச்சின் ஃபார்மும் ஊசலாடிக்கொண்டுதான் இருக்கிறது. நான்கு விக்கெட்டுகள் போனால் மிடில் ஆர்டரில் சரிவை சரிகட்டும் பேட்ஸ்மேன்கள் பெங்களூருவில் இல்லை. மொயின் அலிக்கு பதிலாக இன்றையப் போட்டியில் தென்னாப்பிரிக்காவின் கிறிஸ் மோரிஸ் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். வேகப்பந்துவீச்சாளரும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனுமான மோரிஸை அதிகமாகவே எதிர்பார்த்து காத்திருக்கிறார் கோலி. மோரிஸுக்குப் பிறகு ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், இசுரு உடனா, சைனி, முகமது சிராஜ், சஹால் என்பதுதான் பெங்களூருவின் ப்ளேயிங் லெவனாக இருக்கும்.

தோனி

பெங்களூருவின் மிடில் ஆர்டரில்தான் பிரச்னை. ஆனால், சென்னையின் பேட்டிங் ஆர்டரிலேயே பிரச்னைதான். சென்னையின் தோல்விகளுக்கு முக்கியமான காரணமாக இருப்பது பேட்ஸ்மேன்கள் சுத்தமாக ஃபார்மில் இல்லாமல் இருப்பது. டுப்ளெஸ்ஸி தவிர வேறு யாரிடமும் நிலைத்தன்மை இல்லை. வாட்சன் கடைசியாக நடந்த இரண்டு போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் அடித்திருந்தாலும் அவர் எப்போது வேண்டுமானாலும் சொதப்பலாம் என்கிற வகையறாதான்.

ராயுடு மும்பைக்கு எதிராக ஆடியதோடு சரி... இடையில் ஓய்வில் இருந்தவர் மீண்டு வந்து இன்னும் பவர்ஃபுல் இன்னிங்ஸ் ஆடவில்லை. தோனியின் தடுமாற்றம் இந்த சீசனில் அதிகமாகவே இருகிறது. கேதர் ஜாதவ் எனும் ஒரு பேட்ஸ்மேன் அணிக்குள் ஏன் இருக்கிறார் என்கிற ரேஞ்சில் சென்னையின் பேட்டிங் ஆர்டர் இருக்கிறது. ஆனால், சென்னை எப்போது வேண்டுமானாலும் கம்பேக் கொடுக்கக்கூடிய அணி. அதற்கு தோனி சின்ன சின்ன மாற்றங்கள் செய்தால்போதும்.

கேதர் ஜாதவுக்கு பதிலாக ஆடக்கூடிய, தோனி எதிர்பார்க்கும் திறமைகளுடன்கூடிய மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் சென்னை அணியில் இல்லை. ஜெகதீசனுக்கு முக்கியமான கட்டத்தில் தோனி வாய்ப்பு வழங்குவாரா என்பதும் சந்தேகம்தான். அதனால் இன்றைய போட்டியில் மீண்டும் கேதர் ஜாதவே தொடரலாம் அல்லது அவருக்கு பதிலாக இன்னொரு மஹாராஷ்டிர வீரரான ருத்துராஜ் கெய்க்வாட் ப்ளேயிங் லெவனில் சேர்க்கப்படலாம். அப்படி ருத்துராஜ் வந்தால் அவருக்கு வழங்கப்படும் மூன்றாவது வாய்ப்பு இது. வாட்சன் - டுப்ளெஸ்ஸி ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் சூடுபிடிக்க ஆரம்பித்திருப்பதால் 1 டவுன் பேட்ஸ்மேனாக ருத்துராஜ் இறக்கப்படலாம். நான்காவது இடத்தில் ராயுடு, ஐந்தாவது இடத்தில் தோனி என்பதாக சென்னையின் பேட்டிங் ஆர்டர் இருக்கும்.

ஜெகதீசன், ஜடேஜா

சென்னை அணியில், ரவீந்திர ஜடேஜாவின் இடமும் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியதே. ஒரு போட்டியில் அரைசதம் அடித்திருந்தாலுமே ஜடேஜாவுக்கு இந்த சீசன் சிறப்பாக இல்லை. எப்போதுமே பார்ட்னர்ஷிப்களை உடைக்க பெளலிங்கில் ஜடேஜா பயன்படுவார். ஆனால், இப்போது அவரின் பெளலிங்கும் பெரிதாக கைகொடுக்கவில்லை. கொல்கத்தாவுக்கு எதிரானப் போட்டியில் அவரை பெளலிங்கில் தோனி பயன்படுத்தவேயில்லை. கடந்த மேட்ச்சில் ஒரு கேட்சையும் கோட்டைவிட்டார். ஜடேஜா தன்னுடடைய முழுமையான பங்களிப்பைக் கொடுத்தால் மட்டுமே அவரும் தப்பிப்பார், சென்னையும் தப்பிக்கும்.

முதல் சுற்றின் கடைசிப்போட்டி என்பதால் இன்றையப்போட்டி, தான் அதிக நம்பிக்கைக்கொண்டிருக்கும் வீரர்களுக்கு தோனி வழங்கும் கடைசி வாய்ப்பாக இருக்கும். அதனால், கேதர் இன்றைய ஆட்டத்தில் இருக்கமாட்டார் என்று உறுதியாக சொல்லமுடியாது. ஆனால், இன்றைய போட்டியிலும் பியுஷ் சாவ்லாவுக்கு பதிலாக கார்ன் ஷர்மாவே தொடருவார் என எதிர்பார்க்கலாம்.

பெங்களூரு - சென்னை போட்டி துபாயில் நடக்க இருக்கிறது. இதுவரை விளையாடியிருக்கும் 6 போட்டிகளில் 3 போட்டிகளை துபாயில்தான் விளையாடியிருக்கிறது சென்னை. இதில் இரண்டு போட்டிகளில் தோல்வியடைந்திருக்கிறது. பஞ்சாப்புக்கு எதிராக மட்டும் விக்கெட்டையே இழக்காமல் 178 ரன்களை சேஸ் செய்து வெற்றிபெற்றது. ஒட்டுமொத்தமாக துபாயில் இதுவரை 10 போட்டிகள் நடைபெற்றிருக்கின்றன. இரண்டு போட்டிகள் டை-யில் முடிந்தாலும் முதலில் பேட்டிங் செய்த அணிகளே ஒன்பது போட்டிகளிலும் வெற்றிபெற்றிருக்கிறது. இங்கு சேஸ் செய்து வெற்றிபெற்றிருக்கும் ஒரே அணி சென்னை மட்டுமே.

கோலி

இதுவரை 2 போட்டிகளில் சேஸ் செய்து பெங்களூரு வெற்றிபெற்றிருந்தாலும் சென்னைக்கு எதிராக முதலில் பேட்டிங் ஆடவே கோலி விரும்புவார். தோனியும் டாஸ் வென்றால் முதல் பேட்டிங்கையே தேர்ந்தெடுப்பார் என நம்பலாம். பெளலிங்கைப் பொறுத்தவரை பெங்களூருவைவிட சென்னைப் பரவாயில்லை ரகம் என்பது சிஎஸ்கே-வுக்கு கொஞ்சம் ஆறுதலான விஷயம்.

சென்னை எப்போதும் தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வரும் அணி. இந்தமுறையும் மீண்டு எழுவார்கள் என நம்புவோம்!



source https://sports.vikatan.com/ipl/dhoni-or-kohli-who-will-win-the-battle-today

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக